இதயத்துக்கு நல்லதா? 2 பெக் மாயை... இந்தியாவில் பரவியது எப்படி?

பொதுவாக 2 பெக் மது தினமும் அருந்துவது இதயத்துக்கு நல்லதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே மருத்துவ ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
2 பெக் மது இதயத்துக்கு நல்லதா?
2 பெக் மது இதயத்துக்கு நல்லதா?
Published on

மது அருந்துவது குறித்து நீண்ட காலமாக பாசிடிவ் மற்றும் நெகடிவான கருத்துக்கள் நிலவி வருகிறது. குறிப்பாக 2 பெக் மது அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது என்ற கட்டுக்கதை நம் நாட்டில் பரவலாக உள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 1.2 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட தொழிலதிபர் அபிஷேக் விவியாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா, "நான் சில நேரங்களில் மது அருந்துகிறேன். மருத்துவர்கள் கூட இரண்டு பெக் மது அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று கூறுகிறார்கள்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலானது. ஆயிரக்கணக்கானோர் லைக் செய்திருந்தனர். 10 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டிருந்தது. சுனிதாவை பலரும் விமர்சனமும் செய்தனர்.

பொதுவாக 2 பெக் மது தினமும் அருந்துவது இதயத்துக்கு நல்லதா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே மருத்துவ ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. உலக சுகாதார நிறுவனம் 2 பெக் மது எடுத்துக் கொண்டாலும் அது உட்லுக்கு நல்லது அல்ல என்று பலமுறை விளக்கியுள்ளது. ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் நீண்டகால ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில், PLOS நிறுவனம் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், பீர் மற்றும் மதுபானங்கள், கணைய புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. மதுவை புறம் தள்ளுவதால் மட்டுமே இந்தக் கொடிய நோயைத் தடுக்க உதவும் .

ஆல்கஹால் ரத்த சர்க்கரை அளவை அதிகாரிக்கிறது. கல்லீரலின் குளுக்கோஸை உற்பத்தி செய்யும் திறனையும் குறைக்கிறது. நாள்பட்ட நோய்களுக்கான உலகின் முன்னணிக் காரணிகளில் மதுவும் ஒன்றாகும். மதுப் பழக்கம் 15 முதல் 49 வயதுடையவர்களில் 10ல் ஒருவரின் இறப்புக்கு காரணமாகிறது, இது புற்றுநோய், கல்லீரல் நோய், இதய நோய்கள் மற்றும் மனநோயுடன் தொடர்புடையது. பொதுவாக, ஆல்கஹால் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தையோ அல்லது ஆக்ஸிஜன் சப்ளையையோ மேம்படுத்தவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பையை சேர்ந்த இதய மருத்துவர் ஸ்வரப் ஸ்வராஜ் பால் கூறுகையில், அறிவியல் ரீதியாக 2 பெக் ஆல்கஹால் அருந்துவதால் இதயத்துக்கு எந்த பலனும் இல்லை. இது நிரூபிக்கப்படாத ஒரு கருத்து. மருத்துவர்கள் எந்தரீதியிலும் மது அருந்த பரிந்துரை செய்வதில்லை. எங்கள் மருத்துவமனைக்கு ரெகுலராக மது அருந்தி இதய அறுவைசிகிச்சைக்கு வருபவர்கள் , அறுவைசிகிச்சைக்கு பிறகு 2 பெக் மருந்து அருந்தலாமா? என்று கேட்பார்கள். நங்கள் ஸ்ட்ரிக்டாக 'நோ ' சொல்லி விடுவோம். இதய நலத்தை மட்டுமல்ல உடலின் ஒவ்வொரு உறுப்பையும் மது பழக்கம் சிதைத்துவிடும்' என்கிறார்.

மது இதயத்தின் சீரான இயக்கத்தை சீர்குலைத்து, அரித்மியாவுக்கு வழிவகுக்கும், ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் திடீரென அதிகரித்து மரணத்தை கூட ஏற்படுத்தும். காலப்போக்கில் இதய தசையையும் பலவீனப்படுத்துகிறது. நாள்பட்ட இதய செயலிழப்புக்கு காரணமாக அமையும் கடைசியில் இதய மாற்று அறுவை சிகிச்சை அல்லது செயற்கை இதயம் தேவைப்படலாம். கூடுதலாக, மது ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு இரண்டையும் அதிகரிக்கிறது. இதனால், மாரடைப்புக்கான அபாயம் அதிகரிக்கிறது .

மதுவால் இதயத்திற்கு மட்டும் பாதிப்பு இல்லை. மது அருந்துவதால் நினைவாற்றல் இழப்பு, டிமென்ஷியா, கல்லீரல் சிரோசிஸ், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் கணைய அழற்சி ஆகிய நோய்களும் ஏற்படுகிறது. இன்சுலின் உற்பத்தியை சீர்குலைத்து நீரிழிவு பிரச்னைகளை ஏற்படுத்தும். கணைய வீக்கத்துக்கு வழி வகுக்கும். மூளை முதல் சிறுநீரகங்கள் வரை, மது ஒவ்வொரு உறுப்புகளையும் பாதிக்கிறது. புற்று நோயையும் ஏற்படுத்த கூடும்.

2 பெக் மது அருந்துவது கூட ஆபத்தானதுதான். அதோடு, 2 பெக் என்றுதான் தொடங்குவார்கள். ஆனால், நிறுத்த மாட்டார்கள். 2 பெக்குகள் என்ற மாயை மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவில் பரப்பப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உறை பனியின் தாக்கத்தில் ரத்த நாளம் சுருங்குவதை தடுக்க மது அருந்தும் பழக்கம் உருவானது. அந்த சமயத்தில் 2 பெக் பிராந்தி உதவிக்கரமாக இருந்திருக்கலாம். பின்னர், அதுவே விஷமாக மாறி விடும். மதுவை எந்த விதத்திலும் நாட டாக்டர்கள் பரிந்துரைக்க மாட்டோம். அதே போல, புகைபிடிப்பதை நிறுத்த போராடி வருபவர்களும் இதயநோய் நிபுணர் அல்லது மனநல மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும் 'என்று தெரிவித்தார்.

2 பெக்கோ 5 பெக்கோ விஷம் விஷம்தான்!

Puthuyugam
www.puthuyugam.com