சமூக ஒப்பீடு எனும் புதிய மனச் சிக்கல்...! #ComparsionCulture

நமது வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், யாரோ ஒருவரின் Vlog-ஐப் பார்த்தவுடன் ஏன் திடீரென அது போதாமையுள்ளதாக மாறிவிடுகிறது??
Man sadly looking the phone of exciting offers and plans
Man sadly looking the phone of exciting offers and plansAI GENERATED
Published on

நேற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது டிவியில் ஓர் அனுபவக்காணொளி (Vlog) ஓடிக் கொண்டிருந்தது. ஒரு புதிய, உலகின் ஆடம்பரமான பயணியர் கப்பல் ஒன்றில் தாங்கள் பயணம் செய்த அனுபவத்தைப் பற்றி ஒரு குடும்பம், அந்தக் காணொளியை வெளியிட்டிருந்தனர். பார்க்க பிரமிப்பாக இருந்த அதைக் கொஞ்ச நேரம் ஆர்வமாகவும், சகஜமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென இவ்வுலகில் எதையெல்லாம்தான் நாம் தவறவிடுகிறோம், இப்போது என்ன மாதிரியான வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மலைப்பான சிந்தனை ஏற்பட்டுவிட்டது.

நமது வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், யாரோ ஒருவரின் Vlog-ஐப் பார்த்தவுடன் ஏன் திடீரென அது போதாமையுள்ளதாக மாறிவிடுகிறது?

இதைத்தான் சமூக ஒப்பீடு (Comparison Culture) எனப்படும் நவீன மனநிலையின் புதிய சிக்கலாகச் சொல்கிறார்கள். இது ஒன்றும் புதிதானதல்ல, ஏற்கனவே வேறு வடிவங்களில் எப்போதுமே இருக்கின்ற விசயம்தான். இப்போது, இது இந்த சமூக வலைத்தளக் காலத்தில், சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால், குறிப்பாக Vlogging மற்றும் Reels போன்றவற்றால் ஏற்படும் புதிய மனச்சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.

ஒரு காலத்தில் ஒப்பீடு என்பது அண்டை வீட்டுக்காரர் அளவுக்குத்தான் இருந்தது. அவன் ஒரு புது பைக் வாங்கியிருக்கிறான், நாமும் ஒரு புது டிவிஎஸ் ஃபிஃப்டியாவது வாங்கிவிட வேண்டும் என்று போட்டி மனப்பான்மையில் பொருமிக் கொண்டிருந்தோம். குறிப்பாக நம் பிள்ளைகளை, அடுத்த பிள்ளைகளோடு ஒப்பிட்டு, ‘ஒரு பாடத்தில் கூட செண்டம் எடுக்கத் துப்பில்லையா?’, என்று தேவையற்ற ஒப்பீடுகளைச் செய்து அவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையையும் நம்மால் இயன்றவரை குலைத்துக் கொண்டிருந்தோம். அதே ஒப்பீடுதான் இன்று உலகளவுக்கு விரிந்து நிற்கிறது.

Image depicts that life is a Marathon not Sprint Race
Image depicts that life is a Marathon not Sprint RaceAI GENERATED

இதனால் மூன்று வகையான சிக்கல்கள் ஏற்படுகின்றன. முதலாவது, சமூக ஊடகங்கள் இந்த ஒப்பீட்டு மனநிலையை பல மடங்கு பெரிதாக்கியிருக்கின்றன. இன்னொருவரின் வெளிநாட்டுப் பயணம், புதிய கார், பதவி உயர்வு, விருது இவை அனைத்தையும் நாம் தினமும் ஸ்க்ரோல் செய்து பார்த்துக் கொண்டேயிருக்கிறோம். ஆனால், அந்த வெற்றிகளுக்குப் பின்னாலிருக்கும் தோல்விகள், குழப்பங்கள், பயங்கள், கடும் முயற்சிகள் எதுவுமே நமக்குத் தெரியாது. நாம் காண்பது ஓர் அழகான, பொறாமைப் படத்தக்க கிளைமாக்ஸ் மட்டுமே. அதனுடன்தான் நம் ‘முழு’ வாழ்க்கையையே ஒப்பிடத் தொடங்குகிறோம்.

இரண்டாவது, வயதை வைத்து வெற்றிக்கு இலக்கு வைக்கும் பழக்கம். ’30-க்கு இதை அடைய வேண்டும்’, ‘40-க்கு இதை முடிக்க வேண்டும்’ போன்ற கண்ணுக்கு தெரியாத கால அட்டவணை நம் தலையினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது. யாராவது அந்த இலக்குகளை நம்மைவிட முன்பாக அடைந்துவிட்டால், நமக்குள் ஒரு அவசர உணர்வு தோன்றுகிறது. உண்மையில், வாழ்க்கை ஒரு மராத்தான்! அதை 100 மீட்டர் ஓட்டமாக அணுகவே முடியாது, ஆனால், நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

மூன்றாவது, இந்த ஒப்பீட்டு அச்சத்தை சந்தை மிக நுட்பமாகப் பயன்படுத்துகிறது. ’நீங்கள் இன்னும் சிறப்பாக இருக்க முடியும், இது மட்டும் உங்களிடம் இருந்துவிட்டால்…’ என்ற விளம்பரச் செய்திகளின் அடிப்படைத் தத்துவமே இந்த ஒப்பீட்டுச் சிக்கல்தான். அழகு, உடல் எடை, சம்பளம், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் நம்மை விட ‘சிறப்பான’ பதிப்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி, நம்மை நிரந்தரத் திருப்தியின்மையில் வைத்திருக்கிறது.

ஒப்பீடு முற்றிலும் தவறானது அல்ல. போட்டி மனப்பான்மை மிக அவசியமானதுதான். அதுவே நம்மை முன்னேறத் தூண்டுகிறது, விடாமுயற்சியோடு இயங்கத் தூண்டுகிறது. ஆனால், அதுவே நம்மை மதிப்பிழக்கச் செய்யும் அளவுக்கு ஆட்கொண்டுவிட்டால், வளர்ச்சிக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக மனஅழுத்தத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் பந்தயத்தை, உண்மையில் நாம் யாருடன் மேற்கொண்டிருக்கிறோம்… என்பதை ஒருநாள் அமைதியாக நின்று நிதானமாகக் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த விடை தெளிவாக இருந்தால், ஒப்பீடு- நோயாவது குறையும், நம் வாழ்க்கை நம்முடையதாகவே இருக்கும்.

Puthuyugam
www.puthuyugam.com