மொத்தத் தமிழ்நாடாக படிப்பில், வேலை வாய்ப்பில், பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று பேசி ஒரு சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக, நமது சமூக ஒழுங்கு கேள்விக்குறியாகியிருக்கிறது.
இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பாவோ எங்கும் மக்கள் ஒரே போலத்தான் இயங்குவார்கள். ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரின் அறிவு முதிர்ச்சி (Maturity) என்பது குறைவாகத்தான் இருக்கும். வயது முதிர்ச்சியும் அறிவு முதிர்ச்சிக்கு அவசியமான ஒன்றுதான்.16 வயது, 17 வயதுக்காரர்களுக்கு ஏன் திருமணம் மறுக்கப்படுகிறது? ஏன் சில சினிமாக்கள் மறுக்கப்படுகின்றன? ஏன் ஓட்டுரிமை மறுக்கப்படுகிறது? ஒவ்வொரு வயதுக்கும் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் இருப்பதாக ஒரு கணிப்பு சொல்லப்படுகிறது. அவர்களுள் 1 சதவீத முதிர்ச்சிக் குறைவு என்று வாதத்துக்காக, மிகக்குறைந்த பட்சமாக எடுத்துக் கொண்டாலுமே நம்மிடையே 12 வயதிலிருந்து 22 வயது வரையான நபர்களே 10 லட்சத்துக்கும் மேலாக இருக்கக்கூடும். இவர்கள்தான் மிக எளிமையாக திரைக்கவர்ச்சிக்கும், உண்மை, பொய்களை பிரித்தறியத் தெரியாத உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுகளுக்கும் இலக்காகுபவர்கள்.
ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மிகப்பிரபலமான நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதோ, ஆரம்பிக்க நினைப்பதோ நிச்சயம் தவறானதல்ல, சொல்லப்போனால், வரவேற்கப்பட வேண்டியது. அதனால் மிகப்பரவலாக மக்கள் அரசியல் மயப்படுவது நடக்கும். அரசியலில் மோனோப்போலிகளின் உருவாக்கம் தடுக்கப்படும். ஆனால், அப்படி அவர்கள் ரசிகர் படையை, தொண்டர் படையாகக் கற்பனை செய்துகொள்வதுதான் அவர்களையும், நம்மையும் சிக்கல்களுக்கு ஆளாக்குகிறது.
அப்படியானால் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்குமான வேறுபாடுகள்தான் என்ன?
கொள்கைகள்:
தங்கள் தலைவரின் அல்லது கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் ஆகியவற்றைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் தொண்டர்கள். தங்கள் கட்சி மற்றும் தலைவர் அதிகாரத்துக்கு வரவேண்டும் எனும் அடிப்படைச் சிந்தனை, அதற்கான ஆதாரமே மக்கள்தான் எனும் அடிப்படைப் புரிதல் அவர்களுக்கு இருக்கும். அதனால் பொதுமக்களுக்கோ, அவர்களின் உடமைகளுக்கோ ஒரு சிறு பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது எனும் விசயத்துக்கு முன்னுரிமை தருவார்கள்.
ரசிகர்கள் இதற்கு நேர்மாறானவர்கள். கொள்கைகள், சித்தாந்தங்கள் கற்றுக்கொடுக்கப்படும் வரை, அதில் அவர்கள் தேர்ச்சியுறும்வரை ரசிகர்களாகவே மதிக்கப்படுவார்கள். தங்கள் தலைவரின் சினிமாக்கள் வெல்வதைப் போல கட்சியும் வெல்லும், இதிலென்ன சந்தேகம் எனும் தட்டையான புரிதலில் இருப்பார்கள். தலைவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதும், அவரை நேரில், முடிந்தால் அருகில் பார்ப்பதும் மட்டும்தான் இவர்களின் இலக்கு. பொதுமக்களுக்கு நம் மீதான மதிப்புதான் முக்கியம் என்ற புரிதலில்லாமல் அவர்களையே இடையூறுகளுக்கு ஆளாக்குவார்கள்.
பொறுப்பு மற்றும் செயல்பாடு :
தேர்தல் வேலைகள்,மக்கள் சந்திப்புகள் போன்ற செயல்பாடுகளில் ஏற்பாட்டாளர்களின் திட்டமிடுதலுக்கு உறுதுணையாக இருப்பார்கள் தொண்டர்கள். தலைவர் வருவாரா, என்ன பேசுவார், அவரோடு நாம் போட்டோ எடுத்துக்கொள்வோமா, அவர் கண்ணில் நாம் படுவோமா எனும் கவலைகளின்றி, நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் திட்டமிடல் சரியாக நடக்க, தமக்கு வழங்கப்பட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஒலியமைப்பு வேலை தரப்பட்டுள்ளதா, மக்களை ஒழுங்குபடுத்தும் பணி தரப்பட்டுள்ளதா, மக்கள் தொடர்பு தரப்பட்டுள்ளதா, உபசரிக்கும் பணி தரப்பட்டுள்ளதா.. எதுவாக இருந்தாலும் அந்தப் பணி சரியாக நடப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதை நல்லபடியாக முடித்து தமக்கு மேல் உள்ளவர்களின் பாராட்டுகளைப் பெறுவது மட்டுமே அவர்களது நோக்கமாக இருக்கும்.
ரசிகர்களுக்கோ எந்தப் பொறுப்புமிருப்பதில்லை. இடம் கொள்ளாத அளவுக்கு பேனர்களை வைத்தோமா, அதில் நமது படம் இடம் பெற்றிருக்கிறதா, பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தோமா, தலைவரின் படப் பாடல்களைப் போட்டு உற்சாகமாக வைப் செய்தோமா, தலைவர் வந்தால், தடுப்புகளை மீறி, ஏற்பாடுகளை இடைஞ்சல் செய்துகொண்டு அவர் மீது பாய்ந்து போட்டோ எடுக்க முயற்சி செய்தோமா என்று அவர்களின் செயல்பாடுகள் எல்லாம் சுயநலமாகவும், பொறுப்பற்றதாகவுமே இருக்கும்.
பாதுகாப்பு :
காசுக்காக கூடினாலும் சரி, கொள்கைக்காகக் கூடினாலும் சரி தொண்டர்களிடையே ஓர் அடிப்படை ஒழுங்கு இருக்கும். கூட்டம், மாநாடு, பேரணி, பிரச்சாரம் முதலானவற்றுக்கான பொருள் அறிந்தவர்கள். தம்மையும், தம் பொறுப்பிலிருப்பவர்கள், தம்முடன் வந்தவர்கள் அத்தனை பேருக்குமான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுவார்கள். அவர்களுக்கான குறைந்தபட்ச உணவு, தண்ணீர், மருத்துவ ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வார்கள். காவல்துறையோடு முடிந்தவரை இணக்கமாகச் செயல்படுவார்கள். ஆளும்கட்சியாக இருப்பினும் காவல்துறைக்கான மரியாதையைத் தருவார்கள். ஏனெனில் ஆளும்கட்சி எனும் நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம், போலீஸ் அப்போதும் போலீசாக இருப்பார்கள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியும்.
ஆனால், ரசிகர்கள் தலைவரைப் பார்ப்பதற்காக பாதுகாப்பை மீறி எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். 80 கிமீ வேகத்தில் செல்லும் பஸ்ஸுக்கு இணையான வேகத்தில், அதன் மிக அருகே அதன் கூடவே செல்வார்கள். இத்தனை பேரின் பளுவைத் தாங்குமா என்ற சிந்தனையில்லாமல் அருகிலிருக்கும் மரங்கள், பேனர்கள், மின் கம்பங்களில் ஏறுவார்கள். தனியார் சொத்துக்கள் என்ற உணர்வின்றி வீடுகள், கடைகள் மீதேறி சேதாரங்களை ஏற்படுத்துவார்கள், அவர்களும் ஆபத்துக்குள்ளாவார்கள். காவல்துறை ஆளும் கட்சிக்கு விதிக்கக்கூடிய அதே நியாயமான கட்டுப்பாடுகளை விதித்தால் கூட, ‘என்ன பயந்துட்டியா குமாரு’ என்ற தொனியில் கட்டுப்பட மறுப்பார்கள்.
எந்தக் கட்சியானாலும், எந்தத் தலைவரானாலும், ரசிகர்களை தொண்டர்களாக மேம்படுத்துவதும், தொண்டர்களை அடுத்தத் தலைமுறையின் தலைவர்களாக உயர்த்தும் நோக்கத்தில் செயல்படுவதும்தான் இப்படியான விபத்துகள் இனிமேல் நேராமல் தவிர்க்கும்! மேலும் அதுவே அவர்களுக்கும், சமூகத்துக்கும் நன்மை பயக்கும்!