கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியைச் சேர்ந்தவர் மரியக்குட்டி. தற்போது, 88 வயதான இவர், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக இருந்தார். மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களில் பங்கேற்றார். கேரள முதல்வர் பினராயி விஜயனையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியகுட்டிக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த பென்சன் தொகையைக்கூட நிறுத்தி வைத்தது.
இதனைக் கண்டித்து, கடந்த 2023ம் ஆண்டு அடிமாலியில் தெருத்தெருவாக சென்று பிச்சையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார் மரியக்குட்டி. அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி மரியக்குட்டியை பழி வாங்குகிறது என காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியது. இதையடுத்து, மரியக்குட்டிக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் தனி வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் மரியக்குட்டியை மரியாதையுடன் பார்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில், என்ன நடந்ததோ தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி மீது மரியக்குட்டிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து, அந்தக் கட்சியில் இருந்து விலகி கடந்த மே மாதத்தில் பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைந்தார். கட்சி மாறியதில் இருந்து வயது முதிர்ந்தவர் என்றுகூடப் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் மரியக்குட்டியை கடுமையாகத் திட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு மரியக்குட்டி , அடிமாலியிலுள்ள ரேஷன் கடைக்குப் பொருட்களை வாங்கச் சென்றார். அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர், 'இது காங்கிரஸ் கட்சி நடத்தும் ரேஷன் கடை. நீ, பி.ஜே.பி நடத்தும் ரேஷன் கடைக்குப் போ' என்று விரட்டியதாகத் தெரிகிறது. ரேஷன் பொருட்களையும் வாங்க விடவில்லை என்று சொல்லப்படுகிறது.
மரியக்குட்டிக்கு ரேஷன் கடையில் பொருட்கள், மறுக்கப்பட்ட விஷயம் வெளியே கசிந்து கேரளாவில் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கொதிப்படைந்தனர். பலரும் மரியக்குட்டிக்கு உதவ முன்வந்தனர்.
இந்தத் தகவல் திருச்சூர் எம்.பியும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி காதுக்கும் எட்டியது. இதையடுத்து, அவர் தனது சகாக்களை மரியக்குட்டி வீட்டுக்கு நேரடியாக அனுப்பி தேவையான அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இது தொடர்பான வீடியோக்களையும் தன் சமூகவலைத் தளத்தில் சுரேஷ் கோபி பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே, மரியக்குட்டிக்கு ரேஷன் கடையில் பொருட்கள் தர மறுக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஓணம் சமயத்தில் பொருட்களைப் பெற ரேஷன் கடையில் ஏராளமான கூட்டம் இருந்தது. சர்வரும் டவுனாக இருந்தது. முதலில் யார் வருகிறார்களோ அவர்களுக்குப் பொருட்களை ஊழியர்கள் விநியோகம் செய்துள்ளனர். ஆனால், மரியக்குட்டி காத்திருந்து பொருட்களை வாங்க விரும்பாமல் திரும்பிச் சென்று விட்டார் என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மரியக்குட்டி தனக்கு ரேஷன் பொருட்களை தராமல் தன்னை மிரட்டியதாக உறுதிபட கூறியுள்ளார். உண்மை எதுவோ, ஆனால் ஒரு சிறு சம்பவம்கூட அரசியலில் ஊதிப் பெரிதாக்கப்பட்டு பேசுபொருளாகிறது என்று கேரள மக்கள் தங்கள் கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.