ஆர்வத்தைத் தூண்டும் புதிய தமிழ் சினிமாக்கள் #KHxRK!

அடுத்து, 2026ல் வரவிருக்கும் படங்களான ஜெயிலர்-2, கருப்பு, வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் தயாராகிவரும் அரசன், மிஷ்கினின் டிரெயின், ரஞ்சித்தின் வேட்டுவம் போன்ற படங்களுக்காக காத்திருக்கிறோம் நாம்.
SEYON - FIRST LOOK POSTER
SEYON - FIRST LOOK POSTER@RKFI
Published on

2026 பிறந்ததிலிருந்தே, பராசக்தி, வித் லவ் என்று இரண்டு படங்களைத் தவிர, சொல்லிக்கொள்ளும் படியாக இதுவரை ஒரு சினிமாவும் ரிலீஸ் ஆகவில்லை. தலைவர் தம்பி தலைமையில் ஓரளவு வெகுஜன மக்கள் கொண்டாடிய படமாக அமைந்தது. கார்த்தி நடித்த வா வாத்தியார் இப்படி ஒரு மொக்கைப் படமாக அமைந்துவிடும் என்பது யாரும் எதிர்பாராதது. அரசியல் காரணங்களால், பொங்கலுக்கு வரவேண்டிய ஜனநாயகனும் தள்ளிப்போனதால், அந்தப் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாமல், மற்ற படங்கள் தயங்குவதால், உயிருள்ள வரை உஷா, மின்னலே, நம் நாடு, மௌனம் பேசியதே என பழைய படங்களாகவே ஒவ்வொரு வாரமும் ரீரிலீஸ் ஆகி, தமிழ் சினிமா ரசிகர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கின்றன.

அடுத்து, 2026ல் வரவிருக்கும் படங்களான சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2, சூர்யாவின் கருப்பு, வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் தயாராகிவரும் அரசன், மிஷ்கினின் டிரெயின், ரஞ்சித்தின் வேட்டுவம் போன்ற படங்களுக்காக காத்திருக்கிறோம் நாம். இந்நேரத்தில், எதிர்பாராத சில புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளன.

முதலாவதாக, பாக்கெட் நாவல்!

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என்ற இரண்டு முக்கியமான கிளாஸிக் தமிழ் சினிமாக்களை இயக்கிய தியாகராஜா குமாரராஜா, 7 வருடங்கள் கழித்து தனது மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்தப் படத்தின் பெயர், ‘பாக்கெட் நாவல்’. இதில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் ஏற்கனவே, சூப்பர் டீலக்ஸில் இணைந்து பணியாற்றியிருந்தார்கள். இந்தப் படத்தில், விஜய் சேதுபதியுடன் சேர்ந்து, மாளவிகா மோகனன், ராஜ்.பி.ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தன்னை ஒரு தீவிர இளையராஜா ரசிகரான தியாகராஜன் குமாரராஜா, ஏற்கனவே மாடர்ன் லவ்' வெப்சீரிஸில் தான் இயக்கிய நினைவோ ஒரு பறவை எபிசோடில் ராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். பெரிய திரையில் இந்த பாக்கெட் நாவலில் மீண்டும் ராஜாவுடன் இணைகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இணையத்தில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.

Kamal Hassan
Kamal Hassan@turmericmediaTM

அடுத்தது சேயோன்!

அமரன் எனும் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸோடு கை கோர்த்திருக்கிறார். இதுவரை, இந்தப் படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமலிருந்த நிலையில், ஓர் அட்டகாசமான டீசரோடு, நேற்று ’சேயோன்’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஜெயிலர் 2 ஷூட் முடிந்துவிட்ட நிலைமையில், அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசனின் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவிலேயே இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. கூடவே கமல்ஹாசன் நடிப்பில், அன்பறிவ் இயக்கும் படம் வேறு தொடங்கப்படலாம் எனும் நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸிலிருந்து இப்படி ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. நடிகர் சிவகார்த்திகேயனின் 26-வது படமான இந்தப்படத்தை ’தாய்க் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

அடுத்து KH x RK!

நடக்க வாய்ப்பில்லை, வதந்தியாகவே போய்விடும் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருந்த விசயம் இது! அதற்கேற்ப, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தொடங்கிவிட்டதால், அதுதான் இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் இருவரும் இணைந்து செய்யப்போகிற படம் என்று சொன்ன படம் என்று எளிதாக கமல் விபூதி அடித்துவிட்டுப் போய்விடுவார் என்றுதான் நினைத்தோம். போதாக்குறைக்கு கமல்ஹாசன், நாம் நினைத்ததுக்கு மாறாக, கடுமையான தோல்விக்குப் பிறகும் தீவிர அரசியலில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால், எல்லாவற்றையும் மீறி கமலும், ரஜினியும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமாகியிருக்கிறது. முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை எனினும், ரெட் ஜெயண்ட் தயாரிப்பில், நெல்சன் இயக்கும் இந்தப் படத்துக்கான புரோமோ ஷூட் நடந்து முடிந்திருக்கிறது. சீக்கிரமே நெல்சனின் பாணியில், ஒரு அட்டகாசமான டீஸருடன் அறிவிப்பு வெளியாகலாம்!

Puthuyugam
www.puthuyugam.com