உத்தரப் பிரதேசத்தின் பேகமாபாத் எனும் சிறிய ஊரில் வாழ்ந்த குஜர்மால் மோடி என்னும் வர்த்தகரின் முயற்சியால், அந்த ஊர் செழித்தது. வர்த்தகரின் சேவையைப் பாராட்டி அந்த ஊருக்கு ‘மோடி நகர்’ என்று பெயர் வைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த குஜர்மால் மோடியின் பரம்பரையில் வந்தவர்தான் லலித் மோடி. தாத்தாவுக்கு உள்ள நற்பெயரில் ஒரு துளி கூட லலித் மோடிக்கு கிடையாது. தற்போது, லலித் மோடி மட்டுமல்ல அவரின் தம்பியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது என்ன சர்ச்சை என பிறகு பார்க்கலாம்.
கடந்த 2004-ல் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்த லலித் மோடி, விரைவில் அதன் தலைவரானார். பின்னர், BCCI துணைத் தலைவரானார். இந்த சமயத்தில் கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டிகள் நடத்தினால் பணம் கொட்டும் என்பதை ஜீ நெட் ஒர்க் தெரிந்து கொண்டது. கபில்தேவை கொண்டு 20 ஓவர் போட்டித் தொடரை இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) என்னும் பெயரில் தொடங்கியது. பல சர்வதேச கிரிக்கெட்டர்கள் இந்த தொடரில் இடம்பெற்றார்கள். இது ஜீ தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது. பி.சி.சி.ஐ தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்தத் தொடரை முடக்கியது.
இந்தத் தொடரை காப்பியடித்து லலித் மோடி கொண்டு வந்ததுதான் IPL எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக். இந்தப் பெயரேகூட, புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்துத் தொடரான, இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரை மனதில் வைத்துக் கொண்டு வரப்பட்டதுதான். தொடர்ந்து , ஐ.பி.எல்.லில் லலித் மோடி நிதி முறைகேட்டில் ஈடுபட, கிரிக்கெட்டில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பின்னர், அவர் வெளிநாட்டுக்குத் தப்பி விட்டார். தற்போது, பிரிட்டனில் வசிக்கிறார்.
இந்த நிலையில், லலித் மோடியின் தம்பியான சமீர் மோடி டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக டெல்லி பிரன்ட்ஸ் காலனி போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் இந்த ஆண்டு செப்டம்பர் 10 ம் தேதி புகாரளித்துள்ளார். புகாரில் பேஷன்துறையில் தனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி தன்னிடத்தில் அறிமுகமான சமீர் மோடி, பின்னர், பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வீட்டில் வைத்துத் தன்னை தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில்,வெளிநாட்டில் இருந்து நேற்று டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, சமீர் மோடி கைது செய்யப்பட்டார். கைது தொடர்பாக, சமீர் மோடியின் சட்ட ஆலோசகரான சிம்ரன் சிங் கூறுகையில், 'இது பணம் பறிக்கும் முயற்சி. இந்தப் புகார் ஜோடிக்கப்பட்டது. உண்மைகளை சரிபார்க்காமல் காவல்துறை அவசரமாக கைது செய்துள்ளது. புகார் கொடுத்த பெண் எங்கள் கிளையன்டிடம் இருந்து ரூ.50 கோடி பணம் கேட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 8 மற்றும் 13 ஆகிய தேதிகளில், சமீர் மோடி பல்வேறு காவல்துறை அதிகாரிகளிடம் அந்தப் பெண் மிரட்டி பணம் கேட்பதாக புகார் அளித்துள்ளார். அவர்களுக்கிடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் ஆதாரமாக உள்ளன" என்று கூறியுள்ளார்.
சமீர் மோடி, உயர்தர தோல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் மோடிகேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.