சபாஷ்! நடிகர்கள் என்றால் இவர்களைப் போல இருக்கவேண்டும்!

பாரதியாக தமிழர்களிடத்தில் அறிமுகமான நடிகர் , சமூக அக்கறையுடன் மரங்களை வளர்த்து வருகிறார்.
ஷியாஜி ஷிண்டே
ஷியாஜி ஷிண்டே
Published on

அவ்வப்போது சில மாராட்டிய நடிகர்கள் தமிழ்ப்படங்களில் தலை காட்டுவார்கள். அவர்களில், 2000ம் ஆண்டில் பாரதியாகவே தமிழர்களிடத்தில் அறிமுகமான ஷியாஜி ஷின்டே, வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் முக்கியமானவர்கள். மராட்டிய படங்கள் சத்தமே இல்லாமல் சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கும் பல குறைகளை வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். விருதுகளையும் அள்ளிச் செல்லும். மராட்டியப் படங்கள் போலலே, மராட்டிய நடிகர்களும் எப்போதுமே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். அதற்கு, மேற்கண்ட இரு நடிகர்களுமே நல்ல உதாரணமாக சொல்லலாம்.

நடிகர் நானா படேகர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், வறட்சி நிறைந்த மராத்வாடா பகுதியை சேர்ந்தவர். இந்த மராத்வாடாவை தற்கொலை பூமி என்றே கூறலாம். இந்தியாவிலேயே அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்யும் பகுதி இது. நாக்பூர், லத்தூர், நன்டட், அவுரங்கபாத் போன்ற நகரங்கள் மராத்வாடாவின் அடையாளங்கள்.

இங்கு, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பத்தை காப்பாற்றவே, நடிகர் நானா படேகர் 'நாம் ' என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் சேகரிக்கப்படும் பணத்தை விவசாயிகளின் நலனுக்காகவே நானா படேகர் செலவழிக்கிறார். "தற்கொலை செய்து கொள்வதற்கு முன், நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று பகிரங்காமாகவே நானா படேகர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீர் நிலைகளை காப்பது ,விவசாயிகளுக்கு உதவுவது, கல்விக்குக் கைகொடுப்பது, ஏழை பெண்களின் திருமணத்துக்கு உதவுவது, மக்களின் உடல் நலனைக் காக்க உறுதுணையாக நிற்பது, கிராமங்களை செழிப்படைய செய்வது, கணவரை இழந்த பெண்கள் எஞ்சியுள்ள வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உறுதுணையாக நிற்பது , பேரிடர் காலத்தில் மக்களுக்குக் கை கொடுப்பது போன்ற பணிகளில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது.

இந்த நானா படேகர் வேறு யாருமல்ல. கடந்த 2008ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில்,வெளியான "பொம்மலாட்டம்" படத்தில்தான் தமிழில் முதன் முதலாக அறிமுகமானார். இந்தப் படத்தில் தமிழ் இயக்குநராக நடித்திருப்பார். ஒரு பக்கா தமிழ் பட இயக்குநர் எப்படி இருப்பார், அவரின் நடத்தை எப்படியிருக்கும் என்பதைக் கண்கூடாக வெளிப்படுத்தியிருப்பார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின், பா.ரஞ்சித்தின்' காலா' படத்தில் வில்லனாக நானா படேகர் நடித்தார்.

விவசாயி மனைவிக்கு ஆறுதல் கூறும் நானா படேகர்
விவசாயி மனைவிக்கு ஆறுதல் கூறும் நானா படேகர்

அடுத்து , சுதந்திர தாகம் மிகுந்த பாரதியாக நம்மிடத்தில் சினிமாவில் தோன்றியவர்தான் ஷியாஜி ஷிண்டே. பாரதி போன்ற முக அமைப்புள்ளதால் இவர் பாரதியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அறிமுகமானார். அந்தஒ படத்தில் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார். பின்னர், 'தூள்' படத்தில் வில்லனாக நடிப்பில் கலக்கியிருப்பார்.

மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ‘சஹ்யாத்ரி தேவ்ராய்’ என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, மகாராஷ்டிர மாநிலம் முழுக்க மரக்கன்றுகள் நடுவதை லட்சியமாகக் கொண்டுள்ளார். இதற்காக, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர்களை ஒருங்கிணைத்து மாபெரும் இயக்கத்தையும் நடத்தி வருகிறார்.

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திலுள்ள வெளிகாமதி என்ற கிராமம்தான் ஷியாஜியின் சொந்த ஊர். 13 வயதில் இருந்து தனது கிராமத்தில் மரங்களை நடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர், மும்பைக்குக் குடிபெயர்ந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிராமத்துக்கு வந்து, தான் வளர்க்கும் மரங்களைப் பார்த்து மகிழ்வார். சினிமாவில் பிசியான நேரத்தில், சுற்றுச்சூழலைக் காக்க கடந்த 2015ம் ஆண்டு அவர் உருவாக்கிய அமைப்புதான் Sahyadri Devra. பொட்டல் வெளிகளை பசுமையாக மாற்றுவதுதான் இந்த அறக்கட்டளையின் லட்சியமே. அந்த வகையில், இந்த அறக்கட்டளை இதுவரை 6.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முற்றிலும் பராமரித்துள்ளது. மரக்கன்றுகளை நடுவதை விட, அவற்றை பராமரிப்பதில்தான் சவால் காத்திருக்கிறது. அந்தவகையில், தாங்கள் நடும் ஒரு மரக்கன்றுவை கூட கருகாமல் பார்த்துக் கொள்கிறது இந்த அமைப்பு.

நடிகர்களில் பலர் பேசுகிறார்கள். சிலர் செயல்பாட்டில் காட்டுகிறார்கள். இவர்களிருவரும் உதாரணமாக இருக்கும் இரண்டாம் ரகம்!

Puthuyugam
www.puthuyugam.com