"மதுவுக்கு அடிமையாகி, மீண்டது எப்படி?" மனம் திறந்த நடிகை ஊர்வசி

கடந்த 1983-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஊர்வசி.
Actress Urvashi
Actress Urvashi
Published on

கடந்த 1983-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஊர்வசி. முதல் படமே அவரை, பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. ஊர்வசிக்கும் மனோஜுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008-ம் ஆண்டு பிரிந்தனர். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் உள்ளார். பின்னர் ஊர்வசி, சிவபிரகாஷ் என்பவரையும் மனோஜ் கே ஜெயன், ஆஷா என்பவரையும் திருமணம் செய்துகொண்டனர். ஒரு காலக்கட்டத்தில் நடிகை ஊர்வசி மதுவுக்கு அடிமையாக இருந்ததாக சொல்லப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் சங்க துவக்க விழாவுக்கு நடிகை ஊர்வசி பங்கேற்க வந்திருந்தார். அப்போது, அவர் போதையில் இருந்துள்ளார்.

போதையில் இருப்பது தெரியாத நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள், மேடையில் பேச அவருக்கு அழைப்பு விடுத்தனர். மேடையில் பேசிய ஊர்வசி, சரமாரியாக உளற ஆரம்பித்தார். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ஊர்வசியை பேச்சை நிறுத்த வைத்து அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்புவதற்காக காருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களுடன் ஊர்வசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை கண்ட பலரும் நடிகை ஊர்வசியா இப்படி... என அதிர்ந்து போனார்கள்.

இந்த நிலையில், நடிகை ஊர்வசி தான் மதுவுக்கு அடிமையானது எப்படி என்பது குறித்து ரஜினி ஹரிதாஸ் என்பவருக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, '' எனது முதல் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு சென்ற போது, என் வாழ்க்கையில் அதுவரை சந்திக்காத அனுபவம் ஏற்பட்டது. அந்த வீட்டில் எல்லோரும் மிகுந்த மாடர்னாக இருந்தனர்.

அனைவரும், ஒன்றாக மது அருந்துவார்கள், உணவு சாப்பிடுவார்கள். குழந்தைகளும் மது அருந்தும், அவர்களின் தாயாரும் மது அருந்துவார்கள். இந்தச் சூழல் எனக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது. எனினும், கொஞ்சம் கொஞ்சமாக நானும் அவர்களின் வாழ்க்கை முறைக்கு என்னை அடாப்ட் செய்து கொண்டேன். அந்த வீட்டில் இருந்த யாருமே எனது உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. எனது தடுமாற்றங்களை உணர்ந்து கொள்ளவில்லை. இந்த சமயத்தில் எனது மூத்த சகோதரி கலா மட்டுமே எனக்கு உறுதுணையாக இருந்தார்.

எனினும், நானும் மதுவுக்கு பழக்கப்பட்டு விட்டேன். ஷூட்டிங் முடிந்ததும் அனைவரும் அமர்ந்து மது குடிப்போம். அது, எனது உடல் நலத்தையும் பாதிக்கத் தொடங்கியது.

எனது தோழிகளான ராதா, குட்டி பத்மினி ஆகியோர் நடிகை ஸ்ரீதேவியுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்கள். அவர்கள், நடிகை ஸ்ரீதேவியின் குடிப்பழக்கம் குறித்து என்னிடம் கூறியுள்ளனர். நானும், அதே போல ஆகிவிடுவேனோ என்கிற பயம் எனக்குள் ஏற்பட்டது.

இந்த சமயத்தில் எனது நெருங்கிய நண்பர்களும் , உதவியாளர்களும் மதுப் பழக்கத்தில் இருந்து வெளியே வர எனக்கு உதவி செய்தனர். இப்படிதான், கொஞ்சம் கொஞ்சமாக மதுபழக்கத்தில் இருந்து வெளியே வந்தேன். இந்த சமயத்தில் எனது கணவரின் குடும்பத்தினர் எதையும் வெளியே சொல்லக் கூடாது என்று என்னிடத்தில் கூறினர்.

மேலும், எனது குழந்தைகள் நலன் கருதியும் எனக்கு நேர்ந்த இந்த கொடூர அனுபவத்தை வெளியே சொல்லாமல் இருந்தேன். அதே வேளையில், எனது தோழிகள், 'உனக்கு நேர்ந்த இந்த இடர்பாடுகள் குறித்து வெளியே சொல்ல வேண்டும். பெண்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்று அடிக்கடி என்னிடத்தில் கூறிக் கொண்டிருந்தனர். இல்லையென்றால், உண்மையல்லாத செய்திகள் வெளியே கண்டபடி உலவும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

மலையாள சினிமாவில் 1985 முதல் 95ம் ஆண்டு வரை நான் பிசியாக இருந்தேன். இந்த சமயத்தில் என்னுடன் பழகிய பலருக்கும் என்னைப் பற்றி தெரியும்.

ஆனாலும், கடவுளின் அருளால் எனக்கு மகள் பிறந்தாள். எனது இல்லற வாழ்வு முழுமையும் அடைந்தது. தற்போது, மதுப் பழக்கத்தில் இருந்து முற்றிலும் மீண்டு விட்டேன். எனது வாழ்க்கையில், இன்னொரு முறை மதுவால் என்னை கட்டுப்படுத்த முடியாது."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Puthuyugam
www.puthuyugam.com