ஒரு துள்ளலான இந்தக்கால இளைஞன் ஒருவன், தன்னைக் காதலிக்கும் மாமன் பெண்ணை முதலில் மறுக்கிறான். மீண்டும் அவள் மீது காதல் வந்து தேடுகையில் அவள் இன்னொருவனைக் காதலிப்பது தெரியவருகிறது. அதன் பின் நடந்தவை என்ன என்பது கதை!
அதன்பின் என்னென்னவெல்லாமோ நடக்கிறது. கதை, திரைக்கதையாக சில பிரச்சினைகளையும், சில நல்ல விசயங்களையும் கொண்டிருக்கிறது ட்யூட் படம்.
முதல் சிக்கல், மிக முக்கியமான பாத்திரமாக வரும் ஹீரோயின் மமிதாவின் காதலன். அவர்களைச் சேர்த்து வைப்பதுதான் முழு படத்தின் கதையுமே என்றாகிவிட்ட பின்னர், அந்தக் காதலன் மீது நமக்கு ஈடுபாடு வருவதற்கான காட்சிகள் எதுவுமே இல்லை. இது ஒரு பெரிய மைனஸ். போலவே, மமிதாவின் தந்தையாக மிக சீரியஸான வில்லனாக வரும் சரத்குமாரின் திடீர் மனமாற்றம்.
துள்ளல், சேட்டை, அலட்சியம், கொஞ்சமாய் டாக்சிக்தனம், பெண்களை அலட்சியமாய் நடத்துவது இதெல்லாம்தான் இன்றைய இளைஞனின் குணவார்ப்பு என பிரதீப் நினைக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவதான இதிலும் அதையேதான் செய்திருக்கிறார். சில பல இடங்களில் எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது.
இருப்பினும் நாம் அதையே நல்ல விசயமாக எடுத்துக்கொள்ளவும் வழியிருக்கிறது. அப்படியான இளைஞர் கூட்டத்தின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொண்டு, அவர்களுக்கே சில நல்ல விசயங்களைச் சொல்ல முயல்கிறார் பிரதீப். முந்தைய படமான டிராகனில் போலிப் பித்தலாட்டங்கள் நம்மை உயர்த்தாது, நேர்மையின், அறத்தின் சுவைதான் உண்மையானது என்பதை வலியுறுத்தினார். இந்தப் படத்தில், காதலியை மதிக்கச் சொல்கிறார். காதலில் பிரிவுகள் பரவாயில்லை, இயல்புதான் என்கிறார். பிரிந்த பின்பும் மற்றவரின் மீது இருக்கவேண்டிய பரஸ்பர மரியாதையின் அவசியத்தைச் சொல்கிறார். நீங்களோ, நானோ, மூத்த நடிகரோ, இயக்குநரோ சொன்னால் கேட்காத, சிந்திக்காத இளைஞன், அவனைப் போலவே டாக்சிக்காகத் தோற்றமளிக்கும் பிரதீப் சொன்னால் கேட்கக்கூடும்! இதெல்லாம் அவர்களின் காதுகளில் விழுந்தால் சரிதான்!
இதன் கூடவே வெளியாகியிருக்கிறது, பைசன் எனும் சாதிய அரசியல் படம். இந்தப்படமும் சாதியைப் பேசுகிறது, ஆணவக்கொலையைப் பற்றி பேசுகிறது. ஆனால், இதன் மொழி வேறு மாதிரி இருக்கிறது. சற்று முன்னே பின்னே இருந்தாலும் ஆரவாரமான படங்களில், இளைஞர்களுக்குப் பிடித்த மொழியில் அரசியல் பேசப்படுவதும் அவசியம்தான்! மேலும் இந்தப் படத்தில் தாலி, கல்யாணம் போன்ற சம்பிரதாயங்கள் அனைத்தையும் நோக்கி கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றன. எத்தனை எத்தனையோ வருடங்களாக சமூகத்திலும், சினிமாக்களிலும் சில விசயங்கள் கேள்விக் கேட்கப்படாதது மட்டுமில்லாமல், பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அதையெல்லாம் இந்தப் படம் இடது கையால் டீல் செய்வதை முக்கியமான விசயமாகப் பார்க்கிறேன்!
மமிதா, பிரதீப் (சேட்டைகளைத் தவிர்த்துவிட்டு), சரத்குமார், ரோகிணி என அனைவரின் பங்களிப்பும் சிறப்பு. இசை பரவாயில்லை ரகம்! வசனங்கள் மிகச் சிறப்பு. திருமணமாகி நிற்கும் மகனை வாழ்த்தும் போது, ‘மனைவிக்கு முதலில் மதிப்புக்கொடு’ என அறிவுரை சொல்கிறார் அம்மா ரோகிணி. ஓரிடத்தில் ‘நட்புதான் காதல்’ என்கிறான் நண்பன். இன்னும் காதலைப் பற்றி, சாதியைப் பற்றி வரும் வசனங்கள் எல்லாம் நன்றாக இருந்தன! இது மாதிரி படத்துக்கெல்லாம் சண்டையெல்லாம் அவசியமில்லாத ஒன்று. பிரதீப் ரங்கநாதனுக்கு லவ் டுடே, டிராகன் படங்கள் கொடுத்த அதே சூப்பர் ஹிட்டை, Dude-ம் தருமா என்றால் கொஞ்சம் ஐயம்தான். ஆனால்... புதிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கவனிக்க வைத்திருக்கிறார்!