கல்வியில் சிறக்கும் தமிழ்நாடு

இந்தியாவுக்குள் தமிழ்நாடு எந்த சந்தேகமுமின்றி உலகின் ‘எஞ்சினியரிங் ஹப்’ (Engineering Hub) என அழைக்கப்படும் நிலைமையில் இருக்கிறது.
Students Happily Reading
Students Happily Reading AI GENERATED
Published on

கொஞ்ச காலம் முன்பு வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிக எஞ்சினியரிங் பட்டதாரிகள் தயாராகும் நாடுகளாக ரஷ்யாவும், அமெரிக்காவும் இருந்தன. அந்த நிலையை மாற்றி சமீப ஆண்டுகளாக சீனாவும், இந்தியாவும் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. இப்போது சீனாவையும் தாண்டி இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் எஞ்சினியரிங்கின் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். இவர்கள் வேலை வாய்ப்புகளுக்காக இந்தியாவெங்கும், உலகெங்கும் பரவலாகப் பயணித்து கொண்டுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டு எஞ்சினியரிங் மாணவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய பெரு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் கோலோச்சி வருவது நாமறிந்ததே! அடுத்த சில பத்தாண்டுகளில் இன்னும் இது இன்னும் பல மடங்காகும் என நம்பலாம். நம்மவர்கள் உலகை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவார்கள்.

இந்த நிலைக்கு நம்மைக் கொண்டுவந்த திராவிடக்கட்சிகள் நமது நன்றிக்கும், அன்புக்கும் உரித்தானவை!

கடந்த 25ம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். இது தமிழ்நாட்டு அரசின் ‘தமிழ்ப்புதல்வன் -புதுமைப்பெண்’, ’காலை உணவுத் திட்டம்’, ’நான் முதல்வன்’, போன்ற திட்டங்களின் பயனாளிகள், அவற்றின் மூலம் சாதித்தவர்கள், விளையாட்டில் சாதித்தவர்கள் என அனைவரின் கூடுகையாக, பாராட்டு விழாவாக அமைந்தது. மாணவர்கள் பலருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு - Poster
கல்வியில் சிறந்த தமிழ்நாடு - PosterYoutube Thumbnail

அதில் திரைத்துறைப் பிரபலங்கள் சிலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தியாகராஜன் குமாரராஜா பேசுகையில், ’பிற சமூகக் காரணங்களால், உருவாகியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் ஆயுதம் கல்வி. துரோணாச்சாரியார், கிருபாச்சாரியர் தொடங்கி இன்றைய ராஜகோபாலச்சாரியார் வரை சாமானியனுக்கான கல்வியை மறுக்கும் சக்திகள் எவை என்றும், சமத்துவத்தையும், சமூகநீதியையும் நிலை நிறுத்தி அழிக்க முடியாத செல்வமான கல்வியை நமக்குத் தரப் போராடும் சக்திகள் எவை என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்’ என்று தம் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

சிவகார்த்திகேயன் பேசுகையில், தமது சினிமா, மீடியாக் கனவுகள், குடும்பச் சூழலுக்கும் ஊடாக தாம் இரண்டு பட்டப்படிப்புகளைப் படித்து முடித்ததைக் குறிப்பிட்டார். ’சினிமாவும், மீடியாவும் கைவிட்டாலும், நான் கற்றக் கல்வி என்னைக் கைவிடாது’ என்று குறிப்பிட்டது சிறப்பாக இருந்தது. வெற்றிமாறன் பேசுகையில், ‘திட்டமிட்டு நம்மிடமிருந்து கல்வியைப் பறிக்கும் வேலையைத் திட்டமிட்டே நம் அரசு முறியடித்துக் கொண்டிருக்கிறது, இது ஒரு சாதனை’ என்று பாராட்டினார். மாரி செல்வராஜ் பேசுகையில், தாம் காலை உணவில்லாமல் பள்ளிக்குச் சென்ற நாட்களை நினைவுகூர்ந்து, காலை உணவின் முக்கியத்துவத்தை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து, ‘சச்சின் படித்தாரா? என்று கேட்டு படிக்காமல் முன்னேறிய ஓரிருவரைக் காட்டி படிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் செய்வார்கள். நம்பிவிடாதீர்கள்’ என்று ஆணித்தரமாக அடித்துச் சொன்னார். ஆம், கலைஞர், காமராசர், கமல்ஹாசன் போன்ற படிக்காமல் முன்னேறிய ஓரிருவரைக் காரணம் காட்டி கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் ஒரு கும்பல் எப்போதும் இங்கே இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், விதிவிலக்குகள் எப்போதும் விதிகளாகிவிடாது. லட்சங்களில் ஒருவர் படிக்காது முன்னேறிவிடலாம். ஆனால், லட்சம் பேருக்கும் முன்னேறும் வாய்ப்புகளையும், நம்பிக்கையையும் உருவாக்கித் தருவது கல்வி மட்டுமே. கல்வியில் தமிழ்நாடு சாதிக்கட்டும், வருங்காலம் நமதாகும்!

Puthuyugam
www.puthuyugam.com