கேரளத்தின் கொச்சியில் உள்ள மஞ்சுமெல் பகுதியிலிருந்து 11 நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறது. அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றை அக்குழு சந்திக்கிறது. அதிலிருந்து அந்த நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சென்ற ஆண்டு வெளியான இந்த படம் கேரளா மட்டுமல்ல தமிழகத்திலும் சக்கை போடு போட்டது. 2006ம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை நிகழ்ச்சியை கதைக்களமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருந்தனர். இந்தப் படத்தில் இளையராஜா இசையில் உருவான 'கண்மணி அன்போடு' பாடலும் இடம் பெற்றிருந்தது. இதனால், தமிழ் மக்களும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தினை ஒன்றிப்போய் பார்த்தனர்.
கொடைக்கானல், குணா குகை, குணா படத்தின் பாடல், தமிழ் நடிகர்கள் என தமிழுக்கு அதிக முக்கியத்தும் இருந்ததால், 33 கோடிகளுக்கு மேல் தமிழ்நாட்டில் இந்தப் படம் வசூலித்தது. மலையாள சினிமாவில் முதலில் 100 கோடிகளைக் கடந்த படம் புலி முருகன். இதையடுத்து லூசிஃபர், 2018, பிரேமலு ஆகிய படங்கள் 100 கோடியைக் கடந்தன. அடுத்து வந்த மஞ்சுமெல் பாய்ஸ் 200 கோடியை வசூலித்தது. 200 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையும் இந்த படத்துக்கு கிடைத்தது. பின்னர் வந்த எம்புரான் மற்றும் லோகா படங்கள்தான் மஞ்சுமெல் பாய்சின் பட வசூலை முறியடித்தன.
இந்த, மஞ்சுமெல் பாய்சின் கதையின் உண்மை நாயகன்தான் சுபாஷ் சந்திரன். கொச்சியை சேர்ந்த இவர்தான் குணா குகைக்குள் விழுந்தவர். இவரைதான் நண்பர்கள் போராடி குணா குகையில் இருந்து மீட்டெடுத்தனர். மஞ்சுமெல் பாய்ஸ் வெளியான போது, சுபாஷ் சந்திரனும் பிரபலமானார். இவர், காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர் என்பது பலரும் அறியாதது. தற்போது, இவரது பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதனால், எர்ணாகுளம் அருகேயுள்ள ஈழுர் முனிசிபல்டி பஞ்சாயத்து தேர்தலில் வார்டு 27ல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுபாஷ் சந்திரன் போட்டியிடுகிறார். இதுகுறித்து சுபாஷ் சந்திரன் கூறுகையில், ''மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வழியாக கிடைத்த பிரபலத்தினால் எனக்கு இந்த வாய்ப்பு வரவில்லை. சிறுவயது முதலே நான் ஐ.என்.டி.யூ.சி. வில் இருந்து வருகிறேன். எனது பெற்றோர் இருவருமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், அரசியலில் தீவிரமாக இயங்க முடியவில்லை. என்னால், அரசியலில் பெரிய மாற்றம் நிகழும் என்று கூறமாட்டேன். ஆனால், நிச்சயமாக நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாகப் பணியாற்றுவேன். ஏழைகளால்தான், ஏழைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். நானும் ஏழைதான். நானும், எனது நண்பர்களும் சமூகப்பணிகளில் ஈடுபட்டுதான் கொண்டிருக்கிறோம். அரசியல் ரீதியாக வெற்றி பெற்றால், இன்னும் நல்ல முறையில் பணிகளை மேற்கொள்ள முடியும். குணா குகையில் விழுந்த பிறகு, என்னால் கடினமான பணிகளை செய்ய முடியவில்லை. இதனால், வெல்டிங் பணியில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகிறேன் . இப்போதும் , எனது பல்வேறு பணிகளுக்கு என்னை குணா குகையில் இருந்து மீட்டெடுக்க முழு காரணமாக இருந்த எனது நண்பர் சிஜூ டேவிட் பல்வேறு விதங்களில் உதவிகரமாக இருக்கிறார்' என்று தெரிவித்துள்ளார்.