தீபாவளிக்குப் பொது விடுமுறை: கலிபோர்னியா இந்தியர்கள் மகிழ்ச்சி!

இந்தியர்கள் அதிகம் வாழும் அமெரிக்க மாகாணத்தில் இனி தீபாவளி பொது விடுமுறை
தீபாவளிக்குப் பொது விடுமுறை:  கலிபோர்னியா இந்தியர்கள் மகிழ்ச்சி!
PaTrY
Published on

உலகமெங்கும் வாழும் இந்திய மக்கள், இலங்கை, மலேசிய, சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தீபாவளிப் பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தீபாவளிப் பண்டிகைக்கு பொது விடுமுறையும் உண்டு. அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் வசித்தாலும் இதுவரை தீபாவளிப் பண்டிகைக்கு அந்த நாட்டில் பொது விடுமுறை அளிக்கப்படவில்லை. ஆனால், முன்னதாக இரு மாகாணங்கள் மட்டும் தீபாவளிக்கு பொது விடுமுறை அளித்திருந்தன .

கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பென்சில்வேனியா மாகாணம் முதன் முதலாக தீபாவளிக்கு பொது விடுமுறை அளித்தது. தொடர்ந்து, கனெக்டிகட் மாகாணம் தீபாவளியை பொதுவிடுமுறையாக்கியது . நியூயார்க் நகரில் தீபாவளி தினத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணமான கலிபோர்னியாவில் மட்டும் தீபாவளிப் பண்டிகைக்கு இதுவரை, பொதுவிடுமுறையாக அறிவிக்கப்படவில்லை.

கலிபோர்னியா மக்கள் தொகையில் இந்திய - அமெரிக்க மக்கள் மட்டும் 20 சதவிகிதம் பேர் வாழ்கின்றனர். இது, அமெரிக்காவின் வேறு எந்த மாகாணத்தையும் விடவும் அதிகம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம், ஹாலிவுட், டிஸ்னி, கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள், ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம் போன்றவை இந்த மாகாணத்தின் அடையாளங்கள். மென்பொருள் தலைநகரமாக பார்க்கப்படும் சிலிக்கான் வேலி இங்குதான் உள்ளது. சுந்தர்பிச்சை முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை இங்குதான் வசிக்கின்றனர். மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த மாகாணம் என்பதால் இந்தியர்களும் இங்கு லட்சக்கணக்கில் சுபிட்சமாக வாழ்கின்றனர். இதனால், பல ஆண்டுக் காலமாக அந்த மாகாணத்தில் தீபவாளிக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டுமென இந்தியர்கள் கோரி வந்தனர். தற்போது, அவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் கலிபோர்னியா மாகாண எம்.பி ஆஷ் கல்ரா, தர்ஷனா பட்டேல் ஆகியோர் தீபாவளிக்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமென கூட்டாக ஒரு தீர்மானத்தை அவையில் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கலிபோர்னியா மாகாண ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் ஆளுநர் கெவின்நியுசாம் நேற்று (அக்.7) கையொப்பமிட்டார். இதையடுத்து, தீபாவளிக்கு பொது விடுமுறை அளித்த 3வது அமெரிக்கா மாகாணமாக கலிபோர்னியா மாறியது.

தொடர்ந்து, இது ஒரு வரலாற்று நிகழ்வு என இந்திய அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்திய திசபுரா அமைப்பின் தலைவர் ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில், 'கலிபோர்னியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உதவிய இந்தியர்களை இந்த மாகாண அரசு கௌரவித்துள்ளது. அவையில் தீர்மானம் கொண்டு வந்த இருவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளிப் பண்டிகைக்கு வேறு சில நாடுகள் பொது விடுமுறை அளித்துள்ளன. நேபாளம், சிங்கப்பூர், மலேசியா, பிஜி, இலங்கை, கயானா, டிரினிடாட், சூரிநாம், மியான்மர் போன்ற நாடுகளில் தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறைதான். இந்த நாடுகளில் இந்திய வம்சாவளி மக்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாவில் விடுமுறை இல்லையென்றாலும் தீபவாளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

Puthuyugam
www.puthuyugam.com