முன்பெல்லாம் ஒரு பொருள் நமக்கு அவசியப்படுகிறது என்றால், அது நம்மிடம் இல்லை அல்லது இருப்பது பழுதாகிவிட்டது எனில் சட்டென அருகிலிருக்கும் கடைக்குச் சென்று வாங்கிக் கொள்வோம். அவ்வளவுதான், அந்த வேலை அத்தோடு முடிந்துவிடும். இப்போதெல்லாம் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதென்றால், ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்த வேண்டியதாக இருக்கிறது.
உள்பாவாடையில் என்ன டிசைன் வேண்டிக் கிடக்கிறது என்பது போல, ஒரு எக்ஸாஸ்ட் ஃபேனை வாங்குவதற்கு என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கிறது? ஆனால், பதின்மூன்று வகையான நிறுவனங்களிலிருந்து வரும் நாற்பத்து எட்டு வகையான மாடல்களையும் அலசி ஆராய்கிறோம். அதன் டெக்னிகல் விபரங்கள், அளவுகள், விலை, வாரண்டி, ஒப்பீடு எல்லாவற்றையும் படிக்கிறோம். அந்தப் பொருளை டிசைன் செய்த எஞ்சினியர் கூட அத்தனை விசயங்களைத் தெரிந்துகொண்டிருக்க மாட்டான், நமக்கு அவ்வளவு விசயங்கள் தேவைப்படுகின்றன. ஒரு கட்டத்தில், அது செய்யப்பட்டிருக்கும் தேனிரும்பில் எத்தனை சதவீதம் தேன் கலந்திருக்கிறது என்று அடிமட்டம் வரை அலசி ஆராய வேண்டியிருக்கிறது.
இதில், இன்னொரு முக்கியமான விசயம், அதைப் பயன்படுத்தியோரின் அனுபவ ஆலோசனைகள், ரிவ்யூஸ்! குறைந்த பட்சம் ஐயாயிரம் பேராவது அதை வாங்கி ரேட்டிங் தந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்டார்கள் நான்கைத் தாண்டி, ஐந்தாவதில் பாதி அளவாவது வண்ணமாகிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நிஜத்திலோ, கோடிகளில் நடக்கும் தொழிலாக இந்த ரிவ்யூ தொழில் மாறியிருக்கிறது. யூட்யூபர்கள், இன்ஃப்ளூயன்ஸர்ஸ் எனும் பெயரில், எக்ஸாஸ்ட் ஃபேனில் தொடங்கி, முருங்கைக்காய் பறிக்கிற கத்தி வரையில் எல்லாப் பொருட்களைப் பற்றியும் வானளாவப் புகழ்ந்து விடியோ போட்டு லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.
இவர்களால்தான், எந்தப் பொருள் இப்போது நமக்கு அவசியப்படுகிறது என்று ரிவ்யூ பார்க்க வந்தோமோ, அதை விட்டுவிட்டு, அவர்களின் கலர் கலரான ரீல்ஸுகளையும், விளம்பரங்களையும் பார்த்துத் தேவையற்ற பொருட்களின் மீது நம் கவனம் திசை திரும்பி விடுகிறது.
‘என்னங்க, தலைக்கு மை பூச மருதாணிப் பொடிதானே ஆர்டர் செய்யச் சொன்னேன். இதென்ன மண்தொட்டியை டெலிவரி செய்துவிட்டுப் போகிறான்?’ என்று உங்கள் மனைவி, உங்களைக் கேள்வி கேட்கும்போது, மருதாணிப் பொடியை ஆர்டர் செய்யப்போன நீங்கள்தான், ‘காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ என்ற கதையாக, ‘வீட்டுக்குள்ளேயே மருதாணியை வளர்ப்பது எவ்வளவு எளிது தெரியுமா’ எனும் ரீல்ஸைப் பார்த்து மண்டை குழம்பி, ஆர்டர் போட்ட மண் தொட்டிதான் அது என்று விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
அப்புறம், அவர்களின் இன்னொரு தாரக மந்திரம், Value For Money! ’இந்த சந்தர்ப்பத்தை விட்டால், இந்த விலைக்கு, இதைவிட சிறப்பானது கிடைக்க வாய்ப்பே இல்லை’ என்று ஒருவர் சொன்னால் போதும், நாம் உடனே மயங்கிவிடுகிறோம். தேவையில்லாத பொருட்களையும், அளவையும் நம் மண்டைக்குள் ஏற்றிவிடுகிறார்கள் இவர்கள். இரண்டு டிவி வைத்திருக்கும் நாம், ஒரு புரஜக்டரை வாங்கிப் போட்டால்தான் என்ன, சல்லிசாகத் தெரிகிறதே என்று யோசிக்கிறோம். காலியான ஸ்டேப்ளர் பின் பாக்கெட்டுகளை நாம் வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டோம். பக்கத்துக் கடைக்குப் போனால் 20 ரூபாயில் ஒரு பாக்கெட்டை வாங்கிவிடலாம். ஆனால், ஆன்லைனில் 10 பாக்கெட்டுகள் கொண்ட பெரிய பாக்கெட்டை 190 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறோம். வேல்யூ ஃபார் மணியாம்! அந்த ஸ்டேப்ளர் பின்கள், நமக்குப் பேரன், பேத்திகள் பிறந்து அவர்களின் பள்ளிப்புத்தகத்துக்கு அட்டை போடுவது வரை நிச்சயம் காலியாகப்போவதில்லை!
ஒரு பொருளை நேரில் பார்த்து, தொட்டு அதன் நிஜமான அளவு நம் தேவைக்குப் பொருத்தமாக இருக்கிறதா, வாங்கும் ஃபேனை கிச்சன் சன்னலில் பொருத்திவிட முடியுமா, அல்லது கிச்சன் சுவற்றில் ஓட்டையைப் போட கொத்தனாரைத்தான் தேடி அலைய வேண்டி வருமா, அதன் பில்ட் குவாலிடி எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் நாம் உணர்ந்து விட்டோமானால், இவை எதுவுமே தேவைப்படாது. ஆனால், பொருளை நாம் கற்பனையிலேயே பார்த்தல்லவா முடிவு செய்ய வேண்டியதாகயிருக்கிறது? அதனால்தான் நம் முடிவு சரியாக அமைந்துவிட வேண்டும் என்று இத்தனை வேலைகளைச் செய்கிறோம். அதோடு, அந்தப் பொருள் நாம் எதிர்பார்த்தபடி சிறப்பாக இல்லை என்றால் கூட, நான் சரியாக ஆய்வு செய்துதான் முடிவு செய்தேன், தவறு நம் மீதல்ல என்று நம்மிடருந்தே நாம் தப்பிக்கவும் வேண்டியதிருக்கிறது.
இதில், இன்னொரு குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால், நாம் ஒரு நாவல் படிக்கிறோம். அதில் தரப்பட்டுள்ள தகவல்களை வைத்து அதன் கதைக் களத்தை, மாந்தர்களை நம் மனதில் கற்பனையாக வடித்துக்கொள்கிறோம். பொன்னியின் செல்வன் போல, அசுரன் போல நாம் படித்த நாவல்களை யாராவது படமாக ஆக்கிவைத்தால், அது எப்போதும் நம்மை ஏமாற்றவே செய்கிறது. ஏனென்றால், நமது கற்பனையும், அந்த இயக்குநரின் கற்பனையும் ஒத்துப்போவதேயில்லை. அதைப் போலவே நமது ஆராய்ச்சியின் விளைவாக நாம் வாங்கும் பொருளைப் பற்றிய நம் கற்பனையை, டெலிவரி செய்யப்படும் பொருள் ஒருநாளும் ஈடு செய்யவே முடியாது!
நமது நேரத்தை மிச்சப்படுத்த வந்த ஆன்லைன் பர்ச்சேஸே இப்போது நம் நேரத்தையும், பணத்தையும் அதிகளவில் அள்ளிக்கொள்வதாகத் தோன்றுகிறது. அதனால் அடுத்த முறை, எதையாவது வாங்க வேண்டுமென்றால், இது நம் பக்கத்துக் கடையில், பக்கத்துத் தெருவில் கிடைக்கும் பொருளா என்று பாருங்கள். ஆம் என்றால் அங்கேயே முடித்துவிடுங்கள். உங்கள் கற்பனைத் திறனுக்கான ஒரு வேலையும், நிறைய நேரமும் மிச்சமாகும். இல்லையென்றால் மட்டுமே உங்கள் Value for money வேட்டையைத் தொடருங்கள். வாழ்த்துகள்!