MASK - விமர்சனம் #MaskReview

அடுத்த காட்சியிலேயே ஆண்ட்ரியாவை வில்லனாகக் காண்பிக்கும் காட்சியை வைத்துக்கொண்டு எதற்காக அவருக்கு நல்லவர் என்பது போல ஒரு அறிமுகம்? அதில் என்ன சஸ்பென்ஸ் வேண்டி கிடக்கிறது?
MASK TAMIL
MASK TAMIL@jiohotstar
Published on

புதுமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கத்தில், கவின், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்க்.

பெரிய அரசியல் புள்ளியான பவன், எதிர்வரும் எலக்சனைக் கருத்தில் கொண்டு, 440 கோடி பணத்தை தமிழக முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறார். அந்த வேலையை, தமிழ்நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க்கை வைத்திருக்கும் பெரிய லேடி தாதா ஆண்ட்ரியாவிடம் ஒப்படைக்கிறார்.  ஆண்ட்ரியா, அவரது செயின் ஆப் சூப்பர் மார்க்கெட் மூலமாக அதை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்யும்போது, மொத்த பணத்தையும், எம்.ஆர்.ராதா மாஸ்க் அணிந்த எட்டு பேர் கொண்ட கும்பல், கொள்ளையடித்துக் கொண்டு போய்விடுகிறது. பணத்தை அடித்துக் கொண்டு போனது யார்? ஆண்ட்ரியா அந்த பணத்தை மீட்டாரா? ஹீரோ கவின் யார்? அவருக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதெல்லாம்தான் மீதிக் கதை!

இப்படி ஒரு கதையை, ஆக்சன் கலந்த டார்க் காமெடி தீமில் சொல்ல இயக்குனர் ஆசைப்பட்டு இருக்கிறார். ஆசையெல்லாம் சரிதான், ஆனால் அதற்கேற்ற திரைக்கதைதான் இல்லை. எத்திகல் ஹேக்கர், எத்திகல் ஸ்கேமர் என்ற பெயரில் ஹீரோ கவின், பெரிய தில்லாலங்கடி என்று காண்பிக்கிறார்கள். வித்தியாசமாக இருக்கட்டும் என்று நினைத்து அவருடைய மனைவி கேரக்டரை, படத்தில் எங்குமே காண்பிக்கவில்லை. ஆனால், அவரது குழந்தையை மையமாக வைத்துதான் பிற்பகுதி கதை நகரப் போகிறது எனும் நிலையில் இப்படி, அப்பா உள்ளிட்ட யார் மீதும் ஈடுபாடு இல்லாத ஒரு விட்டேத்தியான, சுயநல கேரக்டராக கவினைக் காண்பித்ததில் அந்த கேரக்டர் மீது நமக்கு வர வேண்டிய ஈடுபாடும் இல்லாமல் போய்விட்டது. மனைவி, குழந்தை, அப்பா, அம்மா, மாமனார் என்று அன்பான குடும்பம் என்று காண்பித்தால், இப்படிச் சிக்கல் ஏற்பட்டிருக்காது. ஆனால், இன்றைய இளைஞர்களுக்குப் பிடிக்கும் என்று, அவர் மீது இன்னொரு கிளைக்கதையை ஒன்றைக் காட்டியிருக்கிறார்கள், அதனால்தான் அந்த அன்பான குடும்பம் என்ற மெயின் கதைக்கு அவசியமான ஒரு விஷயத்தை அவர்களால் பண்ண முடியாமல் போயிற்று. அந்த கிளைக்கதை என்னவென்றால், ஒரு பெண்ணை உறவுக்காக கவின் துரத்துவது போலவும், அந்தப் பெண்ணுக்கும், கொள்ளையர்களில் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்தக்கிளைக்கதை போகிறது. கவின் கேரக்டரை சிதைப்பது மட்டுமல்ல, அது கொள்ளையர்களின் பின்கதைக்கும் முற்றிலும் எதிராக கட்டமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு செக்‌ஷுவல் அப்பீல் கிடைக்கிறது, அதை வைத்து டார்க் காமெடி செய்யலாம் எனும் நினைப்பில் அதை வைத்ததால், கவினின் கேரக்டர் மற்றும் பிரதான கதையமைப்பு சிதைந்துள்ளது.

இது போதாதென்று, எல்லாக் காட்சிகளையும் வளவளவென்று எடுத்து வைத்திருக்கிறார்கள். அடுத்த காட்சியிலேயே ஆண்ட்ரியாவை வில்லனாகக் காண்பிக்கும் காட்சியை வைத்துக்கொண்டு எதற்காக அவருக்கு நல்லவர் என்பது போல ஒரு அறிமுகம்? அதில் என்ன சஸ்பென்ஸ் வேண்டி கிடக்கிறது?

பொதுமக்களுக்கும், எங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று கொள்ளையர்கள் காண்பிப்பதற்காக ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். அதெதற்கு அத்தனை நீளமாகப் போய்க்கொண்டே இருக்கிறது? 

இப்படி நிறைய சிக்கல்கள் இருந்தாலும், பொழுது போகாமலிருந்தால் ஒருமுறை பார்க்கலாம் எனும் அளவில் படம் வந்திருக்கிறது என சொல்லலாம்!

Puthuyugam
www.puthuyugam.com