ஹாலிவுட் திரைத்துறையில் நூறு ஆண்டுகளைக் கடந்த, பாரம்பரியமிக்க, புகழ்பெற்ற நிறுவனம் வார்னர் பிரதர்ஸ்!
1923ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல தனிச்சிறப்புகளைக் கொண்டது. முதல் பேசும் படமான The Jazz Singer படத்தைத் தயாரித்தது இந்த நிறுவனம்தான். Casablanca, The Maltese Falcon போன்ற காலத்தால் அழியாத, புகழ்பெற்ற படங்களை உருவாக்கியதும் இதுதான். கார்ட்டூன் படத் தயாரிப்புகளில் டிஸ்னி நிறுவனம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தனித்துவமான Looney tunes, Merry melodies போன்ற கார்டூன்களுக்கான நிறுவனங்களைத் தொடங்கி அத்துறையிலும் கோலோச்சியது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் டிசி காமிக்ஸ், டைம்ஸ், டிஸ்கவரி போன்ற நிறுவனங்களையோ, அதன் பகுதிகளையோ தனதாக்கிக்கொண்டு, திரைத் தயாரிப்பு மற்றும் ஊடகத்துறையில் பெரும் வளர்ச்சியை அடைந்தது வார்னர் பிரதர்ஸ்! இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 5 லட்சம் கோடிகளுக்கும் மேலானதாகும்.
இத்தகைய நிறுவனத்தைத்தான் இப்போது நெட்பிளிக்ஸ் தனதாக்கிக் கொண்டிருக்கிறது.
1997-ல் தொடங்கப்பட்ட நெட்பிளிக்ஸ், முதலில் VHS டேப்புகள் மற்றும் சிடி, டிவிடிகளை விற்பனை செய்யக்கூடிய, வாடகைக்குத் தரக்கூடிய நிறுவனமாகத்தான் களத்தில் இறங்கியது. பின்னர் இணையத்தின் பெரும் வளர்ச்சியைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட நெட்பிளிக்ஸ் 2007 லிருந்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் செயலி சேவைக்கு மாறியது. 2010 க்கு பின்னர் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. ஹாலிவுட் படங்களின் மிகப்பெரிய லைப்ரரியை உருவாக்கியது மற்றும் House of Cards, Stranger Things, Money Heist போன்ற புகழ்பெற்றத் தொடர்களைச் சொந்தமாகத் தாயாரித்தது என நெட்பிளிக்ஸ் அடுத்தடுத்தக் கட்டத்திற்கு வேகமாக நகர்ந்தது. தொடர்ந்து, தனது சேவையை உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவலாக்கியது. ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற போட்டியாளர்கள் இருப்பினும் ஓடிடி துறையில், இன்று சுமார் 30 கோடி வாடிக்கையாளர்களுடன் அசைக்க முடியாத இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது நெட்பிளிக்ஸ்! இதன் இப்போதைய சந்தை மதிப்பு சுமார் 36 லட்சம் கோடிகளாகும்.
இந்த நிலையில்தான் டிசம்பர் 2025ல், நெட்பிளிக்ஸ், வார்னர் பிதர்ஸை சுமார் 7 லட்சம் கோடிகள் தந்து, தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது.
இதனால், வார்னர் பிதர்ஸின் தயாரிப்புகள், ஸ்டுடியோ, அதன் கிளை நிறுவனமான HBO மற்றும் அதன் தயாரிப்புகள் என அனைத்தும் நெட்பிளிக்ஸுக்குச் சொந்தமாகியிருக்கிறது. இதனால், ஏற்கனவே பிரம்மாண்டமாக இருக்கும் நெட்பிளிக்ஸின் லைப்ரரி இன்னும் பெரிதாகும். இப்போது ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கும், வார்னர் பிரதர்ஸின் பிரபலமான Game of Thrones, The Sopranos, Succession, The Wire போன்ற படைப்புகள் விரைவிலேயே நெட்பிளிக்ஸ் தளத்தில் குவிக்கப்படும். அதோடு, ஹாலிவுட் சினிமாக்கள் தயாரிப்பிலும் நெட்பிளிக்ஸ் இறங்கும். இதை முன்னிட்டு உலகளாவிய அளவில் சில விமர்சனங்கள் எழுந்தாலும், இது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான நகர்வாகவே துறை வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.
இதனால், நெட்பிளிக்ஸின் மாதாந்திர சந்தா உயருமா எனும் கேள்வி நமக்கு எழுகிறதல்லவா? நம் பிரச்சினை நமக்கு! உடனடியாக இருக்காது எனினும், 2026ன் பிற்பகுதியின் கணிசமாக உயரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்!