

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குட்டிப்புரத்தை சேர்ந்தவர் செய்யதுஅலி என்பவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவரது, இரண்டாவது மனைவி ஜூபாரியா மலப்புரத்தை சேர்ந்தவர். செய்யது அலி மசூதியின் முன் பிச்சையெடுத்து , அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே, செய்யது அலிக்கு முதல் மனைவி ஒருவரும் உண்டு. இந்த நிலையில், செய்யது அலி இரண்டாவது மனைவி ஜூபாரியாவை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
பின்னர், மூன்றாவதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஜூபாரியா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது கணவர் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கிறார். தனக்கு மாதம் 10 ஆயிரம் ஜீவானாம்சமாக தர வேண்டுமென்று கூறியிருந்தார். இதையடுத்து, குடும்ப நல நீதிமன்றம் செய்யது அலி மாதம் 10 ஆயிரம் மனைவிக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது. தொடர்ந்து, கொச்சியிலுள்ள கேரள உயர்நீதிமன்றத்தில் செய்யது அலி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுத்து விட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கூறியதாவது, "செய்யது அலியின் திருமண வாழ்க்கையைப் பார்க்கும் போது, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இப்போது, மூன்றாவது திருமணம் செய்யப் போவதாக மிரட்டுகிறார். இரண்டாவது மனைவிக்கு போதிய அளவு பணம் தர முடியாதநிலையில், அவர் மூன்றாவது திருமணம் செய்யத் தகுதியற்றவராகி விடுகிறார். இஸ்லாமியச் சட்டத்திலும் இது சொல்லப்பட்டுள்ளது. குரானிலும் எந்த ஒரு முஸ்லிம் ஆணும் தனது முதல், இரண்டாவது மனைவிகளுக்கு போதிய ஜீவனாம்சம் கொடுக்க முடியவில்லை என்றால் அடுத்த திருமணம் செய்ய தகுதியில்லை என்றே கூறப்பட்டுள்ளது. அனைத்து மனைவிகளையும் பராமரிக்க போதியசெல்வம் இருக்கும் இஸ்லாமிய ஆண்கள் மட்டுமே பலதார மணம் செய்யலாம் என்றும் குரான் கூறியுள்ளது. இஸ்லாம் மதத்திலும் குறைந்தளவு ஆண்களே பலதார மணம் புரிந்துள்ளனர். பெரும்பாலான , இஸ்லாமிய ஆண்கள் ஒரே மனைவியுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஒருவர் பிச்சையெடுத்து வாழ்கிறார் என்பது சமுதாயத்துக்கும் அரசுக்கும் அவமானகரமானது. இது போன்ற மனிதர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசுதான் இவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதேவேளையில், தலாக் என்ற பெயரில் மனைவிகளைக் கைவிடுவது கொடூரத்தின் உச்சமாகப் பார்க்க வேண்டியதுள்ளது. பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நீதிமன்றத்துக்கு உள்ளது. செய்யது அலி மூன்றாவது திருமணம் செய்தால் மற்றொரு பெண் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார். அவரின் முதல் மனைவியின் நிலை குறித்தும் இந்த சமயத்தில் யோசிக்க வேண்டியுள்ளது. எனவே, இஸ்லாமியப் பெரியவர்களைக் கொண்டு செய்யது அலிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும் . தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்த வாழ அறிவுறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
நீதிபதியின் உத்தரவு நகல் கேரள சமூகநலத்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பி வைக்கப்பட்டது.