இஸ்லாமிய நேசம்- 'சிறை' படம் சொல்லும் செய்தி!

காலம் காலமாக நாம் போலீஸ் சம்பந்தப்பட்ட சினிமாக்களை பார்த்துக் கொண்டிருந்தாலும், இயக்குநர் தமிழின் டாணாக்காரன் எனும் சினிமாதான் முதல் முறையாக நிஜமான தமிழ்நாட்டு காவல்துறையை நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திய சினிமா.
SIRAI MOVIE POSTER
SIRAI MOVIE POSTER@7screenstudio
Published on

"பல வருஷமா அவங்கள நாம நிறைய குத்திக் கிழிச்சிருக்கோம். அதெல்லாத்தையும் சரி பண்ண முடியுமான்னு கேட்டா, முடியாதுதான். ஆனா, இனியாச்சும் நாம திருந்தணும். ஓரளவாவது நாம அதை நல்ல திசையில் முன்னெடுத்துக் கொண்டு போயித்தான் ஆகணும். மெயின் கதாபாத்திரமாக வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, சின்னக் கதாபாத்திரமாக இருந்தாலும், கதையில் இருக்கிற ஏதாவது ஒரு நல்ல கேரக்டராக, தியாகம் செய்கிற கேரக்டராக இஸ்லாமியர்களை நாம் சித்தரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் நண்பர்களிடமும் அதை வலியுறுத்திச் சொல்லிகிட்டிருக்கிறேன்” ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டது டாணாக்காரன் இயக்குனர் தமிழ்.

தமிழ் இப்போது கார்த்தி நடிப்பில் மார்ஷல் எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இவரது கதை அமைப்பிலும், சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்திலும் உருவாகி, சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சிறை! அந்தப் படம் குறித்த பேட்டி ஒன்றில்தான் இந்தக் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் தமிழ்.

காலம் காலமாக நாம் போலீஸ் சம்பந்தப்பட்ட சினிமாக்களை பார்த்துக் கொண்டிருந்தாலும், இயக்குநர் தமிழின் டாணாக்காரன் எனும் சினிமாதான் முதல் முறையாக நிஜமான தமிழ்நாட்டு காவல்துறையை நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திய சினிமா. அந்தத் துறைக்குள் ஊடுருவி இருக்கும் உளவியல் சிக்கல்கள், ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அதிகாரம் என பலவற்றையும் அப்பட்டமாக நிறுவிக் காண்பித்தது அந்தப்படம். அப்படி ஒரு கதாசிரியரிடமிருந்து வரும் இன்னொரு கதை என்றதும் இயல்பிலேயே சிறை மீது நமக்கொரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது நிஜம்தான். அந்த எதிர்பார்ப்பைக் கொஞ்சமும் சிதைக்காமல் முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது சிறை.

Sirai Poster
Sirai Poster@7screenstudio

ஒரு மத்திய சிறையில் இருந்து, எங்கோ கிடக்கும் ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு குற்றவாளியை விசாரணைக்காக, பாதுகாப்பாக கூட்டிக் கொண்டு போவதும், அவர்களை மீண்டும் சிறைக்குப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ப்பதுமான ஒரு சிக்கலான காவல்துறை பணி எனும் கதையே நமக்கு முற்றிலும் புதுமையானதுதான். மற்றவர்களால் அந்தக் குற்றவாளிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது, அந்தக் குற்றவாளியால் கூட்டிச்செல்லும் காவலர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது, அவர்கள் தப்பிவிடவும் கூடாது. எத்தனைக் கூடாதுகள்?

கதிரவன் எனும் ஒரு போலீஸ்காரர் அப்துல் ரவுஃப் எனும் ஒரு குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பதுதான் சிறை படத்தின் கதை! அந்த அப்துல் யார், அவனது கதை என்ன, அதில் கதிரவன் என்ன பாதிப்பை ஏற்படுத்தினார் என்பது நல்லதொரு சினிமாவாக, அத்தனை இயல்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ’எல்லாப் போலீஸ்காரர்களுக்குமே ஒரு குறைந்தபட்ச அதிகாரம் இருக்கிறது. அதை அவர்கள் யாருக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்’ எனும் மையக்கருத்தை வலியுறுத்தும் சிறை, திரையிலும் கூட இன்னும் ஓடிக்கொண்டிருக்கலாம், அல்லது ஸீ5 ஓடிடியில் வெளியாகிவிட்டது, இன்னும் பார்க்காதவர்கள் நிச்சயம் பாருங்கள்.

ஆனால், இங்கே நாம் குறிப்பிட விரும்பியது, வேறொன்று.

இந்தப் படத்திலொரு இடைவேளைக் காட்சி வருகிறது. அப்துல் எனும் அந்தப்பையன், அந்தப் பயணத்தின் போது துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு, அந்தக் காவலர்களிடமிருந்து தப்புகிறான். உண்மையில் அவன் தப்பவில்லை, கதிரவன் உள்ளிட்ட மூன்று காவலர்களும் எதிர்பாராது ஏற்படும் ஒரு சிக்கலால் குறிப்பிட்ட அந்தப் பேருந்தைத் தவறவிடுகிறார்கள். அந்தப் பையன் வேறு வழியின்றி அருகிலிருக்கும் இன்னொரு காவல்நிலையத்தில் சரணடைந்துவிடுகிறான்.

அந்தக் காவல் நிலையத்தின் எஸ்.ஐ, கதிரவன் உள்ளிட்ட எஸ்கார்ட் காவலர்களைப் பார்த்து, ‘மூன்று பேர் சேர்ந்து ஒரு குற்றவாளியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள முடியாதா?’ என்று கடிந்துகொள்வார். அப்போது அவரால், இவர்கள் மீது புதிய கேஸைப் பதிய முடியும் என்றாலும் அதைச் செய்யாமல், அறிவுரை கூறி அனுப்பி விடுவார். முன்னதாகத் துப்பாக்கியைப் பற்றிப் பேசும் போதுதான், அந்தத் துப்பாக்கி லோட் செய்து வைக்கப்பட்டிருக்கும் செய்தியை அந்த எஸ்.ஐ கேள்விப்பட்டு அதிர்ச்சியடைவார்.

Sirai Movie Cast
Sirai Movie Cast@7screenstudio

‘ரூல்ஸ்லேயே கிடையாதே, எஸ்கார்ட் போறவங்க எதுக்குடா துப்பாக்கியை லோட் செஞ்சு வைச்சீங்க?’

மூவரும் அமைதியாக நிற்பார்கள். கடிந்து கேட்ட பின்னர், ஒருவர் மெல்ல மென்று விழுங்கியபடி சொல்லுவார்.

‘அக்யூஸ்டு ஒரு முஸ்லிம், அதான்’

அப்போது, அந்த எஸ்.ஐயின் முகத்திற்கு ஒரு க்ளோஸப் போகும் கேமரா. ‘காதர் பாட்ஷா’ எனும் அவரது நேம் பேட்ஜைக் காண்பித்தபடி, ‘நானும் ஒரு முஸ்லிம்தாண்டா, என்னையும் சுட்டுர்றியா?’ என்று கேட்பார் அவர். பார்வையாளர்கள் ஒவ்வொருவர் மனதையும் தைத்த காட்சியாக அது அமைந்துவிட்டது. இந்த மண்ணின் மைந்தர்களையே, நம் சொந்த சகோதரர்களையே, மதத்தின் பெயரால் எப்படி அந்நியப்படுத்தி வைத்திருக்கிறோம், எத்தனை அவலத்துக்கு ஆளாக்கி வைத்திருக்கிறோம் எனும் துயரத்துக்கு ஒரு துளி எடுத்துக்காட்டுதான் அந்தக் காட்சி!

அந்தக் குற்றவாளியின் பெயரான, ‘அப்துல் ரவுஃப் எனும் பெயரை வேறு எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று அந்த எஸ்.ஐ, அந்தக் காவலர்களைப் பார்த்துக் கேட்பார். இல்லை என்று தலையாட்டுவார்கள் அவர்கள்.

‘1995ல் ஈழத்தமிழர்களுக்காக முதன்முறையாக தீக்குளித்து உயிர் துறந்த தியாகியின் பெயர் அது’

அந்தச் செய்தி அவர்களுக்கானது மட்டுமல்ல, நமக்கானதும்தான்!

Puthuyugam
www.puthuyugam.com