கருத்தாக்கத்திலும், தொழில்நுட்பத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது, அடுத்த பரிணாமத்துக்கு நகர்ந்து கொண்டேயிருக்கிறோம். அதே நேரம், அந்த சினிமாவை வழங்கும் பாணி, அதாவது திரைமொழியும் புதிய நுட்பங்கள், புதிய சிந்தனைகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து வருகிறது. இந்த விஷயத்தில்தான் ஒவ்வொரு படைப்பாளியும் வேறுபடுகிறார்கள். படைப்பாளிகளின், அதாவது சினிமாவைப் பொறுத்தவரை இயக்குனர்களின் தனித்துவம் வெளிப்படும் இடமும் இதுதான். அப்படியான படைப்பாளிகளிடம் இருந்ததுதான், பார்வையாளர்களான நாமும் புதிய காட்சி அனுபவத்தைப் பெறுகிறோம்!
தமிழ் சினிமாத் துறையும், தொடக்கத்தில் புராணக் கதைகளை மேடை நாடக பாணியில், பாடல்களோடு இணைத்து உருவாக்கும் நிலையிலிருந்து முன்னேறி சமூகக் கதைகளுக்கு 1950களிலேயே நகர்ந்துவிட்டாலும், பார்வையாளர்களின் உணர்வுகளை செயற்கையாகத் தக்கவைத்துக்கொள்ள சண்டைக்காட்சிகளையும், அவர்களின் கதை கேட்கும் மனம் தளர்வடையும் போது அதற்கு ஓய்வு தருவதற்காக பாடல்களையும் பயன்படுத்தும் ஒரு திரைமொழியை உருவாக்கிக் கொண்டது. இன்றளவும், கமர்ஷியல் சினிமா எனப்படும் அந்த வகைமைதான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இதற்கு மாற்றாக உலகெங்கிலும் அவ்வப்போது புதிய வகைமையிலான சினிமாக்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. நியூவேவ் சினிமா, மினிமலிடிக்ஸ் சினிமா, ரியலிஸ்டிக் சினிமா என்ற பல்வேறு பெயர்களை நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இவையெல்லாம் என்ன? இவற்றுக்கு என்ன பொருள்? இப்படியான சினிமாக்கள் தமிழில் உருவாக்கப்படுகின்றனவா என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்.
1. நவீன சினிமா (New Age Cinema)
பாரம்பரியமான மற்றும் வணிக ரீதியான திரைப்படங்களின் பழைய ஃபார்முலாக்களை உடைத்துக்கொண்டு, கதை சொல்லலில் புதிய அணுகுமுறையை மேற்கொள்ளும் படங்கள் நவீனத் திரைப்படங்கள் எனப்படுகின்றன. நட்சத்திர அந்தஸ்தை விலக்கி வைத்துவிட்டு, பெரிய பட்ஜெட், பிரமாண்டம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தராமல், திரைக்கதை மற்றும் கருத்தின் ஆழத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தன்மை (Melodrama), செயற்கையான சண்டைக் காட்சிகள், கட்டாய டூயட் பாடல்கள் போன்றவற்றைத் இப்படங்கள் தவிர்க்கின்றன. இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமான காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. சமூகப் பிரச்சினைகள், மனநலம், தனிப்பட்ட உறவுச் சிக்கல்கள், பாலினப் பிரச்சினைகள் போன்ற சவாலான அல்லது சர்ச்சைக்குரிய தலைப்புகளைத் தைரியமாக இவை கையாள்கின்றன.
பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே முதன்முதலான ஸ்டுடியோக்களைத் தவிர்த்து முழுக்க கிராமத்தைக் காட்டி, நவீன சினிமாவாக அன்று பார்க்கப்பட்டக்து. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய ‘பேசும்படம்’, தியாகராஜா குமாரராஜாவின் ’ஆரண்யகாண்டம்’, மிஷ்கினின் 'சித்திரம் பேசுதடி', அஞ்சாதே', மணிகண்டனின் ‘காக்காமுட்டை’ போன்ற படங்களை நவீன சினிமாவுக்கு உதாரணங்களாக நாம் பார்க்க முடியும்.
2. யதார்த்த சினிமா (Realistic Cinema)
உண்மை அல்லது புற உலகை அப்படியே அதன் இயல்பான வடிவத்தில் திரையில் பிரதிபலிக்கும் பாணி, யதார்த்த சினிமா எனப்படுகிறது. இது, திரைப்படத்தை ஒரு கலை வடிவமாகப் பயன்படுத்தினாலும், அதன் வடிவத்தையும், பாணியையும் விட, உண்மையான வாழ்க்கையை அப்படியே பதிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. பிரம்மாண்டமான ஸ்டுடியோ விளக்குகளுக்குப் பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் ஒளியைப் பயன்படுத்துவது, செட்களுக்குப் பதிலாக நிஜமான களங்களைப் பயன்படுத்துவது போன்ற உத்திகளால், காட்சிகளை யதார்த்தமாக்குகிறது. இதனால் நவீன சினிமாவிலிருக்கும் அழகியலுக்கான முக்கியத்துவம் இங்கே குறைகிறது. போலவே, படத்தொகுப்பும் (Editing) கண்ணுக்குத் தெரியாத வகையில் இருக்கும். காட்சிகளை வேகமாக வெட்டி நகர்த்துவதற்குப் பதிலாக, நீண்ட ஷாட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நேரத்தைக்கூட இயற்கையாக ஓடுவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன இந்தப் படங்கள்.
பாலு மகேந்திராவின் 'வீடு' யதார்த்த சினிமாவுக்கு நல்லதொரு உதாரணம். லெனின் பாரதி இயக்கத்தில் வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை, வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி, கூழாங்கல் போன்ற தமிழ் சினிமாக்கள் இவ்வகைமையிலான படங்கள் எனலாம்.
3. மாய யதார்த்த சினிமா (Magical Realism Cinema)
முழுவதுமாக யதார்த்தமான ஒரு பின்னணியில் சொல்லப்படும் ஒரு கதையில், திடீரென்று விவரிக்க முடியாத, மந்திரம் அல்லது மாயாஜாலத் தன்மை கொண்ட ஒரு ஃபேண்டஸி நிகழ்வு வந்து இணைந்து பார்வையாளர்களை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. இங்கே, அந்த ஃபேண்டஸியானது, கதையின் ஓட்டத்தில் எந்தவிதமான லாஜிகல் கேள்வியையும் எழுப்பாமல், சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது பொதுவாக சைன்ஸ் பிக்சன் மற்றும் ஃபேண்டஸி ஜானர் வகைமையிலான கதைகளோடு தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பிருப்பினும், இது கதையின் வகைமை அல்ல, கதை சொல்லல் வகைமை! ஃபேண்டஸியான விசயங்கள் ஒரு கனவுலகமாக மட்டுமேயல்லாமல், ஃபேண்டஸி வழக்கமாக ஆடியன்ஸிடம் ஏற்படுத்தும் எக்ஸைட்டிங்கான விளைவுகளை மட்டுமே முன்னிறுத்தாமல், ஆதாரக்கதைக்கு வேறொரு பரிமாணத்தைத் தருவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகைமையில் தமிழ் சினிமாக்கள் குறைவு எனினும், மனோஜ் லியோனல் ஜாக்சன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘குதிரைவால்’ இவ்வகையிலான தமிழ் சினிமாவுக்கு உதாரணமாகப் பார்க்க முடியும்.
4. சர்ரியலிஸ்ட் சினிமா (Surrealist Cinema)
Eternal Sunshine of the Spotless Mind, Everything Everywhere All at Once போன்ற பல சிறந்த படங்களை இவ்வகையில் குறிப்பிடமுடியும் என்றாலும் தமிழில் இவ்வகையும் அரிதானதே! மனிதனின் ஆழ்மனம் (Subconscious Mind), கனவுகள், உள்ளுணர்வு ஆகியவற்றின் விசித்திரமான பிம்பங்களை திரையில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட படங்கள் இவை. இவ்வகைப் படங்களில் தர்க்கத்துக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலத் தோன்றும். கனவு எப்படித் தர்க்கமின்றி நகருமோ, அதே போன்ற அனுபவத்தை இவை ஏற்படுத்தும். இது கதையை விட, கதாபாத்திரத்தின் உள் உலகம், மனப்போராட்டங்கள் மற்றும் ஆசைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பைப் பற்றியதாக இருக்கும்.
சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய ’ஆளவந்தான்’ படத்தில் வரும் நந்து பாத்திரத்தின் பகுதிகள், செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’, பா, ரஞ்சித்தின் தங்கலான் போன்றவற்றை தமிழின் சர்ரியலிஸ்டிக் சினிமாக்கள் எனக் குறிப்பிடலாம்.
5. ஆவணப்புனைவு சினிமா (Docu-fictional Cinema)
உண்மையான, ஆவணப்படுத்தப்பட்ட காட்சிகள் (Documentary Footage) அல்லது அவற்றின் மீளுருவாக்கம் செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைக் காட்சிகள் இரண்டும் இயல்பாகக் கோர்க்கப்பட்டு உருவாக்கப்படும் படங்களே ஆவணப்புனைவுகள் எனப்படுகின்றன. இவை, ஆவணப்படத்தின் உண்மைத்தன்மை (Authenticity) மற்றும் புனைகதையின் உணர்ச்சிகரமான ஆழம் (Emotional Depth) ஆகிய இரண்டின் பலத்தையும் பயன்படுத்திக்கொள்ள முயலுகின்றன. இவற்றில் சில கதைக்களங்கள் மற்றும் பாத்திரங்கள் உண்மையாக இருந்தாலும், அவர்கள் பேசிய வசனங்கள், கூடுதல் காட்சிகள் ஆகியவை கதாசிரியரின் / இயக்குநரின் கற்பனையால் புனையப்பட்டிருக்கும். இப்படங்களில், ஒரு வரலாற்று நிகழ்வு, ஒரு சமூகப் பிரச்சினை அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் வாழ்க்கையைப் பற்றிய உண்மையான தகவல்களை வழங்குவதுடன், அதை நாடகமயமாக்குவதன் மூலம் பார்வையாளருடன் உணர்ச்சிப்பூர்வமான இணைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வகையில் வெற்றிகரமான பல படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன.
மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி, சுதா கொங்கராவின் சூரரைப் போற்று, ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’, ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ போன்ற படங்களையும், சரத் ஜோதி இயக்கிய ‘கூசெ முனுசாமி வீரப்பன்’ போன்ற வெப்தொடர்களையும் இவ்வகைமையிலானவை எனக் குறிப்பிடலாம்.
6. மெட்டாஃபிலிம் (Metafilm)
மெட்டாஃபிலிம், அதாவது சுய-பிரதிபலிப்பு அல்லது சுயவிமர்சனத் திரைப்படங்கள் (Self-Reflexive Film) என்பவை ஒரு சினிமா, தானே ஒரு சினிமாதான் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் விதமாக அமைக்கப்படுவதாகும். அதாவது, படம் தன்னைப் பற்றியே பேசும் அல்லது படமாக்கும் செயல்முறையைத் தன் கதைக்களத்தின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும். அல்லது வழக்கமான கதை சொல்லலான, ஒரு தொடக்கம், ஒரு திருப்புமுனை, சிக்கல்கள், ஒரு முடிவு என்ற வடிவத்துக்குள் பார்வையாளர்களைக் கட்டிப்போட முயலாமல் வடிவத்தை உடைத்துக் கொண்டே இருக்கும். கதாபாத்திரங்கள் திடீரென நேராக கேமராவைப் பார்த்து பார்வையாளர்களுடன் பேசுவார்கள் அல்லது உரையாடலில் தாங்கள் ஒரு கதையின் பாத்திரங்கள் என்று குறிப்பிடுவார்கள். சிம்புதேவன் இயக்கிய படங்களில் இத்தகையக் கூறுகளைப் பார்க்க முடியும். ’இம்சைஅரசன் 23ம் புலிகேசி’ படத்தில், விஎஸ் ராகவன், ‘ஒரு கதையில் இரட்டைச் சகோதரர்கள் பிறந்து விட்டால், வேறு என்னதான் முடிவு வைக்க முடியும்?’ என்று பார்வையாளர்களான நம்மைப் பார்த்தே கேட்பார். இதுதான் ஒரு மெட்டாஃபிலிமுக்கான கூறு ஆகும்.
இந்த வகையில், ஒரு முழுமையான சினிமா தமிழில் இல்லை என்று சொல்லிவிடலாம். இருப்பினும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய, ‘ஜிகர்தண்டா’, அமுதன் இயக்கிய ’தமிழ்ப்படம்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘குட் பேட் அக்லி’, பார்த்திபனின், ‘கதை, திரைக்கதை, வசனம்’ போன்ற படங்களில் மெட்டாஃபிலிமுக்கான கூறுகள் உண்டு என ஒப்புக்கொள்ளலாம்.
7. மினிமலிச சினிமா (Minimalism Cinema)
மினிமலிசம் என்பது குறைவான கதாபாத்திரங்கள், குறைவான லொக்கேஷன்கள், மிகக் குறைந்த பின்னணி இசை, நிஜ வாழ்க்கை அமைப்பு, மெதுவான, கவனமான, அமைதியான காட்சி மொழி என Less is More எனும் அணுகுமுறையோடு எடுக்கப்படும் படங்களைக் குறிக்கிறது.
இப்படியான படங்கள் முயற்சிக்கப்படுகின்றன எனினும், அவை முழுமையான சினிமா அனுபவத்தைத் தருவதில் தோல்வியடைவதால், நம் கவனத்துக்கு வராமலேயே போய்விடுகின்றன. யதார்த்த சினிமா வகைமையில் நாம் பார்த்த, வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி, கூழாங்கல் இரண்டு படங்களுமே மினிமலிச படங்களுக்கும் பொருத்தமான உதாரணங்கள்தான்.