எக்கோ எனும் ஒரு மலையாளத் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி, தற்போது இணைய தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியான போதும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம்தான் இது. வழக்கமான திரைப்படங்களில் இருந்து விலகி, பார்வையாளர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தந்திருக்கிறது இந்தப் படம். அதே நேரம் இந்த படத்தின் முடிவு சிலரால் முழுதுமாக புரிந்துகொள்ள முடியாதபடி, பார்வையாளர்களே ஊகித்துக் கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது.
அப்படி இந்தப் படத்தின் சிறப்புதான் என்ன? அந்த முடிவு என்னதான் சொல்கிறது? என்பதை, சற்றே மேலோட்டமாகப் பார்க்கலாம்.
நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என இந்தப் படம் மேக்கிங்கில் மிகத்தரமாக உருவாக்கப்பட்டிருந்தாலும், படத்தின் கதை சமீபத்தில் நாம் பார்த்திராத வகையில் புதுமையாக இருந்ததுதான் இத்தனை வரவேற்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
இந்தக் கதை, 90களில் இறுதிப்பகுதியில் நடப்பதாக நாம் கணிக்கலாம். படத்தின் துணைத் தலைப்பே, ‘The Infinite Chronicles of Kuriachan’ (குரியச்சனின் முடிவில்லாத வாழ்க்கைக் குறிப்புகள்) என்று கதையின் உள்ளடக்கத்தைச் சொல்ல முயல்கிறது. மர்மங்கள் நிறைந்த குரியச்சன் எனும் நபரின் வாழ்வில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களின் முன்பின்னான அடுக்குகள்தான் இந்தப் படத்தின் கதை.
குரியச்சனை வெறுமனே ஒரு நாய் ஆர்வலர் என்று சொல்லிவிட முடியாது. நாய்களைக் கொண்டு, அவற்றைப் பழக்குவதன் மூலம் அதிகபட்சமாக எதையெல்லாம் சாதித்துவிட முடியும் என்ற கனவுகளோடு அலையும் ஒரு மனிதனைப் போலிருக்கிறார் குரியச்சன். அவருக்கு போத்தன் எனும் ஒரு நண்பன் இருக்கிறார். 1940களில் இருவருமாக சேர்ந்து, பழக்குவதற்கு ஏற்ற ஒரு வகை நாயினத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள மலேசியா சென்று யோசையா எனும் நபரைச் சந்திக்கிறார்கள். அப்போது, அத்தகைய போர்ச்சூழலில் யோசையா இறந்துபோய்விட, அவரிடமிருந்த நாய்க்குட்டிகளையும், அவரது இளம் மனைவியான சோயியையும் அழைத்துக்கொண்டு கேரளா திரும்புகிறார் குரியச்சன். சோயியை மணந்துகொண்டு, கேரள, தமிழக எல்லைப் பகுதியின் அடர்ந்த மலைப்பாங்கான பகுதியில், யாரும் சாதாரணமாக அணுகிவிட முடியாத ஒரு பகுதியில் வீடமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். காலங்கள் ஓடுகின்றன. இதனிடையே பெற்றோரை இழந்த பியூஷ் எனும் ஒரு சிறுவனுக்கு அடைக்கலம் தந்து வளர்த்திருக்கிறார் குரியச்சன். கதை நடக்கும் சம காலத்தில் குரியச்சனும், போத்தனும் ஒரு கொலைவழக்கில் தேடப்படுகிறார்கள். போத்தன் போலீசில் மாட்டிக்கொண்டு சிறை செல்கிறார். தனது நாய்களை மனைவிக்குக் காவல் வைத்துவிட்டு, குரியச்சனும் காடுகளுக்குள் தலைமறைவாகிறார்.
சுமார் 6 ஆண்டுகளாக மனைவி சோயி (இப்போது மிலாத்தி சேச்சி) அவருக்காகக் காத்திருக்கிறார். சிஷ்யனான பியூஷ் ஒருபக்கம் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறான். இன்னொரு புறம் போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. எதன் பொருட்டோ குரியச்சனால் பாதிக்கப்பட்ட ஒரு நேவிக்காரர் (நரேன்) தேடிக் கொண்டிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான போத்தனும் அவரைத் தேடத் தொடங்குகிறார். ஒவ்வொருவரும், குரியச்சனோடு எந்தந்த வகையில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்? ஒவ்வொருவருக்குமான நோக்கங்கள் என்னென்ன? அப்படி குரியச்சன் அவர்களுக்குச் செய்த காரியங்கள்தான் என்ன? என்பதுதான் படத்தின் கதை. இவ்வளவு கேள்விகள் குரியச்சனைச் சுற்றி இருந்தாலும், அந்தக் கதாபாத்திரம் படத்தில் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வருகிறது. அது கூட இல்லாமலும், இன்னும் புதுமையாக இந்தக் கதையை எழுதியிருக்க முடியுமே எனும் பேராசையும் கூட நமக்கு எழுந்தது வேறு விசயம்!
நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும், இன்னொரு இடத்தில், இன்னொன்றாக மாறுகிறது. இந்த ரசவாதம்தான் பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான கதையனுபவத்தைத் தந்திருக்கிறது. இதை எழுதிய பாகுல் ரமேஷும், இயக்கிய டிஞ்சித் அய்யதானும் அதைச் சாதித்திருக்கிறார்கள்.
அந்த முடிவு என்னதான் சொல்கிறது? என்பதை இங்கே விளக்கிச் சொல்லி, உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ரசமான அனுபவத்தை நாம் கெடுத்துக்கொள்ள வேண்டாம். அதற்கான விடை படம் முழுதும் விரவிக்கிடக்கிறது. அவற்றை சற்றே உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். கூடுதலாக ஒரு குறிப்பைத் தருகிறோம். இந்தக் கட்டுரையில் படத்தின் கதை என்று 5வது மற்றும் 6வது பாராவில் சொல்லப்பட்டிருக்கிற எதையுமே நம்பாதீர்கள்! அவ்வளவுதான்! இனி அந்த முடிவை நீங்களே முழுதும் உணர்ந்து அனுபவிக்க முடியும்!