2022-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'மேன் வெர்சஸ் பீ' (Man vs. Bee) தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள தொடர்தான் 'மேன் வெர்சஸ் பேபி' (Man vs Baby) இதில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான ரோவன் அட்கின்சன் (மிஸ்டர் பீன்) மீண்டும் தனது அசத்தலான நடிப்பைத் தந்திருக்கிறார்.
இதில், ரோவன், டிரெவர் பிங்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரெவர், ஒரு பள்ளியில் காவலாளியாகப் பணிபுரிகிறார். தற்செயலான சில சூழல்களால், அவர் ஒரு கைக்குழந்தையைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நாளில்தான், பள்ளி வேலையிலிருந்து மாறி ஒரு ஆடம்பரமான வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பு வேலையில் இணையவிருக்கிறார். மறுநாள் கிறிஸ்துமஸ் தினம் வேறு. அந்தக் குழந்தையை அவர் எவ்வாறு சமாளித்தார், அதன் பெற்றோரிடம் சேர்ப்பித்தாரா என்பதே இதன் கதை.
ஒரு பக்கம் விலை உயர்ந்த பொருட்கள் நிறைந்த வீடு, இன்னொரு பக்கம் எதையும் அறியாத சுட்டியான குழந்தை – இதற்கிடையே மிஸ்டர் பீனின் அதே வெள்ளந்தித்தனத்தோடு கூடிய டிரெவர்! என்ன நடக்கும் என்பது நாமறிந்ததே!
டிரெவர், பேக் பேக்கில் குழந்தையை வைத்துக்கொண்டு இண்டர்வ்யூவை அட்டெண்ட் செய்யும் காட்சி, டிஜிடல் சாவியை நாய் விழுங்கிவிட, சற்று நேரம் காத்திருந்து அதன் கழிவை சின்ன கேரிபேக்கில் போட்டுக்கொண்டு, மற்றவர்கள் அருகில் இருக்கும் போது அதைப் பயன்படுத்துகையில் வெளிப்படுத்தும் முகபாவனை, திருட வந்த, வீடற்ற ஜோடி ஒன்றின் குழந்தைக்காக உணவை எடுத்துக்கொடுக்கும் காட்சி என இதில் ரசனையான இடங்கள் பல உண்டு!
ஒரு சினிமாவின் அளவிலேயே, 4 பாகங்களைக் கொண்ட சிறு தொடர் (Mini series) என்பதால், விறுவிறுப்பாகவும் சலிப்பில்லாமலும் நகர்கிறது. ஒரே சிட்டிங்கிலும் நாம் பார்த்துவிடமுடிகிறது.
அய்யய்யோ இவரால் அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையால் இவரும், அந்த வீடும் என்ன பாடு படப்போகிறதோ என்ற பயம் இயல்பிலேயே நமக்கு ஏற்படுமாயினும், அப்படியெல்லாம் ஏதுமில்லை. குழந்தைக்கான டிராஜிக் பின்னணிக்கதை, டென்ஷன், என்று சீரியஸாகப் போகாமல் கிறிஸ்துமஸ் பின்னணியில் மிக மெல்லிய இதமான நகைச்சுவைப் படமாக வந்திருக்கிறது Man vs Baby.
டிசம்பர் 11, 2025 அன்று Netflix தளத்தில் வெளியாகியுள்ள இத்தொடர், நெட்ஃபிக்ஸ் தளத்தில் உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. பழைய மிஸ்டர் பீன் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த விருந்தாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.