டெல்லியில் புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் ஜீப் ஒன்று, டெலிவரி எடுக்கப்பட்ட சமயத்தில், பயங்கரமான விபத்தில் சிக்கியது. இந்த புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் காரை வாங்கியவர் ஒரு பெண். அவர் காரை டெலிவரி எடுத்த நாளில், முதல் தளத்தில் அது நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, எலுமிச்சம்பழம் மீது காரை ஏற்றி எடுக்க அந்த பெண் விரும்பியுள்ளார். இந்த சமயத்தில், தவறுதலாக அந்தப் பெண் ஆக்ஸிலேரேட்டரை வேகமாக அழுத்தி விட, முதல் தளத்தின் கண்ணாடியை உடைத்து கொண்டு, தார் ராக்ஸ் ஜீப் கீழே குப்புற கவிழ்ந்தது. டெலிவரி எடுக்கும் நாளில் இந்தக் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், தார் ராக்ஸ் மிக கடுமையாக சேதமடைந்து விட்டது. இந்த காரின் விலை 27 லட்சமாகும்.
புதுடெல்லியில் நிர்மான் விஹார் பகுதியிலுள்ள மஹிந்திரா ஷோரூமில் இந்த சம்பவம் நடந்தது. தார் ஜீப் தரையில் கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதைக் கவிழ்த்த பெண் பற்றிய விவரம் மட்டும் தெரியாமல் இருந்தது .
இதற்கிடையே, சோசியல் மீடியாவில் தார் ஜீப்பை விபத்துக்குள்ளாக்கிய பெண்ணுக்கு கால் உடைந்து விட்டது, மூக்கு உடைந்து விட்டது... உயிருக்கு ஆபத்து என்றெல்லாம் தகவல்கள் பரவின. இது தொடர்பாக, பலரும் வீடியோக்கள் வெளியிட்டிருந்தனர். ஆனால், இதுவெல்லாம் தவறான தகவல் என்பது தெரிய வந்துள்ளது. அந்த காரை கவிழ்த்த பெண், இப்போது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு, தான் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதோடு, நடந்த விஷயங்கள் குறித்தும் விளக்கமாக கூறியுள்ளார்.
காசியாபாத்தை சேர்ந்த மணி பவார் என்ற அந்த 29 வயது இளம் பெண் கூறியுள்ளதாவது , 'ஜோடிக்கப்பட்ட வீடியோவில் சிலர் வியூஸ் பெறுவதற்காக, நான் இறந்து விட்டதாக தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அது எல்லாமே Fake Videos. விபத்து நடந்த போது, என்னுடன் எனது குடும்ப உறுப்பினர், மஹிந்திரா நிறுவனத்தின் சேல்ஸ்மேன் ஆகியோர் இருந்தோம். அந்த சேல்ஸ்மேன், என்னிடத்தில், இந்த கார் சட்டென்று வேகம் எடுக்கும். எனவே , பார்த்து மெதுவாக எலுமிச்சம்பழம் மேல் ஏற்றவும் என்று அறிவுறுத்தியிருந்தார். ஆனால், நான் ஆக்சிலட்டரை மிதித்ததும் சட்டென்று தார் பாய்ந்து விட்டது. ஜீப் கவிழ்ந்ததும் முன் பக்க கதவு வழியாக நாங்கள் அனைவரும் வெளியே வந்து விட்டோம். யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. நான் உயிரோடுதான் இருக்கிறேன். என்னைப் பற்றி யாரும் தவறான பதிவுகளை வெளியிட வேண்டாம். "
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.