'ஜெயலலிதா பற்றிப் பேசியபிறகு பாக்யராஜ் செய்த அந்த செயல்...'- ரஜினிகாந்த் உருக்கம்

விழா முடிந்ததும், ஓபன் ஜீப்ல ஊர்வலமாக போற பிளான் இருந்தது. இந்த சமயத்துல, நடிகர் விஜயகுமார் என்னிடம் ,'நீங்க வேண்டாம்.... எல்லாரும் கோபமாக இருக்குறாங்க ' என்று சொன்னாரு. ஆனாலும்...
நடிகர் பாக்கியராஜ் பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் பாக்கியராஜ் பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்
Published on

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜின் 50வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. ஜனவரி 7ம் தேதி அவரின் பிறந்த நாள் என்பதால் அரங்கத்தில் கேக் வெட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல், டி,ராஜேந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள் விழாவில் பங்கேற்றனர். விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாக்கியராஜ் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டது ஹைலைட்டாக அமைந்தது.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, ''இந்த விழாவை நடத்த பூர்ணிமா எடுத்த முயற்சிக்கு நன்றி. கடந்த 1970களில் மூன்று ராஜாக்கள் தமிழ் திரையுலகுக்கு வந்தனர். மூன்று பேரும் ஒவ்வொரு துறையில் அரசர்கள். அவங்களோட கொடி இப்போதும் பறந்து கொண்டிருக்கிறது. ஒருவர் இளையராஜா. இன்னொருவர் பாரதிராஜா மற்றொருவர் இந்த பாக்யராஜா. இதில், இளையராஜா இசையோடு நின்று விட்டார். பாரதிராஜா கதை மற்றும் இயக்கத்தில் ஈடுபடுவார். ஆனால், பாக்யராஜ் அப்படியில்லை. கதை, நடிப்பு , திரைக்கதை, இயக்கம், வசனம் அவ்வளவு ஏன் இசையும் அமைப்பார். சாதாரண கதையைக் கூட தனது திரைக்கதையால் படத்தை நிற்க வைத்துவிடுவார்.

திரைக்கதைதான் சினிமாவுக்கு முதுகெலும்பு. அந்த முதுகெலும்புதான் பாக்யராஜ். இந்தியாவிலேயே திரைக்கதை என்றால் சலீம் ஜாவீத் பெயர்தான் நினைவுக்கு வரும். அவருக்கு இணையாக ஒரு திரைக்கதையை அமைப்பவர்தான் பாக்யராஜ். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் கதையில் கூட, ஹீரோயிசம் கொண்டு வந்துவிடுவார் பாக்யராஜ். அவரின், ஒவ்வொரு படத்தைப் பற்றிப் பேசினால், எவ்வளவோ பேசலாம்.

'முந்தானை முடிச்சு' இடைவேளையின் போது, தன்னை பாலியல் வன்முறை செய்து விட்டதாக ஊர்வசி பொய்யாக பாக்யராஜ் பற்றிக் கூறி விடுவார். அப்போது, பாக்யராஜ் தனது 6 மாத குழந்தையை தாண்டி சத்தியம் செய்ய சொல்வார். குழந்தையை ஊர்வசி தாண்டும் போது தியேட்டரே ஆடிப் போகும்.

அதற்கு பிறகு, அந்த குழந்தையை காப்பாற்ற ஊர்வசி போராடும் காட்சிகள் மனதை கொள்ளை கொள்ளும். அடுத்து, அந்த 7 நாட்கள் படம். சின்ன ஒரு வீடு, ஒரு ஏணி, ஆர்மோனியப்பெட்டி, ஒரு சிறுவன். ஒரு வித்தியாசமான மலையாளம் கலந்த ஸ்லாங். அவ்வளவுதான்! கிளைமாக்ஸ் ஒரு சின்ன அறைக்குள்ள நடக்கும். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அது போல, தூறல் நின்னு போச்சு. வசவசவென்று பேசிக்கொண்டே, திட்டிக்கொண்டே இருக்கும் ஒரு கேரக்டர் பேச்சு நின்றுவிடும். தூறல் நின்னுபோச்சு! எப்படிப்பட்ட படங்கள் இவை. அவர் செய்தது ஒவ்வொன்றும் புரட்சிதான்.

ஆனால், அவருக்கு உழைப்புக்கு இணையான ஊதியமும், புகழும் கிடைக்கவில்லை. இதே, பாக்யராஜ் ஹிந்தியில் இருந்திருந்தால் சலீம் ஜாவித்துக்கு இணையாக பேசப்பட்டிருப்பார். பாக்யராஜை தோளில் தூக்கிக் கொண்டாடியிருப்பார்கள். ஒரு மைனஸ் பாயிண்ட் என்னவென்றால்... பல படைப்பாளிகள் கதை , கதை என்று ஓடிவிட்டு நிஜ வாழ்க்கையை மறந்துவிடுவார்கள். கேரக்டர்ஸ் பத்தியே நினைத்துக்கொண்டு, சொந்த வாழ்க்கையை மறந்துவிடுவார்கள். அதனால், பேரு, புகழ் வந்தாலும், பணம் சம்பாதிப்பது அவர்கள் சிந்தனையில் இருக்காது.

பாக்யராஜ்
பாக்யராஜ் Welco

பாக்யராஜ் தனது படங்களின் உரிமையை சரியாக விற்று இருந்தாலே, போட் கிளப்புல 5 வீடு போயஸ் கார்டன்ல 5 வீடு வாங்கியிருக்கலாம். ஆனால், பணம் சம்பாதிக்க அவர் ஆசைப்பட்டதே இல்லை. அதோட, யாரையும் கடிந்தோ, தப்பாகப் பேசியோ நான் பார்த்ததில்லை. யாருக்கும் ஜால்ரா போட்டது கிடையாது. மனதில் பட்டதைப் பேசி விடுவார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே தன்னோட திரையுலக வாரிசாக பாக்யராஜை அறிவித்தார். அப்படியென்றால், எம்.ஜி.ஆர். இவரை எந்தளவுக்கு நேசித்திருப்பார். அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆரே முன்னின்று பாக்யராஜூக்கு திருமணமும் செய்து வைத்தார். அவ்வளவு எளிதாக எம்.ஜி.ஆர் மனதில் ஒருவர் இடம் பிடித்துவிட முடியாது. அண்ணாவின் இதயத்தில் எம்.ஜி.ஆர் சென்றது போல, எம்.ஜி.ஆர் மனதில் பாக்யராஜ் போனாரு.

பாக்யராஜூக்குக் கிடைத்த பெரிய பிளஸ் பாயிண்ட் பூர்ணிமாதான்.நான் தங்கமகன் படத்தில்தான் முதன்முதலில் பூர்ணிமாவோட நடிச்சேன். அவங்க, பாம்பேல பிறந்து வளர்ந்த பொண்ணு. இங்கிலீஸ், இந்திலதான் பேசுவாங்க. இவங்க, எப்படி பாக்யராஜை கல்யாணம் பண்ணுவாங்கனு நினைசேன். நம்ம ஆளோட இங்கிலீஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்தி ரொம்பேவே சுத்தம். ஆனால், பாக்யராஜை ஒரு இயக்குநராகவோ, நடிகராகவே ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தால் , ஆம்பளைங்களுக்கே அவர் மீது காதல் வந்துவிடும். அப்படிதான், பூர்ணிமா அவரை லவ் பண்ணிருப்பாங்கனு நினைக்கிறேன்.

தன்னுடன் பணியாற்றியவர்களுடன் நடிகர் பாக்கியராஜ்
தன்னுடன் பணியாற்றியவர்களுடன் நடிகர் பாக்கியராஜ்

'பதினாரு வயதினிலே' படம் எடுத்தப்போ, நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவியெல்லாம் அப்போது பெரிய நடிகருங்க. முதல்ல அவங்க காட்சியெல்லாம் எடுத்துடுவாங்க. எங்களையெல்லாம், காலைல கொண்டு வந்து உட்கார வச்சுடுவாங்க. சூரியன் மறையும்போதுதான் , எங்களை கூப்பிடுவாங்க. எனக்கு தமிழ்ல டயலாக் பேசுறதுல தகராறு. இதனால, பல டேக்குகள் எடுப்பேன். இதைப் பார்த்த பாரதிராஜா , டென்ஷனாயிட்டாரு. அடுத்த நாளில் இருந்து, ஒருவர் வேஷ்டி சட்டை போட்டுட்டு என்னிடத்தில் வந்தாரு. அவர்தான், பாக்யராஜ். ஒவ்வொரு நாளும் காலையில இருந்து எனக்கு டயலாக் சொல்லி கொடுத்தாரு. நான் மனப்பாடம் செய்துப்பேன். அதுவரைக்கும் அவர் யாருனு கூட தெரியாது. 'இது எப்டி இருக்கு' என்ன ஸ்லாங்ல பேசணும்னுலாம் சொல்லிக்கொடுத்தது பாக்யராஜ்தான்.

பின்னாடி பாக்யராஜ் பெரிய ஆளா வந்தபிறகுதான், ஆஹா... நமக்கு டயலாக் சொல்லி கொடுத்தது இவர்தான் என்று தெரிய வந்துச்சு. அதுமே அவரோட குரல் வெச்சுத்தான் கண்டுபிடிச்சேன். 'படையப்பா' நீலாம்பரி கேரக்டர் பற்றி அவர் கூட நான் பேசினேன். நீலாம்பரி மட்டும் மக்கள் மனசுல நிக்கற மாதிரி காமிச்சுட்டீங்கன்னா படம் ஹிட்னாரு. 'பாபா' படம் பற்றியும் அவரிடம் கேட்டேன். "நீங்க ஆன்மிகத்த ஃபாலோ பண்றீங்க.. சரி.. ரசிகர்களும் அத பண்ணணும்னா எப்டி? அவங்க இத எந்த அளவுக்கு ரசிப்பாங்கனு தெரியல" என்றார். ஜோசியர் போல, அவர் சொன்னது மாதிரியே அப்படியே நடந்தது. அவ்வளவு சூப்பரா படங்களை பற்றி அவர் கணிப்பார்.

இன்னோரு முக்கியமான நிகழ்வு. அது, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இந்த விழாவில் நான் பங்கேற்க முக்கியக் காரணம் அதுதான். அந்த சம்பவத்தை இந்த நிகழ்ச்சியில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். 1995ம் ஆண்டு , நடிகர் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருது கொடுத்தாங்க. இதற்காக, திரையுலகம் மற்றும் அரசு சார்பாக விழா எடுத்தாங்க. சேப்பாக்கம் மைதானத்தில் மிகப் பெரிய விழா நடத்துனாங்க. அப்போதைய,சி.எம். ஜெயலலிதாதான் தலைமை விருந்தினர். இந்தநிகழ்ச்சியில் ஜெயலலிதாவை பற்றி நான் ஆவேசமாகப் பேசி விட்டேன். எப்போதுமே, கோபத்துக்கு ஆயுசு கம்மி. ஆனால், கோபமாக இருக்கும் போது பேசும் வார்த்தைகளுக்கு ஆயுசு அதிகம். நான், பேசியது ஜெயலலிதாவை ரொம்ப பாதிச்சுட்டுது. நான் அதை பற்றி யோசிக்காமல் பேசிட்டேன். நான் பேசி முடிச்சுட்டு, இருக்கைக்கு போறேன். என்னோட அருகில் இருந்த ஸ்ரீதேவி, 'இப்படியா பேசுவாங்க' என்று கடிந்து கொண்டார். சிவாஜி உள்ளிட்ட பலருக்கு முகம் இருண்டு போச்சு.

விழா முடிந்ததும், ஓபன் ஜீப்ல ஊர்வலமாக போற பிளான் இருந்தது. இந்த சமயத்துல, நடிகர் விஜயகுமார் என்னிடம் ,'நீங்க வேண்டாம்.... எல்லாரும் கோபமாக இருக்குறாங்க ' என்று சொன்னாரு. ஆனாலும், நானும் அந்த ஊர்வலத்துல போனேன். இந்த சமயத்தில், பலரும் என்னை ஒரு மாதிரி நடத்துனாங்க. சிலர் என்னை கிள்ளினர். என்னை ஒரு மாதிரி தள்ளிட்டு போயிட்டுருக்காங்க.

இந்த சமயத்தில், இதை பார்த்துட்டு என்னை நோக்கி கத்திட்டு ஓடி வந்தார் பாக்யராஜ். அந்த இடத்துல ஒரு இன்ஸ்பெக்டர் ஜீப்போட நின்றுட்டு இருந்தாரு. அவர்கிட்ட ஓடி போன பாக்யராஜ்,' என்ன சார் ஒரு ஆர்டிஸ்ட்டை இப்படி தள்ளிட்டு போயிட்டுருக்காங்க, பார்த்துட்டு இருக்கீங்கனு ' ஆவேசமானார். 'உடனடியா, இவரை பிக்கப் பண்ணி வீட்டுல கொண்டு போய் விடுங்க... இல்லைனா நாளைக்கு மீடியால நான் பேச வேண்டியது வரும்' அப்படினு எச்சரித்தார். பின்னர், என்னிடத்தில், 'சார் பூர்ணிமா இங்கதான் இருக்காங்க. இல்லனா, நானே உங்களோட வந்துடுவேன். நீங்க வீட்டுக்கு போனதும் எனக்கு போன் பண்ணுங்க ' என்று சொல்லி அனுப்பி வைத்தார். இந்த உதவியை என்னால் மறக்கவே முடியாது. அப்படி, ஒரு அருமையான நல்ல மனிதர். அவர் , நல்ல ஆயுளுடன் நீண்ட காலம் வாழ வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.

Puthuyugam
www.puthuyugam.com