தமிழ்த் திரையுலகில் திகில்படங்களை இரண்டு காலக்கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று விட்டலாச்சார்யா காலம். மற்றொன்று தக்காளி சீனிவாசன் காலம். விட்டலாச்சார்யா எடுத்த திகில் படங்களில் 'ஜெகன் மோகினி' தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஓடியது. 'லெக்கின்ஸ் 'அணிந்த பேய், மக்களை பயம் காட்டியது. சிரிக்கவும் வைத்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டர்களுக்கு வந்து படத்தைப் பார்த்து சென்றனர். தனது படங்களில் ஜெயமாலினியை எப்படி பயன்படுத்த வேண்டுமோ... அப்படி , பயன்படுத்திக் கொள்வார் விட்டலாச்சார்யா. தொழில்நுட்பம் குறைந்த அந்த காலகட்டத்திலேயே அசத்தலாக மாயாஜால காட்சிகளை எடுத்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் விட்டலாச்சார்யா. இவரது காலகட்டத்துக்குப் பிறகு, தமிழ்த் திரையுலகில் பேய்ப்படங்களுக்கு சற்று பிரேக் விழுந்தது. இந்த சமயத்தில், தமிழ்த் திரையுலகுக்குள் வந்தவர்தான் தக்காளி சீனிவாசன். தக்காளிப்பழம் போல சிவப்பாக 'பொதக்' 'பொதக்' என்று இருந்ததால் பெயருக்கு முன்னால், 'தக்காளி' ஒட்டிக் கொண்டது.
தயாரிப்பாளர் , இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகள் இவரிடத்தில் உண்டு. முதலில் சாதாரண படங்களை எடுத்த தக்காளி சீனிவாசன் ஒரு கட்டத்தில் திகில்ப்படங்களுக்கு மாறினார். இவர், தயாரித்த படம்தான் 1989 ம் ஆண்டு வெளியான 'நாளை மனிதன்'. ஜெய்சங்கர், பிரபு, அமலா, அஜய் ரத்தினம் (அறிமுகம்) நடிப்பில் வேலு பிரபாகரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் தமிழ் ரசிகர்களை மிரள வைத்தது. குறிப்பாக, அஜய் ரத்தினத்தின் கேரக்டர் குழந்தைகளை மிரட்டியது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'அதிசய மனிதன்' படத்தையும் தக்காளி சீனிவாசன் தயாரித்தார். இதிலும், கடலோரக் கவிதைகள் ராஜா, சரண்ராஜ், ராதாரவி, நிழல்கள் ரவி, கௌதமி , கோவை சரளா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்தது. இப்போது, இந்தியன் பார்ட் 1, இந்தியன் பார்ட் -2 என்று யோசிப்பதற்கு முன்னரே, தமிழ் திரையுலகில் இரண்டாம் பாகத்தை அறிமுகப்படுத்தியவர் இந்த தக்காளி சீனிவாசன்.
தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என ஜொலித்த தக்காளி சீனிவாசனுக்கு ஒரு படத்தை இயக்க வேண்டுமென்பதுதான் லட்சியமாக இருந்தது. அப்படி, அவர் மெனக்கெட்டு இயக்கிய படம்தான் 1991ம் ஆண்டு வெளிவந்த 'ஜென்ம நட்சத்திரம்'. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலக்கட்டத்தில் திகில்படங்களை எடுப்பது எளிது. ஆனால், அந்த காலகட்டத்திலேயே திகில்ப்படம் என்றாலே, 'ஜென்ம நட்சத்திரம்' தான் என்று சொல்லுமளவுக்கு இந்தப் படம் தமிழ் ரசிகர்களை பயம் கொள்ள வைத்தது. சாத்தானின் குறியீடுகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையும் (பேபி விசித்ரா) அதற்குத் துணையாக இருக்கும் வேலைக்காரப் பெண்ணும் செய்யும் பயங்கரமான காரியங்களைச் சொல்வதுதான் இந்தப் படத்தின் கதை. ஆங்கிலத்தில் வெளிவந்த 'ஓமன்' படத்தின் தழுவலாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில், இந்தப் படத்தை இயக்கியிருந்தார் தக்காளி சீனிவாசன்.
இந்தப் படத்தை பார்த்து விட்டால் உறங்கும் போது, இரவு நேரக் கல்லறைத் தோட்ட காட்சிகளும் அந்தக் குழந்தையும் பார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் அந்த வேலைக்காரப் பெண் கேரக்டரும் நினைவுக்கு வந்து பீதியை கிளப்பும். இப்படி, திகில்படங்களை வித்தியாசமான கோணத்தில் கொடுத்த தக்காளி சீனிவாசன் கமல்ஹாசனின் 'சூரசம்ஹாரம்' படத்திலும் நடித்து அசத்தியிருப்பார். 1995ம் ஆண்டு 'விட்னஸ் 'என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ரகுவரன் நடித்திருந்தார். கடைசியாக 2011ம் ஆண்டு நாசர் நடித்த 'அடுத்தது ' என்ற படத்தை இயக்கினார். அதற்குப்பிறகு முற்றிலும் திரையுலகில் இருந்து விலகி விட்டார். பின்னர், பெங்களூருவுக்கு சென்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்தார். மனித நேய சேவைகளிலும் ஈடுபட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் (மார்ச் 10) உடல்நலக்குறைவு காரணமாக, திடீரென காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
'ஜென்மநட்சத்திரம்' தந்தவர் நட்சத்திரங்களுடன் கலந்து விட்டார்... ஆழ்ந்த இரங்கல்கள்!