ரஜினியும், கமலும் அவர்கள் இணைந்து உருவாக்கவிருக்கும் படத்தைப் பற்றி சமீபமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்புகளாகக் கொடுத்திருந்தாலும், படம் தள்ளிப்போய், டிராப் ஆகி, நடக்காமல் போகவும் வாய்ப்புகள் இருந்தன. ஏனெனில், அவர்களின் டிராக் ரெக்கார்டு அப்படி! இப்போது ரிலீஸ் தேதியோடு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் அபிஷியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டதால் இனி அது நடக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது.
இதுவுமே நாம் எதிர்பாராத ஒன்று என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் தயாரிப்பில், இன்னொருவர் நடிப்பது என்று இருபது வருடங்களாக அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த, அவர்களுக்கிடையே இருக்கும் சுமுக உறவையும் நட்பையும் பறைசாற்றும் நடவடிக்கைதான் இது.
சமகால உச்ச நடிகர்கள் மார்க்கெட்டிங் லாபத்துக்காக அவரவர் ரசிகர்களை உசுப்பிவிட்டு ரசிக சண்டையை ஏற்படுத்திக் குளிர் காயாமல், எப்படி ஆரோக்கியமான ஒரு நல்லுறவைப் பேண வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக ரஜினியும், கமலும் தங்கள் சினிமா கேரியரை வடிவமைத்துக் கொண்டார்களோ, அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும் பார்க்கப்படுகிறது. அவ்வகையில் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதே!
ஆனால், இதில் இருவரும் இணைந்து, இணையான பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது அறிவிப்பைப் பார்த்தாலே தெரிகிறது! இருவருக்கும் இணையான பங்களிப்பு கொண்ட, இருவரின் திறமைக்கும் தீனி போடுகிற ஒரு சிறப்பான கதையை வடிவமைத்து, இயக்கும் வல்லமை கொண்ட இயக்குநர்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்திய அளவிலும், எஸ் எஸ் ராஜமௌலி போன்ற ஓரிருவர் இருந்தாலும் அப்படியொரு மெகா கூட்டணி நடக்க வாய்ப்புகள் இனி குறைவு!
இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குகிறார் எனும் செய்தி மட்டும்தான் ஒரு சின்ன ஆச்சரியத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. வெற்றிமாறன், லோகேஷ், நெல்சன் போன்ற ரஜினி, கமல் இருவருக்கும் நெருக்கமான இன்றைய ஹாட்கேக் இயக்குநர்களில் யாராவது இயக்கலாம் எனும் நம் இயல்பான எதிர்பார்ப்புக்கு மாறாக சுந்தர் சி உள்ளே வந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் வெற்றிகரமாக நீடித்துக் கொண்டிருப்பவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா எனும் மெகாஹிட் படத்தைத் தந்திருந்தாலும், அதற்கு முன்னும் பின்னுமாக ஏராளமான மினிமம் கேரண்டி நகைச்சுவை, பேக்கேஜ் படங்களை மட்டுமே தந்தவர். விதிவிலக்காக கமல்ஹாசனோடு இணைந்து ‘அன்பே சிவம்’ எனும் ஒரே ஓர் ஆர்டிஸ்டிக் படத்தை இயக்கியிருக்கிறார். அது மட்டுமே ஒரு கல்ட் கிளாஸிக் படமாக இன்றளவும் அவரது பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், பேட்டிகளில் அவர் வெளிப்படும் விதத்தைப் பார்க்கும் போது, சுந்தர் சி கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர் என ஊகிக்க முடியும். சினிமா எனும் கலையை புரிந்து வைத்திருப்பவர் என்பதையும், ஆனால், அதை விடவும் சினிமாவை ஒரு தொழில் எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதையே முதன்மையாகக் கொண்டவர் என்றும் புரிந்துகொள்ளலாம். இந்த விசயம்தான், ரஜினி, கமல் இருவருக்கும் இவர் மீதான நம்பிக்கையை தக்கவைத்திருக்கிறது.
ரஜினியைப் பொறுத்தவரை வணிக வெற்றிதான் பிரதான குறிக்கோள். சுந்தர் சிக்கும் அதுவே! புதிய இயக்குநர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து அவர்களோடு ரஜினி பயணித்தாலும், அவரால் அவர்களுக்கு பலனிருந்திருக்கிறதே தவிர, அவர்களால் ரஜினியுடைய லெகஸியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக முடிந்ததில்லை. சுந்தர் சியைப் பொறுத்தவரை, 90கள் மற்றும் 2000களில் பிரபலமாக இருந்த இயக்குநர்களான கேஎஸ். ரவிக்குமார், பி.வாசு, சுரேஷ்கிருஷ்ணா, சேரன், விக்ரமன், கௌதம் வாசுதேவ், செல்வராகவன் என பலரும் இன்று காணாமல் போய்விட்ட நிலையில், தனது குன்றாத ஆர்வத்தால் இன்றும் நீடித்திருக்கிறார். எல்லாவற்றையும் விட ஆர்வமும், சுய ஊக்கமும் மட்டுமே ஒருவரை தொழிலில் நீடித்திருக்க வைத்திருக்கக் கூடியவை. அதன் பலன்தான் இன்று இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் ஆக்குவதன் மூலம், ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வாய்ப்பு சுந்தர் சியின் முன்னால் இருக்கிறது. சுந்தர் சியின் கூல் நேச்சருக்கு முன்னால் ரஜினி, கமல் எனும் பிரம்மாண்டமோ, ரசிக எதிர்பார்ப்பு எனும் பதற்றமோ அவரை ஒன்றும் செய்யாது, இது அவருக்குப் பெரிய பலமாக இருக்கும். அட்டகாசமான ஒரு கதையை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டால், இப்போதே வெற்றிவிழாவில் பேசவிருக்கும் வசனத்தை அவர் தயார் செய்துவிடலாம்.
கமல்ஹாசனைப் பொறுத்தவரை, அவரது அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு தீவிர சினிமாவிலிருந்து சற்றே விலகிப் போய்விட்டார் என்பது தெளிவு. சற்றே ரிடையர்டு மனநிலை இது! அதனால்தான் கதை, திரைக்கதையில் தன் தலையீடு இல்லாமல், இயக்குநர்களை நம்பி, இந்தியன் 2, தக்லைஃப் போன்ற படங்களில் தலையைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உணரலாம். அதனால், இதிலிருந்து முற்றிலும் ஒரு தயாரிப்பாளராக மட்டுமே விலகி நின்றுவிடாமல், கதையென்ன என்பதை சற்றே காது கொடுத்திருப்பார் அல்லது கொடுப்பார் என்று நம்பலாம். படம் பிளாக்பஸ்டராவது ஒரு பக்கமிருந்தாலும், தன் பேனரிலிருந்து வரவிருக்கும் ஒரு படம் தனது மற்றும் ரஜினியின் பெயரை உயர்த்தாவிட்டாலும் கூட பரவாயில்லை, குறைந்த பட்சமாக டேமேஜ் செய்யாமலாவது இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். இது இந்தப் படத்தை அருணாச்சலம் போலவோ, அரண்மனை 5 போலவோ வந்துவிடாமல் காக்கும்.
கூடவே, கமல் இந்தப் படத்தில் நடிப்பாரா எனும் கேள்வி ரசிகர்களிடையே வைரலாகியிருக்கிறது. ஒரு பலமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பேயில்லை என்பதை இந்த அறிவிப்பின் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு கேமியோவில் நிச்சயம் நடிப்பார் என்பதை மிக எளிதாக ஊகிக்கலாம். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.
கமல்ஹாசனின் தற்போதைய அரசியல் சூழல், 'எல்லாம் பார்த்தாச்சு' எனும் மனநிலை எல்லாவற்றையும் தாண்டி, இது சொந்தத் தயாரிப்பு என்பதையும் ரஜினியோடுள்ள கமலுக்கான நட்பையும் வைத்து, கமலை கன்வின்ஸ் செய்ய ஒருவரால் முடியும். அவரும் கன்வின்ஸ் ஆவார்.
அந்த ஒருவர், ரஜினி. அவர்மூலம் இதை சாதிக்க வைப்பார் சுந்தர். சி!
எனவே, கமல் நிச்சயம் கேமியோவில் தோன்றுவார்! காத்திருப்போம்!