சென்ற வாரம், கமல்ஹாசனின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைகிற ஒரு நிகழ்வு, தமிழ்த் திரையுலகமே நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விசயமென்பதால் அந்த அறிவிப்பு எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டியிருந்தது.
அதுவும் இப்போதைய ட்ரெண்டான ஆக்சன் கதைகளை இயக்கும் லேட்டஸ்ட் இயக்குனர்கள் அல்லாது யாரும் எதிர்பாக்காத வண்ணம் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார் என்று செய்தியுமே ரசிகர்களிடம் அது ஒரு வித்தியாசமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. வழக்கமான ஆக்ஷன் படங்களுக்கு மாறாக ஒரு ஜாலியான காமெடி கதையில் ரஜினிகாந்தை பார்க்கலாம் எனும் எண்ணமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே படத்திலிருந்து, தன்னிச்சையாக விலகி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.
சுந்தர் சி இப்படிச் செய்தது சரியா? புகைப்படங்களுடன் கூடிய ஒரு முறையான அறிவிப்பு ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து வெளியாகிறது என்றால் அதற்கு முன்னமே போதுமான அளவு முன்னேற்பாடுகளும், கதை விவாதங்களும் நடந்து இயக்குனருக்கும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஒரு குறைந்தபட்ச புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நாம் நம்பலாம். அப்படி இருக்கும் போது இப்படி தன்னிச்சையாக அந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது ஒரு முறையான காரியமாகத் தெரியவில்லை.
ஒரு இயக்குனருக்கும், நடிகருக்கும் கதையிலோ, பிற விஷயங்களிலோ கருத்து வேறுபாடு எழுவது இயல்புதான். அதனால் படத்தில் இருந்து இயக்குனரோ, நடிகரோ விலகுவதும் கூட இயல்புதான். இந்தப் படத்திலும் சுந்தர் சிக்கும், ரஜினிகாந்த்துக்கும் இடையே எழுந்த கதை குறித்த மாற்றுக் கருத்துக்கள்தான் அவரின் இந்த முடிவுக்குக் காரணம் என்று சோசியல் மீடியாக்களில் உலா வந்த செய்தி உண்மை என்பது போலத்தான் கமலஹாசனின் குறும்பேட்டியும் நிரூபிக்கிறது. அப்படி இருக்கையில் சுந்தர் சி இதை இன்னும் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாண்டிருக்கலாம். அவரது எளிமையான கூல் நேச்சரும், நீண்ட சினிமா அனுபவமும் அதற்கு உதவி இருக்கும். அப்படிச் செய்யாமல் தன்னிச்சையாக வெளியேறியதன் மூலம் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த்துடன் தனக்கு இருந்த சுமுகமான உறவை பாதித்துக்கொண்டிருக்கிறார், அவர்களை அவமதித்திருக்கிறார் என்றுதான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இத்தனைக்கும் அருணாச்சலம் படம் மூலமாக ரஜினிகாந்த்துடனும், அன்பே சிவம் படம் மூலமாக கமலஹாசனுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவமும், நட்பும் அவருக்கு இருந்தது. பொதுவாக ரஜினிகாந்த், உடன் பணியாற்றும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், சக கலைஞர்களுக்கும் மிகுந்த மரியாதை அளிப்பவர் என்று நாம் அறிந்திருக்கிறோம். அவருடன் பணியாற்றிய யாரும் அவரைப் பற்றி இதுவரை எந்தச்சிறு குறையும் சொன்னதே இல்லை என்பதிலிருந்து அவர் இத்தனை ஆண்டுகளாக எவ்வளவு கவனமாக தனது கேரியரை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணர முடியும். அப்படி ஒருவருக்கு தனது கதை பிடிக்கவில்லை என்று தெரிந்தால், அதை சரி செய்து அவரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் அல்லது கவனமாக முடிவை அவரிடமே விட்டுவிட்டு, போதுமான காலமெடுத்துக்கொண்டு நாசூக்காக விலகி இருக்கவும் முடியும். அதை விடுத்து தமிழ்சினிமாவின் முக்கியமான இரண்டு ஐகான்களை அவமதிக்கும்படி இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சுந்தர் சி நடந்துகொண்டிருக்கக்கூடாது என்பதுதான் ரசிகர்களின் கருத்து.