தமிழகத்தில் மட்டும் மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் வசிக்கின்றன. கடந்த காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் தொடர் மழையால், யானைகள் சாப்பிட போதுமான புல், இலை, தழைகள் செழிப்பாக வளரும். இதன் காரணமாக, யானைகளுக்கு நல்ல உணவு கிடைத்து வந்தது. ஆனால், கால நிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் எல்லாக் காலக்கட்டத்திலும் மழை பொழிவதில்லை. நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் மட்டுமே தமிழகத்தில் எல்லா காலத்திலும் மழை பெய்கிறது.
யானைகளுக்கு சத்தான உணவு முக்கியம். இதற்காக, அவை இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். தற்போது, காட்டுக்குள் உணவுப் பற்றாக்குறை காரணமாக ஊருக்குள் யானைகள் புகும் சம்பவங்களும் அதிகாரித்து விட்டன. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உணவு தேவை காரணமாக குப்பையில் கிடக்கும் கழிவுகளை யானைகள் சாப்பிடுவதை நாம் செய்திகளில் காண்பதுண்டு.
தாவரப் பட்சிணியான யானைகளின் நிலை இதுவென்றால், அசைவம் சாப்பிடும் மற்ற விலங்குகளும் இப்போது குப்பைகளை சாப்பிட தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான, வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. வனத்துறை அதிகாரியான பிரவீன் கஸ்வான் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில், 'என்ன ஒரு சோகமான காட்சி, நாம் வீசும் குப்பைகள் எப்படி வனவிலங்ககளுக்கு வில்லனாக மாறுகின்றன பாருங்கள்!" என்கிற தலைப்பில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறுத்தைப்புலி ஒன்று வயிற்றுப்பசி காரணமாக குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கசடுகளை எடுத்து சாப்பிடுகிறது. 17 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ நெட்டிசன்களை கலங்கடித்துவிட்டது. இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் மவுன்ட் அபு வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. என்னதான் அசைவ பட்சிணியாக இருந்தாலும், அதற்கான உணவு கிடைக்காமல் போவது நியாயமே இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிறுத்தைப்புலி மாமிச உண்ணி என்பதால் பெரும்பாலும் இம்பாலா மான் போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடுகின்றன. மான்கள் அதிகம் வாழும் பகுதியில் சிறுத்தைப்புலிகளும் அதிகம் காணப்படும். பறவைகள், முயல்கள், குரங்குகள் போன்றவற்றையும் சிறுத்தைப்புலிகள் உண்ணும். சில சமயங்களில் உணவுப் பற்றாக்குறை காரணமாக பெரிய சிறுத்தைப்புலி சிறிய சிறுத்தைப்புலியை அடித்து கொன்று சாப்பிடுவதும் உண்டு. சிறுத்தைப்புலிகள் அசைவத்தில் எது கிடைத்தாலும் சாப்பிடும். சிறிய முதலைகளை கூட வேட்டையாடி விடும்.
ஆனால், காட்டில் வேட்டையாட பிற விலங்குகள் கிடைக்காத பட்சத்தில், வாடிப் போன சிறுத்தைப்புலி குப்பைகளை சாப்பிடத் தொடங்கியுள்ளதுதான் வன ஆர்வலர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகளின் உணவு பழக்க வழக்கம் மாறுவது உண்மையில் மோசமான ஒரு நிலையாகும். எனவே, வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உறுதியான கடுமையான நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரவுகள்படி , இந்தியாவில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 3,907 சிறுத்தைப்புலிகள் வசிக்கின்றன. அடுத்து மகாராஸ்டிராவில் 1,985 கர்நாடகத்தில் 1, 879 தமிழகத்தில் 1,070 சிறுத்தைப்புலிகள் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 13, 874 சிறுத்தைப்புலிகள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறுத்தைப்புலிகளை சமைத்து சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவமும் கடந்த 2013ம் ஆண்டு திருப்பத்தூரில் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், வட இந்தியாவில் ஒரு இளைஞர் கரடிக்கு குளிர்பானம் கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டார். மனிதர்கள் சாப்பிடும் குளிர்பானங்கள் வனவிலங்குகளின் உடலில் எளிதாக பாதிப்பை ஏற்படுத்தும் செயல். ரீல்ஸ் மோகத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாய்வது காலத்தின் தேவையாக உள்ளது.