அமெரிக்காவில் அடிக்கடி இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள பாப்ஸ் அமைப்பு சார்பில் நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீது கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய அரசு இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. "இது போன்ற இழிவான செயல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உள்ளூர் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழிபாட்டுத் தலங்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டது. ஆனால், கடந்த 12 மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் நான்கு முறை இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்தியப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு, ஹெச்1 பி (H1B) விசா பெற கட்டண உயர்வு என்று அதிக நெருக்கடிகளை டிரம்ப் அரசு இந்தியர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், டெக்ஸாஸ் மாகாண குடியரசுக் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வீடியோவால் மீண்டும் அங்கு சர்ச்சை வெடித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சுகர்லேண்ட் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஹனுமனுக்கு 90 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் 3வது பெரிய சிலை ஆகும். கடந்த 2024ம் ஆண்டு சின்ன ஜீயர் சுவாமியால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போதெல்லாம், அமைதியாக இருந்த குடியரசுக் கட்சி இப்போது, ஹனுமன் சிலையை அமெரிக்காவில் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெக்ஸாஸ் மாகாண குடியரசுக் கட்சித் தலைவர் அலெக்ஸாண்டர் டங்கன் அனுமன் சிலையின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கூறியிருப்பதாவது, "போலியான கடவுள்களை நமது மண்ணில் ஏன் அனுமதிக்க வேண்டும். டெக்ஸாஸில் இந்துக் கடவுளுக்கு சிலை தேவையா? நாம் கிறிஸ்தவ நாடு என்பதை மறந்து விட வேண்டாம். என்னை தவிர வேறு யாரும் கடவுள் இல்லை . வானத்திலோ, பூமியிலோ, கடலிலோ உள்ள எந்தப் பொருளையோ அல்லது உருவத்தையோ நீ வணங்க கூடாது என்றும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது " என கூறியுள்ளார்".
மேலும்,"கடவுள் பற்றிய கருத்தை பொய்யாக அவர்கள் மாற்றினர்கள். கடவுளை வணங்குவதற்கு பதிலாக அவர் படைத்தவற்றை வணங்குகிறார்கள் "என்று மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
டங்கனின் இந்தக் கருத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து அமெரிக்க அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து மத மக்களும் சுதந்திரத்துடன் வாழ அமெரிக்க அரசியல் அமைப்பு உரிமை வழங்கியுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட டங்கன் மீது குடியரசுக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என்று கேட்டுக் கொண்டுள்ளது.
பல அமெரிக்கர்களும் கூட டங்கனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜோர்டான் கிரவுடன் என்பவர் டங்கனின் பதிவில் கூறியிருப்பதாவது, "நீங்கள் இந்து இல்லை என்பதற்காகவே அது போலி கடவுள் ஆகி விடாது. இயேசு பூமியில் வருவதற்கு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் எழுதப்பட்டு விட்டன. அவை அசாதாரண நூல்கள். அவற்றின் தாக்கம் கிறிஸ்தவத்தின் மீதும் உள்ளன. எனவே, உங்கள் மதத்தை விட பழமையான மதத்தை மதிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும் " என்று பதில் அளித்துள்ளார்.
மற்றொருவர், " இது வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்களால் நிறைந்த ஒரு நாடு. இது மத சுதந்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு தீங்கு விளைவிக்கவோ அல்லது ஒடுக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒவ்வொரு மதமும் நமது அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. அதை நாம் மதிக்க வேண்டும்" என்று டங்கனுக்கு பதில் கொடுத்துள்ளார்.