

இந்தப் படத்தின் டிரைலர் ஓர் எதிர்பார்ப்பை நம்மிடையே ஏற்படுத்தியிருந்தது. கூடவே பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ எனும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தார்கள். அதையெல்லாம் இப்படி விளையாட்டாகக் கையாள முடியாதே, சொதப்பலாகும் வாய்ப்பும் இருக்கிறதே என்ற பயமும் நமக்கு இருந்தது. ஆனால், பெண்ணியம் பற்றிய வசனங்கள் ஆங்காங்கே இருந்தாலும், அந்த விசயத்துக்குள் எல்லாம் தீவிரமாகப் போகாமல், மேலோட்டமான கணவன், மனைவி பிரச்சினை, காதல், புரிதலின்மை, காமெடி என்ற அளவிலேயே பாதுகாப்பாக நின்று கொண்டார்கள். படமும் பார்க்கிற மாதிரி வந்திருக்கிறது.
பெற்றோர் பார்த்து வைத்த திருமண பந்தத்துக்குள் போகும் சிவாவுக்கும், சக்திக்கும் இனிமையாகத் தொடங்கும் வாழ்க்கை, சக்தியின் முதிர்ச்சியற்ற முற்போக்கால் சிக்கலுக்கு ஆளாகிறது. டைவர்ஸ் கேட்கிறார் சக்தி. இறுதியில், சிவா தன் பக்கமிருக்கும் சிறிய பிற்போக்குத் தனங்களைத் திருத்திக்கொண்டு, மனைவியையும் அன்பால் திருத்துவதுதான் கதை! அதை இயன்றவரைக்கும் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் எனலாம்.
சிவாவின் சற்றே பிற்போக்கான ஆண் குணம், சக்தியின் போலி முற்போக்கும், முதிர்ச்சியின்மையும் கொண்ட குண அமைப்பு, தனிமையில் வாடும் வக்கீலாக விஜே விக்னேஷ், அவரது உதவியாளரான ஜென்சன் திவாகர், விக்னேஷின் மனைவியாக ஷீலா, ஓரிரு காட்சிகளில் வந்தாலும் சிவாவின் அம்மா, சக்தியின் அப்பா என கேரக்டர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் படம் நம் மனதில் நின்றுவிடுகிறது.
இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரம் படம் தொய்வடைகிறது. விக்னேஷும், ஷீலாவும் கோர்ட்டில் பெரிதாக மோதிக்கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தால், அப்படி எதுவும் நடக்காதது ஏமாற்றம். அந்த ஜட்ஜ், விக்னேஷைப் பார்த்துக் கேட்கும், ‘என்னய்யா வந்துட்டு வந்துட்டுப் போற, ஒண்ணும் பண்ண மாட்டேங்கிற’ என்ற டயலாக்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது. தொய்வான இடங்களைக் கவனித்து பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். அவை படத்தை இன்னும் தொய்வடைய வைக்கின்றன.
முதல் தடவையாக விக்னேஷ் ஒரு படத்தில் ‘நடித்திருக்கிறார்’ என்று புரமோஷனில் சொன்னார்கள், அது உண்மைதான். அவரது வழக்கமான எரிச்சலூட்டும் நகைச்சுவை எதுவுமில்லாமல், உருப்படியான ஒரு கேரக்டரை எடுத்துக்கொண்டு சிறப்பாகச் செய்திருக்கிறார். பட்த்தில் ரியோவுக்கு அடுத்து இரண்டாம் ஹீரோ என்றே சொல்லலாம். குறிப்பாக மகளோடு விடியோ காலில் பேசும் இறுதிக் காட்சியில் நெகிழவைத்துவிட்டார். நிச்சயம் பார்க்கலாம்!