"நாம்தான் நமக்கான எதிரி!" - இசையமைப்பாளர் ஜிப்ரான்

பலரும் இங்கே, “நானே எல்லாவற்றையும் பண்ணிவிடுவேன்” எனும் கனவில் இருக்கிறார்கள். இதனால் என்னவாகும்? இந்த உண்மையை உணராததால், தமது உண்மையான பலத்தை அறிந்துகொள்ளாமல், ஏதாவது ஒன்றிலாவது மாஸ்டராகும் வாய்ப்பும் கைவிட்டுப் போய்விடுகிறது.
Ghibran during musical score of film of Legend Saravan
Ghibran during musical score of film of Legend Saravan ghibranofficial - Instagram
Published on

ஒரு சிறந்த திரைக்கதையை எழுதி விட வேண்டும், ஒரு நல்ல சினிமாவை இயக்கி விட வேண்டும் என்ற கனவுகளோடு ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏராளமான இளைஞர்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே உதவி இயக்குனர்கள் எனும் பெயரில் ஏராளமான இளைஞர்கள் இங்கே ஒரு வாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், இவர்களுடைய அணுகுமுறை வெவ்வேறாக இருந்திருக்கிறது. 2000க்கு முன்னர், வருடக்கணக்காக பல படங்களில், பல இயக்குனர்களிடம் உதவியாளர்களாகப் பணியாற்றுவார்கள். பிறகு, தனித்து இயங்கும் தகுதியைப் பெறுவார்கள். அதன் பின்னர், ஒரு வெற்றிப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டால் போதும், தனித்து இயங்க முடியும் என்று நிரூபித்தார்கள். அதன்பின் வந்தவர்கள் குறும்படங்களை எடுப்பதன் வாயிலாகவே தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு, சினிமாவை இயக்கும் தகுதியை நிரூபித்தார்கள்.

சினிமாத்துறையில் வெற்றியைத் தொடுபவர்கள் நூற்றில் ஒருவராக இருந்தாலும், அந்த வெற்றி என்பது மிகப்பெரிய பணமும், புகழும் மிக்கதாக இருக்கிறது. அதனால்தான், எத்தனைப் போராடினாலும், எவ்வளவு சிரமப்பட்டாலும் ஒரு சாராருக்கு எப்போதுமே சினிமா எனும் இலக்கு மட்டும் மாறுவதே இல்லை. அப்பேர்ப்பட்ட ஈர்ப்பு கொண்டது இந்தத்துறை. ஒரே ஒரு வாய்ப்பு நிலைமையைத் தலைகீழாக்கி, புரட்டிப் போட்டுவிடும் என்று நம்புகிறார்கள்.

அப்படியான இளைஞர்களுக்கான அறிவுரையாக, வழிகாட்டுதலாக, இசையமைப்பாளர் ஜிப்ரன் அவர்கள் சில கருத்துகளை அவரது முகநூல் பதிவு வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது பார்வை:

நீண்ட நாட்களாக நான் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை இப்போது பகிர்ந்துகொள்கிறேன். நான் 50க்கும் மேற்பட்ட இயக்குனர்களோடு பணியாற்றி இருக்கிறேன். இந்த துறையில் ஆர்வம் மிக்க இளைஞர்கள், எழுத்தாளர்கள், உதவி இயக்குனர்கள் என எத்தனையோ பேரை சந்தித்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல ஒரு வாக்கியத்தை நம்மிடம் சொல்வார்கள்,

’என்னிடம் ஒரு அமேசிங்கான கதை இருக்கிறது சார். ஒரே ஒரு வாய்ப்புக் கிடைத்தால் போதும், சரியான நடிகர் அல்லது தயாரிப்பாளர் கிடைத்தால், அவ்வளவுதான்... எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடுவேன்’

இப்படிச் சொல்பவர்களை நான் குறை கூறவில்லை. இப்படிச் சொன்னவர்கள் வாய்ப்புக் கிடைத்தபோது புரட்டியும் போட்டிருக்கிறார்கள்தான். ஆனால், இப்படிச் சொல்பவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் என்ன என்பதை என்னால் உணர முடியும். ஒரு சினிமாவைக் கனவு காண்பது, உருவாக்குவது என்பது ஒருவரின் ஆற்றலை எல்லாம் உறிஞ்சிக் கொள்ளக்கூடிய செயல். இதில் யாரையும் நான் முன்முடிவோடு அணுக விரும்பவில்லை. ஒரு ப்ராஜக்ட் நகராத போது, தோல்வியடையும் போது, அது எல்லா சமயங்களிலும் ஒரு தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே இருக்காது. சமயங்களில் மீண்டு வரமுடியாதத் தோல்வியாகவும் கூட அமைந்துவிடும். இதை இங்கே யாரும் சத்தமாகச் சொல்ல மாட்டார்கள். ஆனால், எல்லோருக்கும் இது தெரியும்.

Ghibran with Director Durai Senthil Kumar
Ghibran with Director Durai Senthil Kumarghibranofficial - Instagram

உண்மையிலேயே நமக்கான எதிரி வெளியில் இல்லை, நாம்தான் நமது முதல் எதிரி.

உளவியலில் ஒரு சொல்லாடல் உண்டு. விமர்சனத்துக்கான அச்சம்! (Fear of Negative Evaluation). “இதெல்லாம் என்ன?” என்பது போல எள்ளி நகையாடப்பட்டு விடுவோமோ எனும் பயம். அதனால் எதையும் வெளியே விடாமல், “இன்னும் சிறப்பாக எழுதலாம், இன்னும் சிறப்பாக எடிட் செய்யலாம், இன்னும் பெர்ஃபெக்டாக பண்ணலாம்” என்று சொல்லிக்கொண்டே எதையும் வெளியிடாமலேயே தேங்கி விடுவார்கள். நான் பார்த்த வரையில், மோசமான படங்களால் தோல்வியடைந்தவர்களை விட, இந்தப் பயத்தினால் செயல்படாமலிருந்து காணாமல் போன கிரியேட்டர்கள்தான் அதிகம்.


அடுத்த உண்மை, கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். ஆனாலும், சொல்லித்தான் ஆகவேண்டும்.

கதை எழுதுவது வேறு. திரைக்கதை என்பது வேறு. திரை இயக்கம் என்பது வேறு.

ஒருத்தர் நல்ல கதாசிரியராக இருக்கலாம். ஆனால், திரைக்கதை எழுதுவது என்பது வேறொரு கலை, அது முடியாது அவரால். சிறப்பாக திரைக்கதை எழுதுபவரால், Staging, Blocking, Shot rhythm, Actor handling போன்றவற்றையெல்லாம் கையாள முடியாது. அது இயக்குநர் எனும் கலைஞனின் வேலை. போலவே நல்ல இயக்குநர்கள், நல்ல திரைக்கதையை எழுதிவிடவும் முடியாது.

AI Video uploaded by Music Director Ghibran
AI Video uploaded by Music Director GhibranGhibran - Facebook

பலரும் இங்கே, “நானே எல்லாவற்றையும் பண்ணிவிடுவேன்” எனும் கனவில் இருக்கிறார்கள். இதனால் என்னவாகும்? இந்த உண்மையை உணராததால், தமது உண்மையான பலத்தை அறிந்துகொள்ளாமல், ஏதாவது ஒன்றிலாவது மாஸ்டராகும் வாய்ப்பும் கைவிட்டுப் போய்விடுகிறது.

இந்த இடத்தில் AIயின் பயன்பாட்டைப் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. AI உங்களை உடனடியாக உருமாற்றிவிடப் போவதில்லை. இயக்குநரான உங்களை திரைக்கதை எழுத்தாளராகவோ, திரைக்கதை ஆசிரியனை இயக்குநராகவோ மாற்றிவிடாது. ஆனால், நீங்கள் யாராக இருந்தாலும், அதில் மேன்மையை அடைய ஒரு பிரமாதமான பயிற்சிக் களத்தை AI உருவாக்கித் தருகிறது.

மாதிரி விடியோக்களை உருவாக்குவதற்கு, திரைக்கதையின் வடிவங்களைக் கற்றுக் கொள்ளுவதற்கு, உங்கள் கதையை ஆய்வு செய்வதற்கு, இசைக்குறிப்புகளை உருவாக்குவதற்கு, எடிட்டிங் வேலையைப் புரிந்துகொள்வதற்கு என தனித்தனியே AI கருவிகள் கிடைக்கின்றன. அவற்றை நாம் நம்மை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சினிமா வேலை செய்யும் முறைகளை நுணுக்கமாகக் கற்றறிந்து தேர்ச்சியடையுங்கள். வாய்ப்புக்காகக் காத்திருப்பது வெற்றியைத் தராது, பேசிக் கொண்டிருப்பது வெற்றியைத் தராது, சிறிய அளவிலாவது எதையாவது உருவாக்கி, வெளியிட்டு விமர்சனங்களை எதிர்கொள்வதே நம்மை மேம்படுத்தும், அதுவே நமக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும்!

நாம்தான், நமக்கான பாதையை உருவாக்க வேண்டும்!

Don’t wait for the chance, BE the chance!

Puthuyugam
www.puthuyugam.com