தேவர்மகன் 'ஹிட் 'ஆன போது, வருத்தமாக இருந்தது!- மீனா சொல்லும் காரணம்

நடிகை மீனா பல ஹிட் படங்களில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணங்களை கூறியுள்ளார். அது என்ன?
Actress Meena
Actress MeenaMeena Sagar
Published on

கால்ஷீட் பிரச்னை காரணமாக தேவர் மகன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குழந்தை 'என் ராசாவின் மனசிலே 'படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது. அந்தக் குழந்தைதான் நடிகை மீனா. முத்து படத்தில் 'தில்லானா தில்லானா' பாடலுக்கு நடிகை மீனா போட்ட ஆட்டத்துக்கு ஜப்பானியர்களும் தங்களை மறந்து ஆடினார்கள்.

தற்போது, 52 வயதான நிலையில், சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிகை மீனா நடித்து வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். 2013ம் ஆண்டு மோகன்லாலுடன் இணைந்து நடிகை மீனா நடித்த திரிஷ்யம் படம் சூப்பர்ஹிட் அடித்தது. பல மொழிகளிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு, வெற்றியும் பெற்றது.

சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியின்போது, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மீனா. கால்ஷீட் பிரச்னை காரணமாக பல சூப்பர்ஹிட் படங்களில் நடிக்க முடியாமல் போனதாக நடிகை மீனா வருந்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் நடித்த ஹரிகிருஷ்ணன்ஸ், தமிழில் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான தேவர்மகன், ரஜினிகாந்தின் படையப்பா போன்ற படங்களில் கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியாமல் போனது. நம்மால் அனைத்து படங்களிலும் நடிக்க முடியாததுதான். ஆனால், நடிக்க வாய்ப்பு வந்து நடிக்க முடியாமல் போன படங்கள் ஹிட்டாகும் போது, நம்மை அறியாமல் ஒரு வருத்தம் மனதுக்குள் வந்து விடும். எனினும், ரியாலிட்டியை ஒத்துக் கொண்டுதானே ஆக வேண்டும்.

திரிஷ்யம் -3 செட்டில் நடிகர் மோகன்லால் பிறந்த நாள் கொண்டாட்டம்.
திரிஷ்யம் -3 செட்டில் நடிகர் மோகன்லால் பிறந்த நாள் கொண்டாட்டம்.Actress Meena facebook

மலையாளத்தில் 'ப்ரோ டாடி ' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தில் எனது ரோல் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். அப்போது, என்னிடத்தில் பிரிதிவிராஜூக்கு தாயாக நடிக்க வேண்டுமென்று கூறினார்கள். எனக்கு , இது 'ஷாக்'காக இருந்தது. என்னை விட 6 வயதே குறைந்த பிரிதிவிராஜுக்கு தாயாக நடித்தால் சரியாக இருக்குமா? என்று தயாரிப்பாளர் ஆன்டனியிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அவர் என்னை சமாதானம் செய்தார். எனினும், அந்த அம்மா ரோல் என்னை கவர்ந்தால், அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் வெளியானதும் எனது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்தத் தருணத்தில்தான் கேரக்டர் செய்ய வயது ஒரு தடை இல்லை என்பதை நான் உணர்ந்தேன்.' ப்ரோ டாடி' வெற்றி பெற படத்தின் இயக்குநர் பிரிதிவிராஜின் உழைப்பும் அவரின் திறமையும்தான் காரணம். ஒவ்வொரு பிரேமையும் செதுக்குவார். இதனால்தான், அவரால் சக்ஸஸ்புல்லான நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வர முடிகிறது.''

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2013ம் ஆண்டு நடிகை மீனா நடித்து வெளியான திரிஷ்யம் ஹிட்டானதை தொடர்ந்து, 2021 ம் திரிஷ்யம்- 2 வெளியானது. தற்போது, திரிஷ்யம்- 3 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கியது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் அதே குழுவினர் மீண்டும் நடிக்கிறார்கள். திரிஷ்யம் - 3 படத்தை 2026ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Puthuyugam
www.puthuyugam.com