செல்லப்பிராணி உங்கள் முகத்தை நக்குகிறதா? #Sepsis

பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசையுடன் 4 நாய்களை வளர்த்தார். இப்போது, அவரின் நிலை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது.
Manjit Sangha
Manjit Sangha
Published on

பிரிட்டனைச் சேர்ந்தவர் மன்ஜித் சங்கா( 52). பார்மசி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பணி முடிந்து வீடு திரும்பியவர் மிகுந்த சோர்வாக உணர்ந்தார். அப்படியே, வீட்டுக்கு வந்தவர் படுக்கையில் படுத்து விட்டார். உடல் நிலை சரியில்லை போல எனக் கருதினார் அவரது கணவர் கமல்ஜித். அடுத்த நாள் காலை பார்த்த போது, மனைவி மயக்க நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். மன்ஜித் மூச்சு விடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே , பதறியடித்தபடி மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் கமல்ஜித். மருத்துவர்கள் அவரை சோதித்த போது, செப்ஸிஸ் நோய் பாதிப்பால், உடல் உறுப்புகள் செயல் இழந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

உடனே 'வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா?' என்று கமல்ஜித்திடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர் . அவரும், 'எனது மனைவிக்கு நாய்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். வீட்டில் நான்கு நாய்கள் வளர்க்கிறோம்' என்று பதில் அளித்துள்ளார். இதையடுத்து, 'உங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களின் உமிழ்நீரிலுள்ள Capnocytophaga canimorsus என்ற பாக்டீரியா உங்கள் மனைவியின் உடலில் பரவியுள்ளது. இதன் காரணமாகவே, உங்கள் மனைவியின் உடல் நிலை மோசமாகியுள்ளது' என்று கூறியுள்ளனர். தொடர்ந்து , மன்ஜித்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க தொடங்கினார். மன்ஜித் கோமா நிலைக்குச் சென்று விட்டார். அவரது இதயம் 6 முறை நின்று போனது. மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்து ஒவ்வொரு முறையும் இதயத்தைத் துடிக்க வைத்தனர். ரத்தம் வேறு உறையத் தொடங்கியது.

தொடர்ந்து, பாக்டீரியா அவரின் உடலில் மேலும் பரவாமல் இருக்க வேண்டுமென்றால், மன்ஜித்தின் இரு கைகள், கால்களை மூட்டுக்கு கீழே அகற்ற வேண்டுமென்று உறுதியாக கூறி விட்டனர். இதைக் கேட்ட கணவர் கமல்ஜித் துடித்து விட்டார். எனினும், 'உங்கள் மனைவியின் உயிரைக் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை' என்று மருத்துவர்கள் கமல்ஜித்துக்கு அறிவுறுத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மன்ஜித்தின் இரு கைகளும், கால்களும் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டன. அதுமட்டுமல்லாமல், மண்ணீரலும் அகற்றப்பட்டது. அவரது உடலில் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் நிமோனியா வேறு தாக்கியது. ஆனாலும், 32 வார சிகிச்சைக்கு பிறகு, மன்ஜித் உயிர் பிழைத்துக் கொண்டார். பின்னர், வீடு திரும்பிய அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப மிகவும் சிரமப்பட்டார். ஆனாலும், மீண்டும் எழுந்து நடப்பேன்... பணிக்குச் செல்வேன் என்று மன்ஜித் சங்கா உறுதியாக நம்புகிறார்.

பொதுவாக நாய்கள் மற்றும் பூனைகளின் வாய் பகுதியில் Capnocytophaga canimorsus என்ற பாக்டீரியா இருக்கும். செல்லப்பிராணிகள் உங்கள் முகத்தை நக்கினால் உங்கள் வாய் வழியாகவோ அல்லது முகத்தில் பரு உடைந்திருந்தாலோ அதன் வழியாக கூட ரத்தத்தில் பரவி விடும். பின்னர், உடலில் உள்ள திசுக்கள், உறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்தும். இதைதான், செப்சிஸ் என்கிறோம்.

நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை இது சேதப்படுத்துகிறது. காய்ச்சல் அல்லது உடல் வெப்பநிலை குறைதல், நடுக்கம், இதயத் துடிப்பு அதிகரித்தல், மூச்சுத் திணறல், உடலில் கடும் வலி மற்றும் குழப்பமான மனநிலை போன்றவை செப்சிஸ் நோயின் அறிகுறிகளாகும். உடனடியாக, சிகிச்சை எடுக்கா விட்டால், உயிரைக் காப்பாற்ற முடியாது. 12 மணி நேரத்துக்குள் மரணத்தை ஏற்படுத்தி விடும்.

வீட்டில் நாய் வளர்க்கும் மக்களே ஜாக்கிரதையாக இருங்கள். நாய்கள் அன்புடன்தான் நமது முகத்தை நக்கும். விளைவுகளை பற்றி அதற்குத் தெரியாது. எனவே, மனிதர்களாகிய நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Puthuyugam
www.puthuyugam.com