ஆபிசில் மாலை நேரத்தில் நீங்கள் ரூ. 20 கொடுத்து வாங்கி சாப்பிடும் சமோசா வாழ்க்கையின் பிற்காலத்தில் 3 லட்சத்துக்கு வேட்டு வைக்கும் என்று டெல்லி டாக்டர் வெளியிட்ட பதிவு வைராலாகி வருகிறது.
வட இந்திய மக்களின் விருப்பமான உணவு சமோசா. வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி கலந்து மசாலாவுடன் எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் உணவு. நமக்கு வடை போல மகராஷ்டிரத்துக்கு வடபாவ் போல , வடஇந்தியாவுக்கு இந்த சமோசாவை சொல்லலாம். எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் சமோசா இடம் பெறாமல் இருக்காது. அந்தளவுக்கு சமோசாவுக்கு வட இந்திய மக்கள் அடிமை. புதினா சட்னியுடன் இந்த சமோசாவை வட இந்திய மக்கள் வெளுத்து வாங்குவார்கள். தற்போது, தமிழகத்திலும் கூட பரவலாக சமோசா விரும்பி சாப்பிடப்படுகிறது. சிலர் அவசரமாக மதியம் சாப்பிட நினைத்தால் 2 சமோசாவை சாப்பிட்டு விட்டு மீண்டும் பணிக்கு சென்று விடுவார்கள். காரணம் 2 சமோசா சாப்பிட்டால் குறைந்தது 3 மணி நேரம் பசி எடுக்காது என்பதும் இதற்கு ஒரு காரணம்.
இப்படி மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட சமோசா பற்றி, டெல்லியை சேர்ந்த இதய நோய் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். சைலேஷ் சிங் என்பவர் வெளியிட்ட எக்ஸ் பதிவுதான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவை ஆயிரக்கணக்கனோர் பகிர்ந்தும் வருகின்றனர். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது , "நாள் ஒன்றுக்கு நீங்கள் 20 ரூபாய் கொடுத்து மொறு மொறு சமோசாவை சாப்பிடுகிறீர்கள். ஆண்டுக்கு 300 சமோசா என்று வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகளில் 4, 500 சமோசாக்களை வயிற்றுக்குள் தள்ளுகிறீர்கள். அப்படியென்றால், 15 ஆண்டுகளுக்கு சமோசா சாப்பிட மட்டும் 90 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறீர்கள். நீங்கள் பணத்தை நல்ல உணவுக்காக செலவழிக்கவில்லையென்றால், உங்கள் தமனி 400 சதவிகிதம் வட்டியுடன் அதை செலவழிக்க வைக்கும். ஒரு ஆன்ஜிபிளாஸ்டி அல்லது இதயத்தை சீராக இயங்க வைக்க உதவும் கருவிக்காகவே நீங்கள் 3 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியது இருக்கும். ஆபிசில் மொறு மொறு சமோசாவை சாப்பிடுவது உங்களுக்கு வழக்கமாகி விடும். ஆனால், அதுவே உங்கள் இதயத்தை 'வீக்'காக மாற்றி விடும். நீங்கள் உங்கள் பணத்தை மட்டும் இழக்கவில்லை. உங்களது உடல் நலத்தையும் இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் " என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் சமோசாவை சாப்பிடும்போது யோசிக்கவே முடியாத அளவுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைகிறது என்பது உண்மைதான். தரமற்ற எண்ணெய், வினிகர், காய்கறிகள் கொண்டு சமோசாவை தயாரித்தால் நிச்சயம் நமது உடல் நலம் பாதிக்கப்படும். சமோசா கெட்டுப் போகாமல் இருக்கவே வினிகரை அதில் கலக்கின்றனர். வினிகர் பாத்திரங்களை தேய்க்கப் பயன்படும் புவுடர்கள், சோப்புகளில் கலக்கப்படும் ஒரு பொருள். அதோடு, எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சமோசாவை பொறித்து எடுத்தால், கெமிக்கல் மாற்றம் ஏற்படுகிறது. இந்த சமயத்தில்தான் ஹைட்ரோ கார்பன்கள் போன்ற நச்சு மிகுந்த காம்பவுண்டுகள் உருவாகிறது. இதனால், உடலில் வீக்கம், செல்களுக்கு சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறி விடுகிறது. இவை அனைத்துமே இதய நோய், டயாபட்டீஸ், புற்றுநோய் தாக்க காரணமாக அமைகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணெய் நிச்சயமாக செல்களுக்கும், டி.என்.ஏ.க்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகமாகி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதய நோய் நிச்சயமாக தாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதே போல மற்றொரு பதிவில் டாக்டர். சைலேஷ் சிங் மக்கள் தங்கள் உடல் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அந்தப் பதிவில், 'நான் 25வயதில் செட்டிலானதும் பிட்னஸ்ஸை மெயின்டயின் பண்ணுவேன். 35 வயதானதும், இந்த புராஜக்ட்டை முடித்ததும், உடற்பயிற்சி செய்வேன். 45 வயதானதும் , குழந்தைகள் படிப்பை முடித்தவுடன் நடைபயிற்சி செய்வேன். 55 வயதானதும் ஓய்வுக்கு பிறகு வாக்கிங் போவேன். இப்படி, உடலை பிட்னஸ்ஸாக வைத்துக் கொளும் விஷயத்தில் மக்கள் காலத்தை தள்ளி போட்டுக் கொண்டே இருக்கின்றனர். முடிவில் 65 வயதில் இறந்தும் விடுகின்றனர். எனவே, நீங்கள் வகுக்கும் காலண்டருக்கு உங்களது உடல் காத்திருக்காது ' என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
பணத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போல உடல் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது என்பதை டாக்டர். சைலேஷ் சிங்கின் பதிவு எடுத்துக் காட்டுகிறது.