1996ல் ’டூம்ப் ரெய்டர்’ (Tomb Raider) விடியோ கேம் மூலமாக அறிமுகமான லாரா கிராஃப்ட் எனும் கதாபாத்திரத்துக்கு உலகெங்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது. அதன் பின்னர், தொடர்ந்து இதுவரை இந்த விடியோ கேம்களின் வரிசையில் 14க்கும் மேற்பட்ட கேம்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக 2018ல் வெளியானது, ‘ஷேடோ ஆஃப் தி டூம்ப் ரெய்டர்’.
அதன் பின்னர், டூம்ப் ரெய்டரின் பப்ளிஷிங் உரிமை, எய்டாஸ் இண்டராக்டிவ் (Eidos Interactive : 1996–2009), ஸ்கொயர் எனிக்ஸ் (Square Enix : 2010–2021), மைக்ரோஸாஃப்ட் (Microsoft Studios : 2015–2016), ஆஸ்பைர் Aspyr (2024–2025) என்று கைமாறிக் கொண்டிருந்த காரணத்தாலோ என்னவோ அடுத்த அறிவிப்பு வெளியாகாமல், லாராவின் ரசிகர்களை வருடக்கணக்கில் காக்கவைத்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தது. இப்போது இறுதியாக அமேசான் கேம்ஸ் Amazon Games (2026) லாரா கிராஃப்டைக் கைப்பற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற தி கேம் அவார்ட்ஸ் (The Game Awards) நிகழ்ச்சியில், வீடியோ கேம் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அறிவிப்பு வெளியானது. டூம்ப் ரைடர் கேம் வரிசையின் அடுத்த புதிய கேமான ’டூம்ப் ரெய்டர்: கேட்டலிஸ்ட்’ Tomb Raider: Catalyst என்ற கேம் 2027-ல் வெளியாகிறது என்ற அறிவிப்புதான் அது! கூடவே, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அட்டகாசமான ட்ரெய்லரும் திரையிடப்பட்டது. இந்த நீண்ட காத்திருப்பதற்கான, கூடுதல் சமாதானமாக 1996 இல் முதன்முதலில் வெளியான டூம்ப் ரெய்டர் கேமின் நவீன மறு உருவாக்கமும், ‘டூம்ப் ரைடர் : லெகஸி ஆஃப் அட்லாண்டிஸ்’ Tomb Raider: Legacy of Atlantis என்ற பெயரில், 2026ல், கேட்டலிஸ்டுக்கு முன்பாகவே வெளியாகும் எனும் அறிவிப்பும், அதற்குரிய ட்ரைலரோடு வெளியிடப்பட்டது.
1996 டூம்ப் ரெய்டர் என்பது முழுதும் ஆக்சன், அட்வென்ச்சர், புதிர்கள் (Puzzles) நிறைந்த அட்டகாசமான கேம் அனுபவத்தைக் கொடுத்த ஒரு கிளாஸிக் கேமாகும். அதை மீண்டும், புதிய தொழில்நுட்பத்தில், இன்றைய கிராஃபிக்ஸ் நுணுக்கத்தோடு அனுபவிக்க ரசிகர்கள் பெரும் ஆவல் கொண்டுள்ளனர்.
டூம்ப் ரைடர் தொடரின் மையப்புள்ளியான கிராஃப்ட் கதாபாத்திரம், ஒரு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் (Archaeologist) மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த சாகசக்காரர். இவர் உலகம் முழுவதும் உள்ள ஆபத்தான புதையல்கள், பழங்காலக் கல்லறைகள் மற்றும் கைவிடப்பட்ட தொல்வாழ்விடங்களில் உள்ள அரும்பொருட்களைத் தேடிப் பயணம் செய்பவர். துணிவு, புத்திசாலித்தனம், தடகளத் திறன், துப்பாக்கிகள், வில் மற்றும் அம்பு போன்ற ஆயுதங்களைக் கையாளும் திறன், புதிர்களைக் கையாளும் திறன், சவாலான நிலப்பரப்புகளை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை லாராவின் தனிச்சிறப்பு.
இதுவரை 10 கோடிக்கும் அதிகமான கேம்கள் விற்பனை மற்றும் 2300 தடவைகளுக்கும் மேலாக உலகின் பிரபலமான பத்திரிகைகளில் அட்டைப்படமாக வெளியான கதாபாத்திரம் என்பது உட்பட ஆறு கின்னஸ் உலக சாதனைகளைக் கைவசம் வைத்திருக்கிறார் லாரா.
கேம்களாக மட்டுமல்லாமல், நாவல்களாக, காமிக்ஸ்களாக, திரைப்படங்களாக, ஸ்மார்ட் போன் கேம்களாக, டிவி தொடர்களாக, அனிமேஷன் தொடர்களாக லாரா கிராஃப்ட் தன் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறார். லேட்டஸ்ட்டாக, நேற்று, ’டூம்ப் ரெய்டர்: தி லெஜண்ட் ஆஃப் லாரா கிராஃப்ட்’ எனும் அனிமேஷன் தொடரின் சீசன் 2 நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
’தி கேம் அவார்ட்ஸ்’ நிகழ்வு என்பது விடியோ கேம்களுக்கான ’ஆஸ்கர்’ எனுமளவில் பார்க்கப்படுகிறது. நேற்றைய நிகழ்வில் இரண்டு லாராகிராஃப்ட் கேம்களுக்கான அறிவிப்போடு சேர்த்து, ’ஸ்டார் வார்ஸ்’, ‘டிவினிட்டி’, ‘ரெஸிடெண்ட் ஈவில்’ எனும் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள டிரெய்லர்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட புதிய கேம்களுக்கான அறிவிப்புகள் வெளியாகின. பல்வேறு பிரிவுகளில் கேம்களுக்கு வழங்கப்படும் 2025ம் ஆண்டுக்கான விருதுகளும் நிகழ்வில் வழங்கப்பட்டன. 2025ம், ஆண்டுக்கான ‘சிறந்த விடியோ கேம்’ எனும் முக்கிய விருதை, ’க்ளெயிர் அப்ஸ்க்யூர்’ Clair Obscur: Expedition 33 எனும் கேம் வென்றது.