"நான் நடிக்க வரும்போதே, கமல்ஹாசன் மிகப்பெரிய ஸ்டார். அவரைப்போல வளர வேண்டும், சம்பளம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்” என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இது துல்லியமான உண்மையா?
கமல்ஹாசனுக்கு இருந்த, சிவாஜி, எம்ஜியாரோடு நடித்த குழந்தை நட்சத்திரம் எனும் புகழ், பின்னாளில் அவர் ஹீரோவாக அறிமுகமாக அவருக்கு உதவவில்லை. 1960களின் இறுதியிலும் 1970களின் ஆரம்பத்திலும் கமலுக்கு ஒரு தெளிவான பாதை அமையவில்லை. நடனத் துறையில் பணியாற்றி, சினிமா வளையத்துக்குள் தொடர்ந்து இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். குறுகிய திரைநேரங்கள், சிறிய கதாபாத்திரங்கள் என 1973 வரை குறிப்பிடத்தக்க அளவில் பெரிய வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலைமையில் அவருக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது 1975ல் வெளியான அபூர்வ ராகங்கள். இதுவே கமலுக்கு முழுமையான ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்த படம். அதே படத்தில் தான் ரஜினிகாந்த்தும் ஒரு முக்கியமான சிறிய பாத்திரத்தில், அறிமுகமாகிறார்.
பிறகெப்படி, ரஜினிகாந்த் அப்படி ஒரு ஸ்டேட்மெண்டைச் சொல்லமுடிகிறது?
அதற்கான பதில் அடுத்த 3 ஆண்டுகளான, 1976, 1977, 1978ம் வருடங்களில்தான் ஒளிந்திருக்கிறது.
அப்போதுதான் சம்பவம் செய்திருக்கிறார் கமல்ஹாசன். அபூர்வ ராகங்களைத் தொடர்ந்து இரண்டு, இரண்டரை வருடங்களுக்குள் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கமல். தமிழில் மன்மதலீலை, அவர்கள், 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், அவள் அப்படித்தான், நிழல் நிஜமாகிறது போன்ற குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்கள் அவரது பரப்பை பெரிய அளவில் விரிவுபடுத்தின. அதே சமயம் மற்ற மொழிகளிலும் அவர் தடம் பதித்தார். மரோசரித்ரா (தெலுங்கு) எனும் பெருவெற்றி, கோகிலா (கன்னடா), மதனோற்சவம் (மலையாளம்) என தென்னக அளவில் வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். 1981ல் ஏக்துஜேகேலியே எனும் இந்திப் படத்தின் மூலம் இந்தியாவையே கவனம் ஈர்த்தார்.
அதே நேரம், ரஜினியும் வாய்ப்புக்காக காத்துக் கிடந்தவர் அல்ல, அபூர்வ ராகங்களில் அறிமுகமான அடுத்த ஆண்டே கே. பாலச்சந்தர் இயக்கி, கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடித்த மூன்று முடிச்சு படத்தின் ஹீரோவே அவர்தான். என்னவொன்று, சற்று நெகடிவான ஹீரோ, அவ்வளவுதான். கமல்ஹாசன் நான்கு மொழிகளிலும் ஹீரோவாக நடித்த அதே 3 வருடங்களில், அதே நான்கு மொழிகளிலும் இரண்டாவது ஹீரோ, சற்று நெகடிவ் பாத்திரம், முழுமையான வில்லன் என மிக வேகமாக வளர்ந்து தனது தனித்துவத்தைக் காட்டி 1978க்குப் பிறகு பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் மூலமாக முழுமையான ஹீரோவாகிவிடுகிறார் ரஜினிகாந்த். அதன் பின்னும் வில்லனாகவும், இணை கதாபாத்திரங்களிலும் ரஜினி நடித்துவந்தாலும், 1980க்குப் பிறகுதான் அவற்றைத் தவிர்த்து முழுமையான ஹீரோவாக ஆகிறார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், இப்படியொரு பெரிய ஸ்டாராக ஆகும் முன்பாகவே, ‘சூப்பர்ஸ்டார்’ எனும் பட்டம் 1978லேயே ரஜினிக்குக் கொடுக்கப்பட்டது.
கமல்ஹாசன், வயதில் தன்னை விடச் சிறியவராக இருப்பினும், தன்னை விட இரண்டே வருடங்களுக்கு முன்னர்தான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவராக இருப்பினும், 1976, 77, 78ம் ஆண்டுகளில் கமல்ஹாசன் எடுத்த விஸ்வரூபம்தான், ரஜினிகாந்துக்கு அப்படியொரு மனப்பிம்பத்தைத் தோற்றுவித்திருக்க முடியும்.
அதன் பிறகும் ஓரிரு வருடங்கள் நட்புக்காக இருவரும் மற்றவர் படங்களில் நடிக்கத்தான் செய்தார்கள். அது 1985ல் வெளியான கிராஃப்தார் எனும் இந்திப் படத்தோடு நிறைவுக்கு வந்தது. அதன் பின், ரஜினிகாந்த், முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, மூன்று முகம் என அவருக்கான தனி கமர்ஷியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். கமல்ஹாசனோ வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, ராஜபார்வை என அவருக்கான கலைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். 2000 வரை இருவரும், தமிழ் ரசிகர்களுக்கான சிறப்பான கமர்ஷியல், ஆர்டிஸ்டிக் அனுபவத்தைக் கொடுக்க மிகக்கடுமையாக போட்டி போட்டுக்கொண்டார்கள்.
2000க்குப் பிறகு இருவருமே ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தனர். 2000லிருந்து, 2005 வரை இறங்குமுகத்திலிருந்த ரஜினி மீண்டும் சந்திரமுகி படத்தின் மூலம் எழுச்சியடைந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் அவரது வலிமையான இருப்பை பறைசாற்றுகிறது. போலவே 2013க்குப் பின்னர் பெரும் தொய்வைச் சந்தித்த கமலுக்கும் 2022ல் வந்த விக்ரம் புதிய உயிர்ப்பை அளித்தது.
எத்தனையோ வெற்றி தோல்விகளை, ஏற்ற இறக்கங்களைத் தங்கள் திரை வாழ்வில் இவ்விருவரும் கடந்து வந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், உச்சத்தில் இருப்போர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக, போட்டி வேறு, பொறாமை வேறு எனும் சொல்லாடலுக்கேற்ப நட்பையும், கண்ணியத்தையும் காத்து வந்திருக்கிறார்கள். அவர்களின் கடைசி இன்னிங்ஸில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பது ரசிகர்களாகிய நம்மை விடவும், அவர்களுக்கே ஒரு பெரும் சுவாரசியத்தையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கும் என்று நம்பலாம்!.