இன்று அதிகாலை தெருவில், அநாதையாக ஒரு பசு மாடு கன்று ஈனும் சம்பவத்தைப் பார்க்க நேர்ந்து மனம் பரிதவித்துவிட்டுப் போய்விட்டது. இது நடந்தது திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் கிராமத்தில்!
மற்ற மாவட்டங்களில் எப்படி நிலைமை இருக்கிறது என்று தெரியவில்லை. நெல்லையில் கடந்த பத்திருபது வருடங்களாக, பொறுப்பில்லாமல் மாடுகளை இப்படித் தெருவில் விட்டு, வளர்க்கும் போக்கு அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது. அது எதை உண்கிறது, இரவில் எங்கு படுக்கிறது, போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்கிறதா என்ற எந்தக் கவலையும் இப்படி மாடு வளர்ப்போருக்கு இல்லை.
மாடுகளை குடும்பத்தின் உறுப்பினர்களாகப் போற்றிப் பேணி வளர்க்கும் பண்பாடு தமிழர்களுடையது. 2000க்கு முன்பாக மாடுகளை வீட்டின் செல்வமாகப் பார்க்கும் வழக்கமிருந்தது. எப்போது இப்படி, அவற்றுக்கு ஒரு தங்குமிடமும், தீவனமும் தந்து, பராமரிக்கும் வழக்கம் மெல்ல மெல்லக் கரைந்தது என்று தெரியவில்லை. இன்றைய பொருளாதாரச் சூழல், இடவசதி போன்ற சிக்கல்கள், முன்பு போல மாடுகளை சிறப்பாகப் பராமரிக்கும் நிலையை சற்று மாற்றியிருக்கலாம்தான்! அதை மேய்ச்சலுக்குக் கொண்டு போவது குறைந்திருக்கலாம், இரவுகளில் கட்டிப் போடும் நிலை குறைந்திருக்கலாம். ஆனால், இப்படி நிறை சூலுற்றிருக்கும் ஒரு மாட்டைக் கூட கவனிக்காமல் தெருவில் விடும் மனநிலை எப்படி வாய்க்கிறது என்பதுதான் நமக்குப் புரியவில்லை!
மாடுகள் பிரசவிப்பது என்பது உணர்வுபூர்வமான ஒரு சம்பவம். அதற்குத் தேவையான உதவிகள், பராமரிப்புகள், தண்ணீர், தீவன வசதிகளை அருகிலிருந்து செய்வது அவசியம்! நாங்கள் கண்ட சம்பவத்தில், உடனடியாக உள்ளூர் வாட்சப் குழுக்களில் செய்தியைப் பகிர்ந்து, மாட்டு உரிமையாளரைப் பிடித்து மாட்டை ஒப்படைத்துவிட்டோம்! ஆனால் இந்த நிலை எப்போது மாறும்?
அருகிலிருக்கும் ஒரு ஊரில், இரவு நேரங்களில் நடுச்சாலையில் மாடுகள் படுத்துக் கொண்டிருக்கும், நின்று கொண்டிருக்கும்! வாகன ஒலிப்பான்களைக் கண்டுகொள்ளாமல், அசையாமல் நிற்கும் நிலைக்கு அவை வந்துவிட்டிருக்கின்றன. எங்கள் வீட்டுக்குழந்தை ஒருவன், அந்தக் கிராமத்தைக் குறிப்பிடுகையில், பெயர் ஞாபகத்தில் வராவிட்டால் ‘மாடுகள் சிலையா நிக்கற ஊரு’ என்று குறிப்பிடுவான். அந்த அளவுக்கு தெருவில் விட்டு மாடுகளை வளர்க்கும் இந்த நிலை மோசமடைந்திருக்கிறது.
மாடு வளர்ப்போர் இன்னும் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்! அரசாங்கமும் இதில் தலையிட்டு, அவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பது நம் விருப்பம்!