கடந்த ஞாயிறன்று வழக்கம் போல, மீன் வாங்குவதற்காக அருகிலிருக்கும் சந்தைக்குச் சென்று வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் மீன்களில் எதை வாங்கலாம், மனைவியார் சொன்ன மீன் வகை இருக்கிறதா, அது எது, என்ன இந்த இரண்டும் ஒரே மாதிரியாகத் தெரிகின்றனவே, தவறாக எதையாவது வாங்கிப் போனால், மனைவியிடம் நாம் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியதாகிவிடுமே போன்ற கேள்விகளோடும் யோசனையோடும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அருகிலிருந்த ஒரு பெண்மணி, இறால் மீன்களை ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்து இருப்பதில் பெரிதாக இருக்கும் இறால்களை தேர்ந்தெடுத்துச் சேகரித்துக் கொண்டு இருந்தார். அவரோடு வந்திருந்த பத்து வயதே ஆன ஒரு சிறுமியும் அதே வேலையைக் கூச்சமின்றிச் செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்தக் கடைக்காரர், ’வாங்குவதாக இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள். மொத்தமாக எடை போட்டுத் தருவோம். இப்படிப் பெரிதாக இருப்பதை மட்டுமே தனியாகப் பிரித்துத் தர முடியாது. நாங்கள் பிறகு மற்றவர்களுக்கு எப்படி விற்பனை செய்வதாம்?’ என்று சற்றுக் கடுமையாகச் சொன்னார்.
நானும் அந்த பெண்மணியைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். அந்தக் கடைக்காரர் சொன்னது சரி என்றுதான் எனக்கும் தோன்றியது. சிறு வியாபாரிகளின் தொழிலில் இருக்கும் சிக்கல்களையும், இன்னல்களையும் இந்தப் பெண்கள் எப்போதும் புரிந்துகொள்வதே கிடையாது. ஆனால், அதன் பின்னரும் அவர்கள் இருவரும் அதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள்.
இப்போது கோபமடைந்த அந்தக் கடைக்காரர், அந்தச் சிறுமியைப் பார்த்து, ‘நான் சொன்ன பிறகும் உன் அம்மாதான் அதைச் செய்கிறார் என்றால், படிக்கும் குழந்தையான நீயும் இதைச் செய்யலாமா? இந்த வயதில், உன்னுடைய கவனம் கணக்கையும், அறிவியலையும் கற்றுக் கொள்வதில்தான் இருக்க வேண்டும். இப்படி மீனைத் தொட்டுப் பார்த்து வாங்குவது, காய்கறிகளை நசுக்கி பார்த்து வாங்குவது இதையெல்லாம் பெரியவளான பிறகு கற்றுக்கொள்ளலாம். இப்போதே இதுபோன்ற விசயங்களில் சிந்தனை போகக் கூடாது’ என்று சொன்னார்.
அவர் தனது தொழிலில் ஏற்பட்ட இடைஞ்சலால் கூட இதைச் சொல்லி இருக்கலாம்தான். ஆனால், அவர்களைத் தடுப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, அந்தக் கோபத்திலும் கூட அவர் ஏன் கல்வியை முன்னிறுத்திச் சொல்ல வேண்டும்?
கடந்த 20 ஆண்டுகளாக நம் சமூகத்தில் ஏற்பட்ட ’குழந்தைத் தொழிலாளர்’ குறித்த மிகப் பெரும் விழிப்புணர்வினால் வந்த தாக்கம்தான் அந்த வசனம் என்று நாம் கருத வழியுண்டு.
இப்போது தமிழ்நாட்டில் எங்குமே ஒரு குழந்தைத் தொழிலாளியை நம்மால் பார்க்க முடியாது. இருப்பினும், எப்போதாவது ஒரு சூப்பர் மார்க்கெட்டிலோ, ஒரு ஹோட்டலிலோ யாராவது ஒரு சிறுவனையோ, சிறுமியையோ பார்க்க நேர்ந்தால் நமக்கு முதலில், ’இவர் ஏதாவது குழந்தைத் தொழிலாளியாக இருப்பாரோ?’ என்ற எண்ணம்தான் முதலில் ஏற்படுகிறது. உடனடியாக எந்தத் தயக்கமுமின்றி அவரைப் பார்த்து ’உனக்கு என்ன வயது? எந்த வகுப்பு படிக்கிறாய்? இன்று பள்ளிக்கூடம் போகவில்லையா?’ என்று தயங்காமல் கேட்டு விடுகிறோம். சமயங்களில், உள்ளூர் சிறிய கடைகளில், ஒரு சிறுவன் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து இருந்தால் கூட, ’பள்ளிக்கூடம் போகாமல் இங்கே என்ன செய்கிறாய்?’ என்றுதான் கேட்றோம். அதன் பின்னர்தான், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதும், அந்தப் பையன் கடை ஓனரின் மகன் என்பதும் நமக்குத் தெரியவரும். அப்போது கூட, ’விடுமுறை நாட்களில், குழந்தைகளை வீட்டில் விளையாடச் சொல்லலாம் அல்லது படிக்கச் சொல்லலாம். இப்போதே ஏன் வேலையைப் பழக்குகிறீர்கள்?’ என்று உரிமையோடு அந்த கடைக்காரரிடம் நம் கருத்தைப் பதிவு செய்யத் தவறுவதில்லை. அந்த அளவுக்கு குழந்தைத் தொழிலாளர் விஷயத்தில், ஒரு சமூகமாகவே எதிராகத் திரண்டிருக்கிறோம் நாம்.
ஒரு குழந்தை, ஒரு வேலையைச் செய்கிறது என்பதைப் பார்த்தவுடனேயே அந்த மீன்காரருக்குக் கல்விதான் ஞாபகத்தில் வந்திருக்கும், அதனால் அதை இணைத்துச் சொல்லிவிட்டார். அதில் வியக்க ஒன்றுமில்லை. அல்லது அதே வயதில் வீட்டில் காத்திருக்கும் அவரது மகளைக் கூட, அந்தச் சிறுமி அவருக்கு நினைவூட்டியிருக்கலாம். அந்தச் சிறு கோபத்திலும், பெற்ற மகளாகவே பாவனை செய்துகொண்டு வெளியான அறிவுரையாகவே அது எனக்குத் தோன்றியது.