நடிகை பிரதியுஷா விஷமருந்தி மரணம்; உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம்!

விஷம் அருந்திய பிறகு, உயிர் வாழ ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் , காதலர்கள் இருவரும் காரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
Actress Prathyusha
Actress Prathyushaprathyusha.org
Published on

நடிகை பிரதியுஷா தமிழில் முரளியுடன்' மனுநீதி', விஜயகாந்துடன் 'தவசி ' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் , தனது நடிப்பில் பிஸியாக இருக்கும்போதே காதலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்.

நடிகை பிரதியுஷா, சித்தார்த் என்ற கல்லூரி மாணவரைக் காதலித்து வந்துள்ளார். ஆசிரியையான தாயார் சரோஜினிதேவியிடம் தனது காதலைப் பற்றி கூறியுள்ளார். அப்போது, அவரின் தாயார், 'இப்போதுதான் நிறைய தமிழ்ப்படங்களில் கமிட் ஆகியுள்ளாய். முதலில் பணம் சம்பாதி, சில ஆண்டுகள் கழித்துத் திருமணம் செய்து கொள்ளலாம் ' என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், சித்தார்த்தின் பெற்றோருக்கு, இந்தத் திருமணத்தில் சம்மதமில்லை என்று தெரியவந்தது. பிரதியுஷாவை தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை. நடிகை என்பதால், சித்தார்த்தின் தாயாருக்கு, பிரதியுஷாவைப் பிடிக்கவில்லை என்பதும் காரணமாகக் கூறப்பட்டது. கடந்த 2002 ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி ஹைதரபாத்தில் பியூட்டி பார்லருக்கு சென்ற பிரதியுஷா, அப்படியே தனது காதலரான சித்தார்த்தைச் சந்தித்துள்ளார். பின்னர், மருந்துக் கடை ஒன்றில், பெஸ்டிசைட் விஷ பாட்டிலை சித்தார்த் வாங்கியுள்ளார். தொடர்ந்து, காரில் வைத்து இருவரும் விஷம் குடித்துள்ளனர். விஷம் குடித்த பிறகு, இருவருக்கும் உயிர் வாழ ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சித்தார்த் காரை ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு, இருவரும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், நடிகை பிரதியுஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாயார் சரோஜினி தேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதறியபடி , மருத்துவமனைக்கு அவர் ஓடியுள்ளார். அங்கு, பிரதியுஷா ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காதலர் சித்தார்த் மற்றொரு அறையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அடுத்த நாள் ( பிப் 24) பிரதியுஷா இறந்தும் போனார். இறக்கும் போது, அவருக்கு வயது 20 மட்டுமே.

'பெற்றோர் திருமணத்துக்கு மறுத்ததால், இருவரும் குளிர்பானத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர் ' என்று உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், தாயார் சரோஜினிதேவிக்கு மகளின் உடலை பார்த்ததும் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன.

Actress Prathyusha
Actress Prathyushaprathyusha.org

இதையடுத்து, நீதிமன்றத்தில் சரோஜினி தேவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2004ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் சித்தார்த்துக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், 2011ம் ஆண்டு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றம் சித்தார்த்தின் தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தது. இதனால், கடும் வேதனையடைந்த சரோஜினிதேவி உச்சநீதிமன்றம் சென்று போராடினார். தனது மகளை திட்டமிட்டு சித்தார்த் கொலை செய்துள்ளதாக சரோஜினி தேவி தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதாடியது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல், மன்மோகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

தற்போது , பிரதியுஷாவின் தாயார் நடத்திய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் 5 ஆண்டுகள் சித்தார்த்துக்குத் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. அதோடு,' பிரதியுஷாவின் கழுத்து நெறிக்கப்பட்டது , பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு ஆதாரம் இல்லை. விஷம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று மருத்துவரீதியாக உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு சித்தார்த் மீது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாமீனிலுள்ள சித்தார்த் நான்கு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் நடிகை பிரதியுஷாவின் தாயார், தனது மகளை அதிகாரமிக்க பதவியிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சித்தார்த்துடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். அப்போதைய அரசு, உடற் கூறு ஆய்வறிக்கையில் அவற்றை மறைத்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரதியுஷா இறக்கும் போது வயது 20. அவரது தாயார் நீதிமன்றத்தில் 23 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி சித்தார்த்துக்கு தண்டனையை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthuyugam
www.puthuyugam.com