

கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவின் முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தள கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. தேர்தலில் 51 இடங்கள் மட்டுமே இந்த கட்சிக்கு கிடைத்தது. காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளிலும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், சயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக 78 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
இந்த தேர்தலின் போது, நவீன் பட்நாயக்கின் நிழல் என்று சொல்லப்படும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன் பி.ஜே.டி. கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஒடிசாவின் அதிகாரமிக்க பதவியில் இருந்தவர். நவீன் பட்நாயக்குடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இவரிடம், கேட்காமல் நவீன் பட்நாயக் எந்த முடிவும் எடுக்க மாட்டார். அந்தளவுக்கு இருவருக்கும் பந்தம் உண்டு. கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி ஒரு கூட்டத்தில் பேசிய போது, வி.கே . பாண்டியனை மறைமுகமாக குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்' முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் பூரி ஜெகநாதன் கோயில் பாதுகாப்பாக இல்லை. அந்த கோவிலின்சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது. அதனை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?' என்று அந்த சர்ச்சை பேச்சு அமைந்திதிருந்தது.
இந்த தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தோற்றதையடுத்து, நவீன் பட்நாயக்குக்கும் வி.கே. பாண்டியனுக்கும் விரிசல் ஏற்பட்டு விட்டதாக கூறப்பட்டது. தேர்தல் தோல்விக்கு பிறகு, இருவருமே பொது இடங்களில் தென்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக புவனேஸ்வர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சமயத்தில்,வி.கே. பாண்டியனும் அவரது மனைவியும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜதாவும் பெற்ற பிள்ளைகள் போல நவீன் பட்நாயக்கை பார்த்துக் கொண்டனர். மருத்துவமனையில் இருந்து , நவீன் பட்நாயக் வீட்டுக்கு திரும்பிய போது, பாண்டியனின் கையை பிடித்து கொண்டுதான் நடந்து வெளியே வந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு, பொதுவெளியில் இருவரும் தோன்றியது இதுவே முதன்முறை. முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் நவீனுக்கு மும்பை மருத்துவமனையில் முதுகு தண்டுவட பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதும், பாண்டியன்தான் அவரை பாராமரித்து கொண்டிருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, நவீன் பட்நாயக்குக்கு 78 வயதாகிறது. அவர் தனியாக இருக்கிறார். எனவே, வி.கே பாண்டியன்தான் மகன் ஸ்தானத்தில் இருந்துஅவரை பார்த்து கொள்வதாக சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராகத் தொடர்ந்து இருப்பதையும், பட்நாயக்கின் நெருங்கிய வட்டத்தில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதையும் இது காட்டுகிறது. வி.கே. பாண்டியன் கட்சியின் அன்றாட விவகாரங்களில் ஈடுபடுவதிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் . ஆனால் கட்சியின் முடிவெடுப்பதில் அவரது பங்கு இன்னும் முக்கியமாகவே உள்ளது' என்கின்றனர் பாண்டியனுக்கு நெருக்கமானவர்கள்.
பட்நாயக்குடன் பாண்டியன் மீண்டும் தோன்றியது பி.ஜே.டி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பல கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருக்கும் போது, யார் அருகில் இருக்க வேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட முடிவு. இதுகுறித்து ஏன் இவ்வளவு விவாதங்கள்? நீங்கள் அவரது ஒடியா அல்லாத அடையாளத்திற்காக பாண்டியனை விமர்சிக்கிறீர்கள். இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதற்காக அடிக்கடி டெல்லிக்குச் செல்கிறார்கள். அவர்கள் ஒடியர்களா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முன்னாள் அமைச்சர் அத்தானு சப்யாசச்சி நாயக் கூறுகையில், வி.கே. பாண்டியனும் அவரது மனைவி சுஜாதா கார்த்திகேயனும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பட்நாயக்கை சொந்த மகனும், மகளும் போல கவனித்துக்கொண்டனர் . நவீன் எங்கள் தலைவர். அவரைப் பாண்டியன் கவனித்துக்கொள்கிறார். இதில் அரசியல் எதுவும் இல்லை. மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.
வி.கே. பாண்டியன் மீண்டும் அரசியலுக்கு வருவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை . எனினும், கட்சியில் செல்வாக்கு மிக்க ஒரு குழு, அவரை அரசியலுக்கு கொண்டு வர ஆதரவு திரட்டத் தொடங்கியுள்ளதாக பி.ஜே.டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2011-ம் ஆண்டு முதல் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்த வி.கே. பாண்டின் 2023 அக்டோபரில் கட்சியில் சேருவதற்காக ஐ.ஏ.எஸ் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பின்னர், பி.ஜே.டி-யின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அங்கமாக செயல்பட்டார். மேலும், 2024 தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
பாண்டியனின் தமிழ் பூர்வீகமும், நிர்வாகத்தில் அவரது செல்வாக்கும் பா.ஜ.க-வுக்கு பி.ஜே.டி-யைக் குறிவைக்க முக்கிய காரணமாக அமைந்தது. பட்நாயக் எப்போதும் அவருக்கு ஆதரவு அளித்தபோதிலும், பெரும்பாலான மூத்த பி.ஜே.டி தலைவர்கள் தேர்தல் தோல்விக்கு பாண்டியன் தான் காரணம் என குற்றம் சாட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.