தியேட்டர்களின் நாயகன் : நடிகை கனகாவின் கொள்ளுத் தாத்தா!

நடிகை கனகா தமிழிலிலும் மலையாளத்தில் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் அவர் , அறிமுகமான கரகாட்டக்காரன் ஒரு வருடம் ஓடியது. அதேபோல, மலையாளத்தில் அவர் நடித்த படம் ஒன்று 400 நாட்களை கடந்து ஓடியுள்ளது.
கெயிட்டி தியேட்டர், ரகுபதி வெங்கையா , நடிகை கனகா
Welco
Published on

நடிகை கனகாவை பற்றி இப்போது, வேறுவிதமாக பேச்சு அடிபடலாம். தனிமையில் வாடுகிறார். யாருடனும் பேசுவதில்லை. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். அவ்வளவு ஏன்? தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கங்கை அமரனைக் கூட சந்திக்க மறுத்துவிட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

தமிழ்சினிமாவில் பல நடிகைகளுக்கு சிறப்பான தொடக்கம் அமைந்திருக்காது. முதல்படம் 'பிளாப்' ஆகியிருக்கலாம். அல்லது சுமாராக ஓடியிருக்கலாம். பின்னர், படிப்படியாக முன்னேறி இன்டஸ்ட்ரியில் நிலையான இடத்தை பிடித்திருப்பார்கள். ஆனால், நடிகை கனகா கதை முற்றிலும் வேறுபட்டது. அவரின், முதல்படமே அப்போதைய வசூல் மன்னன் ராமராஜனுடன்தான். அறிமுகமான முதல் படமான கரகாட்டக்காரன் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. மதுரையில் ஒரு ஆண்டைக் கடந்து ஓடியது. உடனடியாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க அதிசய பிறவி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படி, கனகாவின் தமிழ் சினிமா வாழ்க்கை அட்டகாசமாக வளரத் தொடங்கியது.

தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கனகா நடித்த படங்கள் சக்கை போடு போட்டன. சித்திக்லால் இயக்கத்தில் 1991ம் ஆண்டு கனகா நடிப்பில் வெளியான காட்ஃபாதர் படம் 400 நாட்களை கடந்து ஓடியது. தற்போது வரை, மலையாளத்தில் அதிக நாட்கள் ஓடிய சினிமா இதுதான்.

அடுத்து மோகன்லாலுடன் இணைந்து நடித்த வியட்நாம் காலனியும் சக்கை போடு போட்டது. தொடர்ந்து, மம்முட்டியுடன் இணைந்து கிளிப்பேச்சு கேட்கவா என்ற தமிழ்ப் படத்திலும் கனகா நடித்தார். இப்படி, தமிழ், மலையாள சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த கனாவின் குடும்பமே சினிமா குடும்பம்தான். அவரின் தாயாரான நடிகை தேவிகா தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

தேவிகா, கனகாவை தெரியும். ஆனால், கனகாவின் கொள்ளு தாத்தா ரகுபதி வெங்கையா (நடிகை தேவிகாவின் தந்தை பெயர் கஜபதி நாயுடு ) தமிழ் சினிமாதுறைக்கு செய்ய அளப்பரிய காரியங்கள் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். கெயிட்டி ... கெயிட்டி என்ற வார்த்தையை சென்னை மக்களை உச்சரிக்க வைத்தவரே அவர்தான்.

நடிகை தேவிகா
நடிகை தேவிகா

ஆந்திராவில் மசூலிப்பட்டினத்தில் பிறந்த ரகுபதி வெங்கையா மவுனபடக் காலத்தில் சென்னைக்கு குடி பெயர்ந்தார். ஊர் ஊராக சென்று புரொஜக்டர் கொண்டு மவுனப்படைங்களை திரையிட்டு வந்தார். அவருக்குள் இருந்தே ஒரே லட்சியம். வெளிநாடுகளில் இருப்பது போல சென்னையில் சினிமாத் தியேட்டரை உருவாக்க வேண்டுமென்பதுதான். இந்த காலக்கட்டத்தில் 1911ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாடக கூடம் ஒன்றும் மற்றும் லிரிக் என்ற திரையரங்கமும் ஒரே இடத்தில் செயல்பட்டன. 1913ம் ஆண்டில் வார்விக் மேஜர் நடத்தி வந்த எலக்ட்ரிக் பயோஸ்கோப் என்ற திரையங்கமும் இயங்கியது. ஆனால், இந்தியர்களால் கட்டப்பட்ட தியேட்டர்கள் சென்னையில் இல்லை.

இதனால், ரகுபதி வெங்கையா, தியேட்டர் கட்டுவதற்காக பணச்சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். தான் திரையிடும் படங்களில் புதிய தொழில்நுட்பங்பளை புகுத்தத் தொடங்கினார்.

பேசும் படங்கள் வருவதற்கு முன்னரே, திரைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த க்ரோனோ மெகாபோனிலிருந்து திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கையில், அதற்கு ஏற்ற வகையில், வசனங்களை பேசும் தொழில்நுட்பத்தை புகுத்தினார். சென்னையில் , தற்போது அண்ணாமலை மன்றம் அமைந்துள்ள இடத்தில் டெண்ட் தியேட்டரில் இது போன்ற படங்களை ரகுபதி வெங்கையா திரையிட்டார். இது, பேசும் படங்களை பார்ப்பது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்தது. இதனால், ரகுபதி வெங்கையா படங்களை திரையிடும் இடங்களில் கூட்டம் அலை மோதியது. இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்றும் படங்களை திரையிட்டுப் பணம் சேர்த்தார்.

பின்னர், தான் திரட்டிய பணத்தை கொண்டு சென்னையில் 1914ம் ஆண்டு அவர் கட்டிய முதல் தியேட்டர்தான் கெயிட்டி. இந்தியர் ஒருவரால் சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டரும் இதுதான். அந்தக் காலக்கட்டத்தில் சிம்லாவில் இயங்கி வந்த கெயிட்டி தியேட்டரின் மேல் இருந்த ஈர்ப்பால், தான் கட்டிய முதல் தியேட்டருக்கு இந்தப் பெயரை ரகுபதி வெங்கையா சூட்டினார். தொடர்ந்து, மின்ட் சாலையில் கிரவுன் தியேட்டரையும் புரசைவாக்கத்தில் குளோப் தியேட்டரையும் கட்டி மிகப் பெரிய தியேட்டர் அதிபராக வலம் வந்தார்.

ரகுபதி வெங்கையாவின் முயற்சியை பார்த்த பின்னரே, இந்தியர்கள் பலரும் சென்னையில் தியேட்டர் பிசினசில் ஈடுபட தொடங்கினர் என்றால், அது மிகையல்ல.

Puthuyugam
www.puthuyugam.com