எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரிக்கும் முடிவை கைவிட்டுள்ளது. இந்த சிறிய ராக்கெட்டுகள் தயாரிக்கும் பொறுப்பு பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் (Hindustan Aeronautics Limited) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ நிறுவனம் எஸ்.எஸ். எல்.வி சிறிய ரக ராக்கெட்டுகளை தயாரித்து வந்தது. தற்போது, 511 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ராக்கெட்டுகள் தயாரிக்கும் பொறுப்பு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே, ஹெச்.ஏ.எல். நிறுவனம் இஸ்ரோவுக்கு பல்வேறு ராக்கெட் பாகங்களை தயாரித்து அளித்துள்ளது. இதனால், இந்த நிறுவனத்தை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.
இதற்கான, தொழில்நுட்பங்கள் அனைத்தும் அந்த நிறுவனத்திடம் இஸ்ரோ வழங்கி விட முடிவு செய்துள்ளது. சிறிய ரக ராக்கெட்டான இதனை ஏவுவதற்கு, பெரிய லாஞ்சிங்பேட் (Launcing Pad) தேவையில்லை. இதனால், குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் லாஞ்சிங் பேடில் இருந்து இந்த ரக ராக்கெட்டுகளை ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8 ராக்கெட்டுகளை ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின்படி, எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை தயாரிப்பது, ஏவுவது, பிற நாடுகளுக்கு விற்பனை செய்வது என அனைத்துக்கும் ஹெச்.ஏ.எல் நிறுவனமே பொறுப்பு. முதல் ராக்கெட் ஏவும் வரை ஹெச்.ஏ.எல். இன்ஜீனியர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிக்கும். முதல் ராக்கெட் இஸ்ரோ அதிகாரிகளின் கண்காணிப்பில் ஏவப்படும். ஒரு ராக்கெட்டை தயாரிக்க 169 கோடி செலவாகும். ஏவுவதற்கு 35 கோடி செலவு பிடிக்கும்.