பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் தற்போது எம்.பியாக உள்ளார். டீன்ஏஜில் இருந்தே நடிக்க தொடங்கியவர். 1963ம் ஆண்டில் சத்யஜித்ரே இயக்கத்தில் வெளியான 'மாகாநகர்' படத்தில் நடித்ததில் இருந்து , ஜெயபாதுரியாக அறியப்பட்டவர். பின்னர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 1973ம் ஆண்டு நடிகர் அமிதாப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு, இந்தத் தம்பதிக்கு ஸ்வேதா என்ற மகள் பிறந்தார். மகள் பிறந்த பிறகும், தொடர்ந்து ஜெயா பச்சன் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
1981ம் ஆண்டு வெளியான 'ஷில்ஷிலா' படத்திற்கு பிறகு, திடீரென ஜெயா பச்சன் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில், ஜெயாபச்சன் பர்கா தத்தின் ''வீ தி வுமன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் ஜெயா பச்சன் பேசுகையில் '' ஸ்வேதா வளர்ந்து ஓரளவுக்கு விவரம் தெரிந்த காலக்கட்டம் அது. இந்த தருணத்தில் எனது வீட்டில் இருந்தே மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு செல்வதை நான் வழக்கமாக கொண்டிருந்தேன். அப்படிதான், ஒருநாள் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தேன். எனது மகள் என்னிடத்தில் வந்தாள். 'என்ன செய்கிறாய்?' என்று கேட்டாள். நான் விஷயத்தைத் சொன்னதும், 'மம்மி நீ போக வேண்டாம்.... அப்பா மட்டும் போகட்டும்' என்று அப்பாவியாக என்னிடத்தில் சொன்னாள். இந்த வார்த்தைகளை அவள் என்னிடத்தில் சொன்ன விதம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது. இத்தனைக்கும் அவளை கவனித்துக் கொள்ள வீட்டில் பலர் இருந்தனர். ஆனாலும், தாய்மையின் அருகே இருக்க மகள் விரும்புவதை நான் உணர்ந்து கொண்டேன்.
இதையடுத்தே , இனிமேல் படங்களில் நடிக்க வேண்டாமென்று முடிவெடுத்தேன். அப்போது, பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. நடித்ததையே திரும்பத் திரும்ப நடிப்பது போல இருந்தது. இதனால், பட வாய்ப்புகளை நிராகரிக்கத் தொடங்கினேன். இத்தகைய வேடங்களில் நடிப்பதற்கு பதிலாக, நல்ல மனைவியாக, குழந்தைக்கு நல்ல தாயாக வீட்டிலேயே இருந்து விடலாமே என்று கருதித்தான் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன்.
அதே வேளையில், எனது மகள் ஸ்வேதா திருமணமாகிச் சென்ற பிறகு, நான் தனிமையில் விழுந்தேன். ஒரு விதத் தனிமை வாட்டியது. இந்தச் சமயங்களில் நடிப்பதற்கு சில வாய்ப்புகள் வந்தன.அவற்றை ஏற்றுக் கொண்டேன்'' என்றார்.
ஜெயாபச்சனிடம் 'திருமணம் என்ற ஒன்று காலாவதியாகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?' என்று கேட்டபோது, ஜெயா பச்சன் அந்த கருத்தை ஒப்புக்கொண்டார். ''நான் இப்போது பாட்டியாகிவிட்டேன். எனது பேத்தி நவ்யாவுக்கு 28 வயதாகிறது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று இளம்பெண்களுக்கு அறிவுரை சொல்லும் வயதில் நான் இருக்கிறேன். திருமண உறவுகள் வேகமாக மாறிவருகின்றன. திருமண நடைமுறைகள் காலாவதியாகிவிட்டது. எனது பேத்தியைக் கூட . "திருமணம் செய்து கொள்" என்று நான் கூறத் தயாராக இல்லை. சட்டப்பூர்வ திருமணம் கூட எந்த உறவையும் வரையறுக்கவில்லை. இளையதலைமுறையினர் வாழ்க்கையை அனுபவித்து வாழட்டும். 'லட்டு' மனித வாழ்க்கையுடன் இணைந்தது. அதை , சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல். அதை, சாப்பிடாமலும் இருக்க முடியாது. அதேபோலத்தான், இந்த காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கையும் மாறி விட்டது. திருமணம் செய்தாலும் வருத்தம் இருக்கும். செய்யாவிட்டாலும் வருத்தம் ஏற்படும். நான் வெளிப்படையாக எதையும் பேசிவிடுபவள். எனது கணவரோ எதையும் வெளிப்படையாக பேச மாட்டார். அவர் சற்று வித்தியாசமானவர். இதனால்தான், அவரை மணந்து கொண்டேன்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.