சினிமாவில் ஒருபுறம், விளம்பரங்களில் மறுபுறம் என பாலிவுட், கோலிவுட் நடிகர், நடிகைகள் கோடிகளில் கல்லாக்கட்டுவது வழக்கமானதுதான். அவர்களில் ஒரு சிலர் தாங்கள் கொண்ட கொள்கை காரணமாக விளம்பரங்களில் தோன்றாமல் இருப்பது உண்டு. அதில், நடிகர் ராஜ்கிரணை ஒரு விஷயத்தில் குறிப்பிட்டு சொல்லலாம். வேட்டி என்றாலே ராஜ்கிரண் மிகவும் பிரபலம். தனது படங்களில் வேட்டியில்தான் பெரும்பாலும் நடித்திருப்பார். இதனால், அவரை தங்களது வேட்டி விளம்பரத்தில் நடிக்க வைக்க பிரபல வேட்டி உற்பத்தி நிறுவனம் ஒப்பந்தம் செய்ய முயன்றது. அதற்காக, ஒன்றரை கோடி வரை சம்பளம் கொடுக்கவும் முன்வந்தது.
இந்தகாலக்கட்டத்தில் ராஜ்கிரணும் கடும் நிதி நெருக்கடியில்தான் இருந்தார். ஆனாலும், பணத்துக்கு ஆசைப்படவில்லை. நடிகர் ராஜ்கிரண் வேட்டி விளம்பரத்தில் நடித்த உறுதியாக மறுத்து விட்டார். அதற்கு, ராஜ்கிரண் சொன்ன காரணம் மக்களை நெகிழ வைத்தது. 'வேட்டியை சாதாரண மக்கள்தான் உடுத்துவார்கள்.எனக்கே, ஒன்றரை கோடி சம்பளம் தந்தால், அந்த பணத்தையும் அந்த ஏழை மக்களிடம் இருந்துதானே வசூலிப்பார்கள். அதனால்தான், நான் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்தேன் 'என்று விளக்கம் அளித்திருந்தார்.
ராஜ்கிரண் மட்டுமல்ல, சில நடிகைகளும் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளனர். அவர்களில் லாவண்யா திரிபாதியும் ஒருவர். சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. தற்போது, இவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார்.
இவரிடத்தில், மதுபான நிறுவனம் ஒன்று, விளம்பரத்தில் நடிக்க பெரிய தொகை சம்பளம் தருவதாகத் கூறியது. ஆனால் அதை லாவண்யா ஏற்றுக்கொள்ளவில்லை. 'மதுபான விளம்பரங்களில் நடித்து இளைய சமுதாயத்தை கெடுக்க விரும்பவில்லை' என்று அவர் விளக்கமளித்திருந்தார்.
ராஜ்கிரண், லாவண்யாவின் கொள்கைகள் இப்படி என்றால், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் நிலை வேறுபட்டது. பாலிவுட் என்றாலே ஷாருக்கான் என்றுதான் வெளிநாட்டில் பலரும் கருதுவார்கள். அந்தளவுக்கு உலகம் முழுக்க அவர் பாப்புலர். தற்போது, இந்த ஷாருக்கானைத்தான் பான்மசலா விளம்பரத்தில் நடிப்பதற்காக பிரபல யூடியூபர் துருவ் ரதி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக துருவ் ரதி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு கூறியிருப்பதாவது, '' பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு 12,400 கோடி என்கிறார்கள்.ஆனாலும், மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பான்மசாலா போன்றவற்றின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், விளம்பரங்களில் நடிக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் பான் மசாலா விளம்பரங்களில் அவர் நடிக்கிறார். இதற்காக, ஆண்டுக்கு 20 கோடி சம்பளம் வாங்குகிறார். கடந்த 11 ஆண்டுகளில் பான் மசாலா விளம்பரங்களில் நடித்து மட்டும் 200 கோடி சம்பாதித்துள்ளார். இவ்வளவு பெரிய பணக்கார நடிகர், இது போன்ற விளம்பரங்களில் நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? உங்களையே நீங்கள் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள். இவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. உங்களைப் போன்ற பெரிய நடிகர்கள் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்திருந்தால், அது இளைய சமூகத்திடம் பாசிடிவான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமே?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வகையில் தமிழ் முன்னணி நடிகர்கள் பரவாயில்லை எனலாம். குளிர்பான விளம்பரங்களில் ஆரம்ப காலங்களில் நடித்திருந்தாலும் பிறகு யாரும் அப்படியான விளம்பரங்களில்கூட வருவதில்லை. சத்யராஜ் ஈமு விளம்பரத்தில் நடித்து சர்ச்சை ஆனது. பிறகு அவர் அதுபோன்ற சர்ச்சைக்குரிய விளம்பரங்களில் நடிப்பதில்லை. சரத்குமார் போன்ற ஒரு சிலர் ரம்மி விளம்பரங்களில் வந்ததற்கு ரசிகர்களே பெரும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர். ஆனால் பாலிவுட்டில் பெரிய நடிகர்கள் பலரும் குட்கா, மதுமான விளம்பரங்களில் நடிக்கின்றனர். அதற்கு அவர்களும் சங்கடப்படுவதில்லை; அங்கே ரசிகர்களின் எதிர்ப்பும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. மதுபான விளம்பரங்கள், 'புத்திசாலித்தனமாக' அதே பெயருள்ள தண்ணீருக்காக எடுத்து வெளியிட்டாலும் எடுத்தவர்வர்கள், நடித்தவர்கள், பார்ப்பவர்கள் என்று எல்லாருக்குமே அது எதற்கான விளம்பரம் என்று தெரியும்.
இங்கே கார்த்தி, சூர்யா, பார்த்திபன் போன்றோர் நகைக்கடை, முறுக்குக் கம்பிகள் என்று மக்களுக்குத் தீங்கில்லாத விளம்பரங்களோடு நிறுத்திக்கொள்கிறார்கள். கமல் துணிக்கடை விளம்பரங்கள் போன்ற ஒரு சிலவற்றில்தான் வந்தார். அஜித், ரஜினி எல்லாம் விளம்பரங்களில் நடிப்பதே இல்லை.
துருவ் ரதி , ஷாருக்கானை விமர்சித்துள்ள நிலையில், நடிகர் ஷாருக்கான் ஒரு நிகழ்ச்சி ஒன்றில்,' எனது சம்பாத்தியத்தை தடுக்காதீர்கள் ' என்று பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.