மக்களே கட்டிக்கொண்ட தியேட்டர்! #Kerala

கேரளத்தில் முதன்முதலாக ஊர்ப்பஞ்சாயத்து ஒன்று, தங்கள் மக்களுக்காக தியேட்டர் ஒன்றை கட்டி, திறக்கப் போகிறது.
Galaxy Cinema Theatre
Galaxy Cinema Theatrekeralakaumudi.com
Published on

தமிழகத்தில் உதகையிலுள்ள பூங்கா சாலையில் அசெம்பிளி ரூம்ஸ் என்ற சினிமா தியேட்டர் இயங்கி வருகிறது. 1886ம் ஆண்டு சிறிய நாடக அரங்கமாக இது தொடங்கப்பட்டது. உதகையில் செட்டிலான பிரிட்டிஷாருக்கான கலை நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டன. 1922ம் ஆண்டு இந்த அரங்கை லேடி வெல்லிங்டன் வாங்கி, கலை அரங்காக மாற்றி உதகை மக்களிடம் ஒப்படைத்தார். அப்போதிருந்து , மாவட்ட நிர்வாகமே ஒரு டிரஸ்டை ஏற்படுத்தி இந்த தியேட்டரை நிர்வகித்து வருகிறது. தமிழகத்தின் மிகப் பழமையான தியேட்டராக இருந்தாலும் இன்று வரை செவ்வனவே நவீன வசதிகளுடன் இந்தத் தியேட்டர் இயங்கி வருகிறது. அனேகமாக, தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான ஒரே தியேட்டர் இதுவாகத்தான் இருக்கும். இங்கு, பெரும்பாலும் ஆங்கிலப்படங்களே திரையிடப்படுகின்றன. அவ்வப்போது, தமிழ், இந்தி திரைப்படங்களும் வெளியாகிறது. தற்போது, அசெம்பிளி ரூம்ஸ் தியேட்டர் போலவே, கேரளத்தில் ஊர் பஞ்சாயத்து ஒன்று தங்களுக்கு சொந்தமாக தியேட்டர் ஒன்றைக் கட்டியுள்ளது. இதன் பின்னணி என்னவென்று பார்க்கலாம்.

Ooty Assembly Rooms Theatre
Ooty Assembly Rooms Theatre

பத்தனம்திட்டா மாவட்டத்தில் சீதாதோடு என்ற சிறிய நகரம் உள்ளது. அடர்ந்த காடுகள் இந்த நகரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. நகரைச் சுற்றிலும் வனவிலங்குகளும் அதிகம் வசிக்கின்றன. இந்த நகரத்தில் 1985ம் ஆண்டு முதல் பிரியா என்ற சினிமா தியேட்டர் இயங்கி வந்தது. கடந்த 2005ம் ஆண்டு இந்த தியேட்டர் மூடப்பட்டு விட்டது. இதன் காரணமாக மக்கள் சினிமா பார்க்க வேண்டுமென்றால் 40 கி.மீ காட்டு வழியாக பயணித்து பத்தனம்திட்டா போன்ற பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால், நகரில் தியேட்டர் இல்லாததை மக்கள் ஒரு பெரும் குறையாக கருதத் தொடங்கினர். இதையடுத்து, சீதாதோடு பஞ்சாயத்து சார்பாகவே, தியேட்டர் கட்ட முடிவெடுக்கப்பட்டது. சீதாதோடு மார்க்கெட் ஜங்ஷன் பகுதியில் ரூ. 17 கோடி செலவில் ஊர்ப் பஞ்சாயத்து சார்பில், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்று கட்டப்பட்டது.

இந்த ஷாப்பிங் காம்ப்ளெக்சுக்குள் 143 இருக்கைகளுடன் நவீன வசதிகளுடன் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தியேட்டருக்கு 'கேலக்சி சினிமா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 4k லேசர் புரோஜெக்டர், டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் என்று நகரப்பகுதிகளிலுள்ள நவீன தியேட்டர்களுக்கு சவால்விடும் வகையில் இந்த தியேட்டர் கட்டப்பட்டுள்ளது. இதைக் கட்ட, மொத்தம் 6 கோடி செலவாகியுள்ளது. வருகிற 28ம் தேதி கேரள அமைச்சர் ராஜேஷ் முன்னிலையில், நடிகை பாவனா இந்தத் தியேட்டரை திறந்து வைக்கிறார். கேரளாவில் ஊர்ப் பஞ்சாயத்து நடத்தும் முதல் தியேட்டர் என்ற பெருமையை கேலக்சி சினிமா பெற்றுள்ளது.

"சீதாதோடு பகுதியைச் சுற்றி கொன்னி யானைகள் முகாம், கவி, பெருந்தேனருவி போன்ற ஏராளமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இவற்றைக் காண வருபவர்கள் சீதாதோடு நகரத்தில்தான் தங்குவார்கள். சுற்றிலும் அடர்ந்த வனம் இருப்பதால் தனியார்கள் யாரும் இங்கு முதலீடு செய்ய முன்வருவதில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில்தான் முதல் தியேட்டர் உள்ளது. இதன் காரணமாக, முதியவர்கள் தியேட்டர் சென்று சினிமா பார்க்கும் வாய்ப்பே இல்லாமல் இருந்தது. சுற்றுலாப்பயணிகளுக்கும் தியேட்டர் இல்லையே என்கிற குறையும் இருந்தது. தற்போது, அந்தக் குறை தீர்ந்து விட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்திலேயே வேறு எந்த தியேட்டரிலும் 4 கே புரோஜெக்டர் கிடையாது. ஆனால், நாங்கள் டெக்னாலஜியிலும் முன்னணியில் இருக்க விரும்பினோம். செய்வதைச் சரியாக செய்ய வேண்டுமென்று நினைத்தோம். அதனால், 4 கே புரோஜக்டரையும் வாங்கியுள்ளோம். இப்போது, எங்கள் கனவு நிறைவேறியுள்ளது'' என சீதாதோடு பஞ்சாயத்து துணைத் தலைவர் ஜோபி மகிழ்சியுடன் தெரிவித்துள்ளார்.

Puthuyugam
www.puthuyugam.com