

ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கிடையேயும் சில புதிய கட்சிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. சில கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துகொண்டும் இருக்கின்றன. 2000த்துக்கு முன்பும், அதற்குப் பின்பான காலகட்டத்திலும் கட்சிகள், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெறவும், தொண்டர் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் கையாளும் வழிமுறைகள் மாறிப்போயிருக்கின்றன. இதைப் புரிந்துகொண்டு தங்கள் செயல்பாடுகளை, வழிமுறைகளை அமைக்கும் தெளிவுள்ள கட்சிகள் வளர்வதும், அப்படி இல்லாத கட்சிகள் தேய்வைச் சந்திப்பதும் தவிர்க்க முடியாதது. தலைமுறை இடைவெளியை ஒப்பிட்டுப் பார்த்து, இன்றைய கட்சிகள் மக்கள் ஆதரவைப் பெருக்கிக்கொள்ள என்ன செய்யலாம்?
சித்தாந்தம்:
பழைய தலைமுறை மக்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் கட்சித் தலைவர்களின் கொள்கைகள், தலைவர்களின் பேச்சுகள், மற்றும் அவர்களின் தியாகங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ஆதரவைத் தந்தனர்.
இன்றைய இளைஞர்கள் சித்தாந்தத்தை விடவும், ஒரு கட்சியின் நடைமுறைச் செயல்பாடுகளையும், தலைவராக இருக்கும் தனிநபரின் திறமையையும் அதிகம் பார்க்கிறார்கள்.
கட்சி விசுவாசம்:
பழைய தலைமுறையினர் தாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டவர்களை கேள்வி கேட்பதில்லை, விமர்சிப்பதில்லை. மிகுந்த விசுவாசமுடையவர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு தலைவருக்கோ, கட்சிக்கோ ஆதரவு தந்தால், அது இறுதிவரைத் தொடர்ந்தது.
இவர்களிடம் விசுவாசம் கிடையாது. ஒரு தலைவர் தவறு செய்தால், அது உடனே தேர்தலில் எதிரொலிக்கும். இவர்கள் தங்கள் தலைவர்களைக் கேள்வி கேட்கத் தயங்குவதில்லை. ஒரு தலைவர் என்ன செய்கிறார், அவர் தரும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா என்று ஆராய்ந்து முடிவெடுக்கிறார்கள்.
மக்கள் தொடர்பு:
அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே நேரடியான தொடர்பு இருந்தது. பொதுக்கூட்டங்கள், மேடைப் பேச்சுகள், நேரடிப் பிரச்சாரங்கள் ஆகியவை அரசியல் உரையாடலின் மிக முக்கிய அங்கங்களாக இருந்தன. தலைவர்களை நேரில் பார்த்து, அவர்களின் பேச்சை உணர்வுப்பூர்வமாகக் கேட்டு முடிவெடுத்தனர்.
இன்றும் தலைவர்கள் மக்களை நேரில் சந்திப்பது முக்கியமானதாக இருந்தாலும், டிவி மற்றும் சமூக ஊடகங்கள் அதை விடவும் முக்கியமான இடத்திலிருக்கின்றன. ட்விட்டர், நொடிப்பொழுதில் மக்களின் கவனம் இன்னொரு செய்திக்குத் திரும்பிவிடும். மக்களின் கவனத்தைத் தம் மீது தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள ஒரு தலைவர் மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டும்.
ஊடக பலம்:
முந்தைய தலைமுறைக்கு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் மட்டுமே தகவல்களுக்கான முக்கிய ஊடகங்களாக இருந்தன. பெரும்பாலான செய்திகள் நம்பகத்தன்மையோடு இருந்தன.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் முக்கியத் தளங்களாக மாறிவிட்டன. நல்லதோ, கெட்டதோ ஒரு செய்தி நொடிப்பொழுதில் பரவி விடுகிறது. செய்தியின் நம்பகத்தன்மை மிகக் குறைவாக இருக்கிறது. போலி விடியோக்களும், கேலி விடியோக்களும் மக்களை மிக எளிதில் தங்களிடமிருந்து திசை திருப்பிவிடும் ஆபத்து ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கிறது.
பழைய தலைமுறை, வலுவான விசுவாசம் மற்றும் நேரடித் தொடர்புகளை நம்பியிருந்தது. புதிய தலைமுறை, நடைமுறைச் சிந்தனை, கேள்வி கேட்கும் மனப்பான்மை, மற்றும் மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்தி அரசியல் களத்தில் இயங்குகிறது. இந்த இரண்டு தலைமுறைகளின் பார்வைகளும், அணுகுமுறைகளும் ஒத்திசையும் போதுதான் ஒரு ஆரோக்கியமான அரசியல் சூழல் உருவாகும். இவற்றைப் புரிந்து தங்கள் செயல்பாடுகளை கட்டமைக்கும் கட்சிகள் அதிக மக்களைச் சென்றடைவார்கள்.