பூனைகளுக்கு உறக்கம் என்றால் கொள்ளைப் பிரியம். சாப்பிடுவதும் உறங்குவதும்தான் அவற்றின் அன்றாடப்பணிகள். மற்றபடி, வீட்டுக்குள் வரும் பல்லிகள், பூச்சிகள் போன்றவற்றை வேட்டையாடும். முக்கியமாக, பாம்புகளை கண்டால் விடாது. பாம்புகளை விடப் பூனைகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சாதகம் என்னவென்றால், அவை மிகவும் வேகமாக எதிரியை தாக்கும் திறன் கொண்டவை. பூனைகளால், பாம்புகளை விட ஏழு மடங்கு வேகமாக எதிர்வினையாற்ற முடியும். பாம்புக் கடிக்க முயன்றால், விரைவாக விலகவும், உடனடியாகத் திரும்பத் தாக்கவும் பூனைகளுக்கு அசாத்திய திறன் உண்டு. இதனால், பூனைக்கும் நாகத்துக்கும் சண்டை நடந்தால் , பூனை எளிதாக வெற்றி பெற்று விடும். நாகம் உயிரை இழக்க நேரிடும்.
இதுதவிர, 'பூனைகளை வளர்த்தால் வீட்டில் கெட்ட ஆவிகள் வராது. மனிதர்களால் உணர முடியாதவற்றை பூனைகளால் உணர முடியும். பூனைகளை வளர்த்தால் வீட்டில் நல்ல சகுனம் நிலவும்' என்பதும் பலரின் நம்பிக்கை. வழக்கமாக, பூனைகள் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உறங்கும் பழக்கம் கொண்டவை. சில பூனைகள் 20 மணி நேரம் வரைகூட உறங்கும்.
ஆனால், கேரளாவில் பூனை ஒன்றுக்கு உறங்குவது பிடிக்காதாம். தனது வாழ்க்கையில் மிலிட்டரி மனிதர்கள் மாதிரி ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்கிறதாம். தினமும் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து விடுகிறதாம். பின்னர், தன்னுடைய வளர்ப்புத் தாயாருடன் சேர்ந்து காலை 5 மணிக்கு ஆன்லைனில் மெடிடேஷன் கிளாசும் அட்டென்ட் செய்கிறதாம். அநத பூனையின் பெயர்தான் டாம்.
கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள கலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிந்து. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தெருவோரத்தில் கிடந்த இரு பூனைக்குட்டிகளை எடுத்து வந்து தனது வீட்டில் வளர்க்க தொடங்கியுள்ளார். அவற்றுக்கு டாம் அண்டு ஜெர்ரி என பெயர் சூட்டியுள்ளார். முதலில், பூனைகளை வீட்டில் வளர்க்க பிந்துவின் கணவர் பிலிமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தம்பதியின் இளையமகன் பாரத்கிருஷ்ணாவுக்கு செரிப்ரல் பிளாசி நோய் இருந்துள்ளது. இதனால், படுக்கையிலேயே இருந்துள்ளார். இந்த தருணத்தில் டாம் மற்றும் ஜெர்ரி பாரத் கிருஷ்ணாவிடத்தில் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளன. பாரத் கிருஷ்ணாவும் வீட்டில் டாம் மற்றும் ஜெர்ரி இருப்பதை பாசிடிவாக கருதியுள்ளார்.
இதனால், மகனுக்காக வீட்டில் பூனைகளை வளர்க்க பிலிமான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த இரு பூனைகளில், டாம்தான் தினமும் காலையில் 3.30 மணிக்கே எழுந்துவிடுகிறது. பின்னர், தனது உடலை எச்சிலால் தூய்மைப்படுத்துகிறது. தொடர்ந்து, காலை 5 மணிக்கு பிரெஷ்ஷாகி, பிந்துவுடன் சேர்ந்து "Life is Beautiful'' என்ற குழு நடத்தும் ஆன்லைன் மெடிமேஷன் கிளாசில் பங்கெடுத்துக் கொள்கிறது. வகுப்பு முடிவடைந்ததும், கண்களை மூடி 15 நிமிடம் தியானத்தில் ஈடுபடுகிறது. காலை 6 மணிக்கு மேல் தனது சகோதரன் ஜெர்ரியை டாம் எழுப்புகிறது. அதனுடன் சேர்ந்து பிந்து தரும் காலை உணவை சாப்பிடுகிறது.
டாம் மற்றும் ஜெர்ரி பற்றிய மற்றொரு தகவலும் ஆச்சரியப்பட வைக்கிறது. வீட்டில் இது வரை, கரப்பான் பூச்சிகள், எலிகளை இந்த பூனைகள் கொன்றதும் இல்லையாம்... பிடித்ததும் இல்லையாம். பூனைகள் மீன்களை விட்டு வைக்காது. ஆனால், டாமும் ஜெர்ரியும் மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை. பூனைகளுக்காக தயாரிக்கப்படும் cat foods- ஐ மட்டுமே சாப்பிடுகின்றனவாம்.
டாம் தினமும் பாரத் கிருஷ்ணாவுடன்தான் உறங்குகிறது. அவருக்கு, ஏதாவது உடல் நிலை சரியில்லையென்றால், தனது நாவால் முகத்தை வருடி கொடுக்குமாம். அருகிலேயே உட்கார்ந்தும் கொள்ளுமாம். இதனால், பாரத் கிருஷ்ணா டாம் மற்றும் ஜெர்ரியை நல்ல கம்பெனியன்களாக உணரத் தொடங்கியுள்ளார். பாரத்தின் பெற்றோருக்கு இது சற்று நிம்மதியை தந்துள்ளது.
பாரத்கிருஷ்ணாவுக்கு இரு மூத்த சகோதரிகள் உள்ளனர். அவர்கள் பணி நிமித்தம் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர். இதனால், பாரத்தின் தனிமையை போக்கும் ஆறுதலாக டாமும், ஜெர்ரியும் அந்த வீட்டில் உலவுகின்றன!