கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குடுமன் என்ற இடம் மூன்று மாநிலத்தை இணைக்கக்கூடிய பகுதியாக உள்ளது. புல்பள்ளி என்னும் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வனப்பகுதியில் இருந்து தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று ஊருக்குள் நுழைந்தது. அந்தக் குட்டி யானை அங்கிருந்த அரசுப் பள்ளி வளாகத்தில் நுழைந்தது. இதைப் பார்த்த பள்ளி மாணவர்கள் பயந்து போனார்கள். குட்டி யானை பள்ளி வளாகத்தில் நுழைந்து தலைமை ஆசிரியை அறைக்குள் சென்றுள்ளது. உடனடியாக , தலைமை ஆசிரியை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கேரள வனத்துறையினர் அந்த யானைக்குட்டியை மீட்டு தாயிடம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், கேரள வனத்துறையினர் முழுமூச்சுடன் குட்டியை தாயுடன் சேர்க்கும் பணியில் ஈடுபடவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஏதோ கடமைக்காக குட்டியை யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக எல்லையையொட்டி குட்டியை காட்டுக்குள் விட்டுவிட்டுச் சென்று விட்டனர். ஆனால், அங்கிருந்த யானைக் கூட்டங்கள் குட்டியை சேர்க்கவில்லை. இதையடுத்து, சோர்வுடன் காணப்பட்ட அந்த யானைக்குட்டி அங்கிருந்த கபினி நதியருகேயுள்ள கடகாடல் கிராமத்துக்குள் தள்ளாடியபடி வந்துள்ளது. யானைக்கூட்டங்கள் கபினி ஆற்றைக் கடந்து காட்டுக்குள் சென்று விட்ட நிலையில், யானைக்குட்டி தனியாக வருவதைப் பார்த்த கிராமத்து மக்கள் உடனடியாக கர்நாடக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து , கர்நாடக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானைக்குட்டியை மீட்டு தங்கள் முகாமுக்குக் கொண்டு சென்று பராமரித்தனர். ஆண் குட்டியான அதற்கு மைசூர் சாமுண்டீஸ்வரி நினைவாக சாமுண்டி என்றும் பெயர் வைத்தனர். கடந்த ஒரு மாத காலமாக சாமுண்டி, முகாமில் நல்லபடியாக பராமரிக்கப்பட்டு வந்தது. குட்டிக்கு ஆட்டுப் பால் , மாட்டுப் பால் கொடுத்து பராமரித்தனர். ஆனாலும், 3 மாதமேயான அந்தக் குட்டி, தாயின் காம்பு வழியாகவே பால் குடிக்க முடியும். புட்டிப்பால் குடிக்க முடியாமல் திணறி வந்தது சாமுண்டி.கால்நடை மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்தனர்.
ஆனாலும், திடீரென்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சாமுண்டி இறந்து போனது. இதனால், முகாமே சோகமாக காட்சியளித்தது. சாமுண்டியின் இறப்புக்குக் கேரள வனத்துறையினரின் பொறுப்பற்ற செயலே முக்கியக் காரணமென்று கர்நாடக வனத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து கர்நாடக வனத்துறையினர் கூறுகையில், "மூன்று மாதமேயான குட்டி யானை இது. நாள் ஒன்றுக்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவு அதனால் நடக்க இயலாது. அதேபோல, தாய் யானையின் துணையில்லாமல் கபினி ஆற்றை அந்தக் குட்டியால் நீந்திக் கடக்க முடியாது. இந்தச் சூழ்நிலையில், வேண்டுமென்றே கேரள வனத்துறையினர் கர்நாடக எல்லைக்குள் செல்லும் வகையில் குட்டியை திசை திருப்பி விட்டுள்ளனர். குட்டி யானையை மீட்டுப் பராமரிப்பதில் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்று எங்களுக்கு தெரியவில்லை. யானைக்குட்டியை பராமரிப்பதை சுமை என்று கருதி குட்டியை சாகும் நிலைக்கு கேரள வனத்துறையினர் தள்ளி விட்டனர். '' என்று குறை கூறியுள்ளனர்.
இதிலிருந்தாவது பாடம் கற்றுக்கொண்டு இனி ஒரு வன உயிரும் இறக்கும் நிலைக்குக் கொண்டு செல்லாமல் இரு அரசுகளின் வனத்துறையினரும் திட்டம் வகுக்க வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.