நமக்கும், நம் மனைவிக்கும் இடையே சண்டை வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன காரணம் என்று கேட்கிறீர்களா? எந்த ஒரு சண்டையும் முடிவதற்குள்ளாகவே, அது எதற்காக தொடங்கியது என்றே நினைவில் இருப்பதில்லை. அந்தளவுக்குத்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது. அதனால், காரணத்தை விடுங்கள். சண்டை வந்தாயிற்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான்.
’என் முகத்திலேயே விழிக்காதீர்கள், இங்கிருந்து போய் விடுங்கள் முதலில்!’ என்று கத்துகிறார் வீட்டம்மா.
அதற்கு என்ன அர்த்தம்?
நிஜமாகவே கைலியை மாற்றிக் கொண்டு, சட்டையையும் மாட்டிக் கொண்டு வெளியே போய் விடலாமா என்று யோசிக்கிறீர்கள். அதைத்தானே அவரும் கேட்கிறார், இல்லையா? சில சமயங்களில் அப்படி வெளியே போய்விடவும் செய்கிறோம். ஆனால், அவர் சொன்னதற்கு அதுதான் நிஜமான அர்த்தமா?
அவர் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். உணர்ச்சிவசத்தில் வரும் வார்த்தைகளுக்கு நாம் அப்படியே பொருள் கொள்ள முடியாது. அவை அவரது சிந்தனையிலிருந்து அந்த வார்த்தைகள் அல்ல. ’உன் தர்க்க நியாயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, வாக்குவாதத்தை எல்லாம் நிறுத்தி விட்டு, வந்து என்னை சமாதானம் செய்’ என்பதுதான் அந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம். அவரது மனம் அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. அவரது தேவையும் கூட அதுதான்.
ஆனால், நாம் கோபப்படும் போது, ’எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. கொஞ்ச நேரம் என்னைத் தொந்தரவு செய்யாமல் போய்த் தொலை’ என்று சொல்கிறோம்.
இதற்கு என்ன அர்த்தம்? ’நிஜமாகவே ஒரு முக்கியமான அலுவலக வேலை இருக்கிறது. அதைத் தயார் செய்து, நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் மெயில் பண்ண வேண்டும். அதனால், இந்தச் சண்டையை கொஞ்ச நேரம் தள்ளிப் போட்டுவிட்டு எனக்குக் கொஞ்சம் நேரத்தை கொடு. தொந்தரவு செய்யாதே’ என்பதுதான் அர்த்தம். நமது லாஜிக்கல் சிந்தனை என்ன சொல்கிறதோ அதைத்தான் நாம் பேசுகிறோம். ஆனால், நமது உணர்வு என்ன சொல்கிறது?
’ஏன் செல்லம் இந்த சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறாய்? கோபப்படும்போது கூட நீ அழகாய்த்தான் இருக்கிறாய்!’ என்பது போலத்தான் எதையாவது கோக்குமாக்காக உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் அதை வெளியே சொல்வதில்லை. தர்க்கரீதியாக சிந்திப்பதை மட்டுமே சொல்லுகிறோம். மாறாக, அவர்கள் தர்க்க ரீதியாக சிந்திப்பதை வெளியே சொல்வதில்லை, பதிலாக உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள். அப்படியானால்,
என்ற சொல்லாடலால், இதை இப்படிப் பொதுமைப்படுத்திவிட முடியுமா? நிச்சயம் முடியாது. காதலன், காதலி, கணவன், மனைவி போல உரிமையிருப்போரிடம் வேண்டுமானால் கோபத்தில் இருவரும் இப்படி நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதே தவிர, பொதுவாக அல்ல!
ஆண்கள், அலுவலகத்திலோ, வெளியே யாருடனோ சண்டை போடும் போது, வரிந்து கட்டிக்கொண்டு, ‘உன் மண்டையை உடைத்து மாவிளக்கு வைக்கிறேனா, இல்லையா பார்!’ என்று கத்துகிறோம். இதில் என்ன லாஜிக் இருக்கிறது? மண்டையை உடைத்தால், அதில் விளக்கு எப்படி ஏற்ற முடியும்? அல்லது அதற்கான வழிமுறைகள் என்னவென்றும் நமக்குத் தெரியாது.
நம் வீட்டம்மணியும் கூட பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் சண்டையிடும் போது, ‘உன் வீட்டுக் கோழி அதெப்படிடி முட்டையை மட்டும் உன் வீட்டில் போட்டுவிட்டு, எச்சத்தை மட்டும் என் வீட்டில் வந்து போடுகிறது? இன்னொரு முறை வந்தது என்றால், பிடித்து சூப் வைத்துவிடுவேன்’ என்று கத்துகிறார். இதில் என்ன உணர்ச்சிவசம் இருக்கிறது? அத்தனையும் லாஜிக்கலான வார்த்தைகள்தான், இல்லையா?
அதனால், இப்படிப் பொதுவாக, ‘ஆண்கள் லாஜிக்கலாக பேசுகிறார்கள், பெண்கள் உணர்ச்சிவசப்படுவதைப் பேசுகிறார்கள்’ என்று பொதுமைப் படுத்துவதெல்லாம் பெண்களை பிராண்டிங் செய்யும் டிபிகல் ஆணாதிக்க முயற்சிதானே தவிர வேறில்லை என்றொரு முடிவுக்கு நாம் வரலாம்!
Men speak logically, while women speak emotionally, especially in romantic relationships...! - இப்படியாக வேண்டுமானால் அந்த சொல்லாடலை மாற்றிக்கொள்வோம்!