இரண்டு நிமிட மேஜிக்: ஒரு நல்ல டிரெய்லருக்கான சிம்பிள் டிப்ஸ்! #MovieTrailer

ஒரு திரைப்படம் மூன்று மணிநேர அனுபவமாக இருக்கலாம். ஆனால், அந்த அனுபவத்திற்குப் பார்வையாளர்களை இழுத்து வருவது வெறும் இரண்டு நிமிட டிரெய்லர்தான். சினிமா உலகில் ஒரு படம் வெளியாகும் முன் அதன் மீதான எதிர்பார்ப்பை உருவாக்குவது டிரெய்லரின் முக்கியமான வேலை.
Trailer Out
Trailer OutFreePik
Published on

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வெளியான, ’ஹவுஸ்மேட்ஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியான போது நடந்த சம்பவம் இது. ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்த போது, நண்பர் அவரது டிவியில் அதைப் போட்டுக் காண்பித்துவிட்டு ’எப்படி இருக்கிறது டிரெயிலர்?’ என்று கேட்டார். 

‘என்ன ஏதாச்சும் பேய்ப்படமா? சுமாரா இருக்கு.’ என்றேன் சுவாரசியமில்லாமல்!

அந்தப் படம் இந்தந்த மாதிரி ஒரு ஃபேண்டஸி பிக்சன் கதைங்க, என்றதும் ஆச்சரியப்பட்டுப் போனேன். 

‘என்னங்க இது அநியாயமா இருக்கு? நீங்க சொன்ன கதையைக் கேட்டதுமே படத்தைப் பார்க்கணும் போலிருக்கு. இதுக்குப் போயி இப்படிப் பேய்ப்படம் மாதிரி டிரெயிலர் கட் பண்ணி வைச்சிருக்காங்க’ என்றேன்.

ஒரு திரைப்படம் மூன்று மணிநேர அனுபவமாக இருக்கலாம். ஆனால், அந்த அனுபவத்திற்குப் பார்வையாளர்களை இழுத்து வருவது வெறும் இரண்டு நிமிட டிரெய்லர்தான். சினிமா உலகில் ஒரு படம் வெளியாகும் முன் அதன் மீதான எதிர்பார்ப்பை உருவாக்குவது டிரெய்லரின் முக்கியமான வேலை. சில நேரங்களில் ஒரு படத்தின் வெற்றி அல்லது தோல்வி கூட அதன் முதல் டீசர் அல்லது டிரெய்லர் வெளியான தருணத்திலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது எனலாம். அதனால்தான் டிரெய்லர் என்பது ஒரு நுட்பமான உளவியல் டிராப் என்று கருதப்படுகிறது. பார்வையாளரின் கவனம், ஆர்வம், உணர்ச்சி, எதிர்பார்ப்பு இவையனைத்தையும் இரண்டு நிமிடங்களில் தூண்டிவிட்டாக வேண்டும்.

Trailer Image
Trailer ImageFreePik

முதல் 10 நொடிகள்- ஹூக்!

இன்றைய டிஜிட்டல் உலகில் மனிதர்களின் கவனக்குவிப்பு நேரம் மிகவும் குறுகிவிட்டது. சமூக ஊடகங்களில் நாம் இடைவிடாமல் ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும் காலம் இது. அதனால், ஒரு டிரெய்லரின் முதல் 5 முதல் 10 நொடிகள் மிக முக்கியமானதாகிறது.

அந்த தொடக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான காட்சி, ஒரு அதிர்ச்சியான தருணம், அல்லது ஒரு புதிரான வசனம் இடம்பெற வேண்டும். இதுவே Hook எனப்படுகிறது. இந்தத் தொடக்கம் பார்வையாளரின் மூளையில் டோபமைன் (Dopamine) சுரப்பை தூண்டி, ‘அடுத்து என்ன’ என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. அந்த ஆர்வமே முழு டிரெய்லரையும் பார்க்கச் செய்கிறது.

பலர் செய்யும் ஒரு தவறு, டிரெய்லரிலேயே முழுக் கதையையும் சொல்லிவிடுவது அல்லது என்ன ஜானர் கதை என்பதைக் கூட சொல்லாமல் விடுவது. அதுதான் மேலே கூறிய ‘ஹவுஸ்மேட்ஸி’லும் நிகழ்ந்திருக்கிறது.

உளவியல் ரீதியாக மனிதர்கள் கதையை விட உணர்ச்சிகளுக்கே அதிகமாகப் ஆட்படுகிறார்கள். ஒரு ஹாரர் படத்தின் டிரெய்லர் பயத்தை விதைக்க வேண்டும். ஒரு காதல் படத்தின் டிரெய்லர் ஏக்கத்தை உருவாக்க வேண்டும். ஒரு ஆக்ஷன் படத்தின் டிரெய்லர் அட்ரினலினை சுரக்கச் செய்ய வேண்டும். பார்வையாளருக்கு கதை முழுவதும் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்தப் படம் தரும் மூட் (Mood) அல்லது உணர்வு அவரை திரையரங்குக்குள் கொண்டு வரும்.

வலுவான தொடக்கம், தெளிவான ஜானர் வெளிப்பாடு இவற்றோடு ஒரு நல்ல டிரெயிலருக்கான குணங்களாக மேலும் சிலவற்றைச் சொல்கிறார்கள்.

1. தகவல் இடைவெளி : ஒரு நல்ல டிரெய்லர் எப்போதும் ஒரு கேள்வியை உருவாக்க வேண்டும். ஒரு மோதலைக் காட்டி அதன் முடிவைக் காட்டாமல் விடுவது, அதாவது ஒரு முக்கியமான தருணத்தைப் பாதியில் நிறுத்துவது! இது பார்வையாளர்களின் மனதில் ஆர்வத்தைத் தூண்டும்.

2. இசையும் ஒலியும்: ஒரு டிரெய்லரின் உணர்ச்சியை சரியான வகையில் உருவாக்குவதில் பின்னணி இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இசையின் வேகம் அதிகரிக்கும்போது காட்சிகளின் வேகமும் அதிகரிக்கும். சில நேரங்களில் திடீர் அமைதி கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

3. கட்டமைப்பு: ஒரு நல்ல டிரெய்லருக்கு ஒரு ரிதம் இருக்கும். பொதுவாக அதன் அமைப்பு, ஒரு சுவாரசியமான தொடக்கம், அதன்பின் கதை மற்றும் வகைமையின் அறிமுகம், பின்னர் வேகமான மாண்டாஜ் காட்சிகள், இறுதியில் ஒரு சக்திவாய்ந்த முடிவு என்று அமைந்திட வேண்டும். இந்தக் கட்டமைப்பு பார்வையாளர்களின் உணர்ச்சிகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இறுதியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விடும்.

4. கடைசிக் காட்சித் துண்டு: டிரெய்லரின் இறுதித் தருணம் மிகவும் முக்கியமானது. அது, ஒரு வலுவான வசனமாக, ஒரு சக்திவாய்ந்த காட்சியாக, ஒரு அதிர்ச்சியான திருப்பமாக - எதுவாக இருந்தாலும், பார்வையாளர்களின் மனதில் நிற்கும் வகையில் இருக்க வேண்டும்.

ஒரு சிறந்த டிரெய்லர் என்பது வெறும் விளம்பரம் அல்ல. அது ஓர் உளவியல் அழைப்பு. இரண்டு நிமிடங்களில் ஒரு உலகத்தை காட்டி, ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு உணர்ச்சியை உருவாக்கி, ஒரு முடிவை எடுக்க வைக்கும் கலை.

எப்போதும் அந்த முடிவு ஒன்றேதான் - ‘இந்தப் படத்தை நான் பார்த்தே ஆக வேண்டும்.’!

Puthuyugam
www.puthuyugam.com