நடிப்புக்கும் காமெடிக்கும் வில்லத்தனத்துக்கும் பெயர்போன நடிகர்களில் ஒருவர் கலாபவன் மணி. தமிழ், மலையாள ரசிகர்களின் மத்தியில் கலாபவன் நடிப்புக்கு தனி மரியாதை உண்டு. அத்தகைய நடிகர் ஒரு நாள் திடீரென இறந்து போவார் என்று யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த 2016ம் ஆண்டு அவர் உலகத்தை விட்டு மறைந்தார். வாழும்போது சக மனிதர்களை அன்புடன் நடத்தியவர் கலாபவன் மணி. இவருக்கு நிம்மி என்ற மனைவியும் ஸ்ரீலக்ஷ்மி என்ற மகளும் உண்டு.
கலாபவன் மணிக்கு தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமென்பது ஆசை. மேலும், உயிரோடு இருக்கும் போது, 'மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு முடிந்தளவு சேவை செய்ய வேண்டும் ' கூறியே மகளை வளர்த்து வந்துள்ளார். கலாபவன் மணி இறக்கும் போது, அவரது மகள் ஸ்ரீலக்ஷ்மி 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் இறந்து 10 ஆண்டுகள் கழித்து டாக்டராக மாறி தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளார் ஸ்ரீலக்ஷ்மி.
முன்னதாக, டாக்டருக்கு படிப்பதற்கு நீட் தேர்வு எழுத 2 வருடங்கள் பயிற்சியும் எடுத்தார். எர்ணாகுளத்திலுள்ள ஸ்ரீநாராயணா மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்தது. தொடர்ந்து , மகளின் படிப்புக்காக கலாபவன் மணியின் மனைவி நிம்மி சாலக்குடியில் இருந்து எர்ணாகுளத்தில் வாடகை பிளாட்டில் குடியேறினர்.
சாலக்குடியில் உள்ள 'மணி கூடாரம்' என்ற அவரது சொந்த வீட்டில் நிம்மியின் பெற்றோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், ஸ்ரீலக்ஷ்மி டாக்டர் படிப்பை முடிந்து விட்டு, பயிற்சி எடுக்க தொடங்கியுள்ளார். இது, கலாபவன் மணியின் குடும்பத்தினரை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ''எனது சகோதரரின் மகள் அவரின் தந்தையின் கனவை 10 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றியுள்ளார்.எனது சகோதரர், தனது மகள் இதை சாதிப்பார் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. என்னையும் எனது சகோதரர் ஓவியப் படிப்பில் பி.ஹெச்டி படிக்க ஊக்கப்படுத்தினார். அதையும் நான் நிறைவேற்றியுள்ளேன். தற்போது, கலாமண்டலத்தில் நான் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறேன்'' என்று கூறியுள்ளார்.
கலாபவன் மணியின் மகள் படிப்பை நிறைவு செய்தவுடன், நிம்மி எர்ணாகுளம் பிளாட்டை காலி செய்து விட்டு, சாலக்குடியிலுள்ள சொந்த வீடான மணி கூடாரத்துக்கு மீண்டும் திரும்பி விட்டார். கலாபவன் மணி உயிரோடு இருக்கும் போது, தினமும் நண்பர்கள் வருகை, உதவி கேட்டு வருபவர்கள் என அந்த வீடு எப்போதும் கல கலகலப்பாக இருக்கும். அவரது, மறைவுக்கு பிறகு, நெருக்கமான நண்பர்கள் சிலர் மணி கூடாரத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள கலாபவன் மணியின் சிலை அருகே வந்து சிறிது நேரம் அமர்ந்து, அவரின் நினைவுகளை அசை போட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனராம்.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்த கலாபவன் மணி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். திருச்சூர் மாவட்டம் சாலக்குடியிலுள்ள பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். கல்லீரல் பாதிப்பு இருந்த போதும், தொடர்ந்த மது அருந்தி வந்ததால், அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டது. இறக்கும்போது அவருக்கு வயது 45 மட்டுமே!