"ஏன்யா இப்டிப் பண்றீங்க!" - கரடிக்கு இதைக் கொடுக்கலாமா?

சோசியல் மீடியா லைக்ஸ் ,வீயூஸுக்காக கரடிக்கு கூல் டிரிங்ஸ் கொடுத்த இளைஞர்...
Bear drinking Cold Drink
Bear drinking Cold Drink
Published on

பொதுவாக, வனவிலங்குகளுக்கு மனிதர்கள் உணவு அளிக்கக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்துவது உண்டு. ஆனால், மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் குரங்குகளுக்கு உணவு அளிப்பதை காண முடியும். இதனால், வாகனங்களை கண்டாலே, உணவு கிடைக்கும் என்கிற ஆசையில் குரங்குகள் அவற்றை நோக்கி ஓடி வருவது உண்டு. அப்படி, ஓடி வருகையில், வாகனத்தில் சிக்கி குரங்குகள் இறந்து விடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கும்.

அதோடு, குரங்கு போன்ற வனவிலங்குகளுக்கு மனிதர்கள் உணவளிப்பதால் அவை உணவுத் தேடி உண்ணும் மரபை மறந்து விடும் அபாயமும் உண்டு. சாலையோரத்தில் அமர்ந்திருந்தால், நமக்கு இங்கேயே உணவு கிடைக்கும் என்கிற எண்ணத்தை மனிதர்கள் அவற்றின் மனதில் விதைத்துவிடுகிறார்கள். இதனால், உணவுச்சங்கிலி பாதிக்கப்படும் அபாயம் ரொம்பவுமே உண்டு.

இதன் காரணமாக , குரங்கு உட்பட வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பிடிபட்டால், ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வனத்துறை சட்டத்தில் இடமும் உள்ளது. ஆனால், சோசியல் மீடியா காலத்தில் லைக்ஸுக்காக , வியூஸுக்காக அபாயகரமான விலங்குகளுக்கும் உணவு கொடுத்து, அவற்றை வீடியோ எடுத்து வெளியிடும் குணம் மனிதர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அந்த வகையில் , சத்தீஸ்கரில் இளைஞர் ஒருவர் கரடிக்கு கூல் டிரிங்க்ஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதி நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் கரடிகள், சிறுத்தைப்புலிகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும். அப்படி, கான்கெர் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் கரடி ஒன்று வந்தது. இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் கூல்டிரிங்ஸ் டின் ஒன்றை கரடி முன் வைத்தார். இதையடுத்து, கரடி, அந்த கூல்டிரிங்ஸ் டின்னை எடுத்து குடித்து ருசி பார்த்தது. பின்னர், அந்த இளைஞர் கரடி கூல்டிரிங்ஸ் குடித்த வீடியோவை சோசியல் மீடியாவிலும் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து, பலரும் சோசியல் மீடியா வியூஸுக்காக, வனவிலங்குகளுக்கு அருகில் சென்று உயிரைப் பணயம் வைக்குமளவுக்கு இளைஞர்கள் மாறிவிட்டனர் என்று விமர்சிக்க தொடங்கினர்.

இந்த வீடியோ கண்ட வனத்துறையினரும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் தங்கள் அறிக்கையில் "கரடி வன்முறைக்கு பெயர் போனது. அமைதியாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், சட்டென்று தாக்கும் குணம் கொண்டது. கரடியின் அருகில் நெருங்குவது திடீர் தாக்குதலுக்கு வழிவகுக்கலாம். தாக்கத் தொடங்கினால், மனிதர்கள் எளிதில் தப்பி விட முடியாது. அதோடு, வனவிலங்குகளுக்கு குளிர் பானங்கள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவைக் கொடுப்பது அவற்றின் உடல் ஆரோக்கியத்துக்கு எதிரானது, ஆபத்தானது. ஏனெனில், வனவிலங்குகள் இத்தகைய உணவுகளை உண்டோ, குடித்தோ பழக்கப்படாதவை" என்று கூறுகின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com